Last Updated : 02 Nov, 2021 03:09 AM

Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM

கதைப்போமா அறிவியல் 7: பயம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

நோபல் பரிசுகளின் அறிவிப்புகளுடன் தொடங்கிய அக்டோபர் மாதம் ஹாலோவீன் விழாவுடன் நிறைவுக்கு வந்துவிட்டது. ஆண்டு தோறும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் இந்த விழாவின் முக்கிய கரு - பயம் காட்டுவது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் விசித்திரமாக உடையணிந்து வலம் வருவது ஒருபுறமிருந்தாலும், எலும்புக்கூடுகள், ரத்தம் தோய்ந்த துணிகள், பாழடைந்த வீட்டிலிருக்கும் சிலந்தி வலைகள் எனப் பயத்தை கொண்டு வரும் அலங்காரங்கள் ஆக்ரமிக்கும்.

வீடு வீடாக செல்லும் சிறார்கள், கதவைத் திறப்பவர்களிடம் “தந்திரம் வேண்டுமா, உபசாரம் செய்கிறாயா?” (Trick or Treat) என கேட்க, “தந்திரம்" என பதில் சொன்னால், பயத்தை வரவழைக்கும் எதையாவது செய்து காட்டவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அதை ரசித்து இனிப்புகள் கொடுக்க வேண்டும் என்பது மரபு.

ஹாலோவீனை விட்டுவிட்டு யூடியூபினுள் நுழையலாம். ‘Just for laughs’ என்ற பிரபல யூடியூப் சேனலை நீங்கள் அறிந்திருக்கலாம். கேமராக்களை ஒளித்துவைத்துவிட்டு, மக்கள் எதிர்பாராத விதத்தில் குறும்புகள் செய்து அவர்களது எதிர்வினைகளை பதிவுசெய்யும் கனடா நாட்டு அலைவரிசை அது. எதிர்பாராமல் ஏதாவது நிகழ்கையில், பயம் கவ்விய அலறல் என்பது உடனடி எதிர்வினை என்றாலும், அதைத் தொடர்ந்து புன்னகை படர்வதை பயம் கண்டவர்களின் முகத்தில் பார்க்கமுடியும்.

யூடியூபிலிருந்து வெளியே வந்து திரையரங்குகளுக்குள் செல்லலாம். ரொமாண்டிக், கார்ட்டூன், ஆக்‌ஷன் எனப் பல வகை திரைப்படங்கள் வந்தாலும், பயத்தை கிளறிவிடும் திகில் படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு இருக்கும். (இடைக்குறிப்பு : இறந்தவர்களை பார்க்க முடிகிற திறன் கொண்டவனாக வரும் சிறுவனைப் பற்றிய மனோஜ் ‘நைட்' சியாமளன் எழுதி, இயக்கிய ‘The Sixth Sense’ திகில் திரைப்படம் அறுநூறு மில்லியன்களுக்கு மேல் விற்று வரலாற்றில் இடம் பெற்றது.)

வலியைக் கொண்டு வந்துவிடும் என அச்சுறுத்தும் விரும்பத்தகாத உணர்ச்சி எனப் பயத்தை அகராதி வடிவில் மொழிபெயர்க்கலாம். கற்காலத்தில் இருந்து மனிதன் உட்பட அனைத்து விலங்கினத்திற்கும் பயம் என்ற அடிப்படை உணர்வு ஒருவிதத்தில் உயிர் காக்க அவசியம் என்றும் சொல்லமுடியும். மனித பய உணர்வுக்கும் சந்தை மதிப்புக்கூட உண்டு. கிடைக்காமல் போய்விடுமோ (Fear of missing out) என்ற மனித பய உணர்வை பயன்படுத்தி விளம்பர உலகம் இயங்குவது சந்தை மேலாண்மை துறையில் பணிபுரிபவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால், நவீன உலகில் எப்படி பயம் எப்படி இனம்புரியாத மகிழ்ச்சியை கொண்டுவருகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை அலசுவதற்கு முன்னால், பயத்தின் அடிப்படை அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும். ‘தெனாலி’ திரைப்படத்தில் எல்லாவற்றையும் கண்டு பயப்படும் மனிதராக கமலின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். “எல்லாம் சிவமயம் சிலருக்கு; எனக்கு எல்லாம் பயமயம்" என தொடங்கி காடு, நாடு, கூடு, குளம், நண்டு, பூச்செண்டு என தனது பயங்களை அடுக்கிக் கொண்டே போவார் அவர். வளர்ந்துவிட்ட ஒருவருக்கு இப்படி பயங்கள் எப்படி வந்திருக்கும்? பெரும்பாலான பயங்கள் நாம் கற்றுக் கொண்டதிலிருந்து வந்தவையே.

பெற்றோரும், வளர்ந்த சூழலும் எதற்கு பயப்பட வேண்டும் என்பதைச் சொல்லித் தருவதில் இருந்து நாம் பய உணர்வை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், இயற்கையில் பாம்பு, பூரான் போன்றவற்றைப் பற்றிய பயம் வருவதற்கு நம் மரபணுக்களின் வடிவமைப்பு காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். விஷப்பாம்புகளால் தீண்டப்பட்டு பாதிக்கப்பட்ட மனித இனம், பாம்பு வடிவம் என்பதையே பயம் என்ற உணர்வின் மூலம் தவிர்க்கும்படி மரபணுவில் எழுதிவைத்துவிட்டது.

பய உணர்வு நமக்குள் தோன்றுகிறது என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியும் என்றாலும், எங்கே குறிப்பாக அது தோன்றுகிறது என்ற கேள்வி எழலாம். அது நடப்பது - மூளையில் அமிக்டலா என்ற பகுதியில். மூளையின் நடுப்பகுதியில் இருக்கும் இந்தப் பகுதிதான் உணர்வுகளைப் பதம் பிரித்து அடையாளம் கொண்டு பணியைச் செய்கிறது. தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளும் திறன் அமிக்டலாவுக்கு இல்லை.

உதாரணமாக, வெளிச்சம் குறைவான மாலை நேரத்தில் தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்; உங்கள் முன்னே பாம்பு போல ஏதோ அசைகிறது. இந்த வடிவத்தைக் கண்கள் கண்டு, நியூரான்கள் மூலம் அமிக்டலாவிற்கு தெரிவிக்க, இது என்ன வடிவமாக இருக்கும் என்பதைக் கண்டறிய, நியூரான்களின் வழி வந்த சமிக்ஞைகளை தனக்கு அருகில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் பகுதிக்கு அனுப்ப, அது வடிவத்தை அலசிப் பார்த்துவிட்டு “இது பாம்புடா!” என்ற பதிலை அமிக்டலாவிற்கு திருப்பி அனுப்புகிறது. இது வந்ததும், அமிக்டலா இரண்டு சாத்தியமான விளைவுகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கிறது. ஒன்று, சண்டையிடும் இரண்டு, ஓடிவிடு (Flight or fight response). நீங்கள் பாம்பை மிதித்துவிடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதற்குப் பின்னிருக்கும் சூத்திரதாரி அமிக்டலாவே.

மேற்படி பாம்பு விஷமற்றதாக இருக்கலாம், ஏன், கயிறு ஒன்று காற்றில் ஆடியதன் மூலம் பாம்பு போல தோற்றமளித்திருக்கலாம். இது போன்ற தகவல்கள் கற்று அறியப்பட்டு ஹிப்போகாம்பஸில் பதிந்து வைக்கப்பட்டால், வரும் காலங்களில் உங்களது அமிக்டலா அதற்கு தகுந்தது போல உடலை இயக்கலாம். அதுவரை ‘Flight or fight’ மட்டுமே அமிக்டலாவுக்குத் தெரிந்தது.

சரி, அர்த்தமேயில்லாத பய உணர்வுகளை எப்படி நீக்குவது ? fMRI என்ற கருவியின் உதவியுடன் எவ்வளவு பயம் அமிக்டலாவுக்குள் ஏற்படுகிறது என்பதை அளந்துபார்த்துவிடும் வசதி வந்துவிட்டது. உதாரணமாக, சிலந்தியைக் கண்டு பயம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து சிலந்தி வகைகளைப் பார்த்தால், ஏன், சிலந்தி வடிவத்தில் இருக்கும் பொம்மையையோ, படத்தையே பார்த்தால்கூட வரும் பயத்தை அளந்து பார்த்தபின்னர், மேற்கண்ட பய ஆசாமிக்கு ‘Exposure Therapy’ எனப்படும் வெளிப்படுத்தும் சிகிச்சை கொடுக்கலாம்.

சிலந்தி வகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திரைவடிவில் காட்டிவிட்டு, பின்னர் கண்ணாடி பேழைக்குள் வைத்திருக்கும் சிலந்திகளைக் காட்டிவிட்டு, அதற்கடுத்து சிலந்தியை மற்றவர்கள் தொட வைத்து அதை பார்க்கவைப்பது எனப் படிப்படியாக சிலந்தி பற்றிய பயம் இருக்கும் அமிக்டலாவின் பகுதியை மழுங்கடிக்கலாம். ‘Cognitive Behavioral Therapy’ எனப்படும் இந்தச் சிகிச்சைக்கு ‘Augmented Reality’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

சரி, திகில் அளிக்கும் பயம் எப்படி மகிழ்ச்சி உணர்வை கொண்டு வருகிறது? இந்த துறையில் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்பவர்களின் தீர்க்கமான முடிவு, டோபமீன். மனிதன் உட்பட அனைத்து விலங்கினங்களும் வெகுமதி சார்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்துபவையே. உடல் இயங்க கலோரிகள் தேவை என்ற நிலையை “பசி" என்கிறோம். அதை ஆற்ற உணவு உள்சென்றதும், இந்த வெகுமதியை மூளைக்கு தெரிவிக்கும் வேதியியல் தூதுவன் இந்த டோபமீன். இன்பத்தை எப்படி உணர்கிறோம் என்பதை வரையறுப்பது டோபமீன் அளவே.

திடீரென திகிலடைந்து பயம் ஆட்கொண்டு முடிந்ததும், டோபமீன் சுரந்து மூளைக்குள் மகிழ்ச்சி உணர்வை அளிக்கிறது. இதனால்தான், மலையேறுவது, ஆழ்கடலுக்குள் நீந்துவது போன்ற செயல்களைச் செய்பவர்கள் அவற்றை மீண்டும் மீண்டும் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். டோபமீனால் இன்பத்தை உணர்கிறோம் என்பதால் அதனால் வேறு சில சிக்கல்களும் உண்டு. அந்தக் சிக்கல்களின் அறிவியலை வரும் வாரங்களில் கதைக்கலாம்.

தொடர் பற்றிய பின்னூட்டங்களையும், எந்த அறிவியல் அம்சங்களை அலசலாம் என்பதையும் https://www.facebook.com/LetsTalkSTEM என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவியுங்கள். +1 (628) 240-4194 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x