

இந்த நூற்றாண்டு உயிரியலின் நூற்றாண்டு என்று சென்ற வாரம் சொன்னதிற்கு சாட்சியாக, இந்த வாரம் மிகப்பெரிய மைல் கல்லைத் தொட்டிருக்கிறது மனித உடற்கூறியல் அறிவியல். ஆண்டாண்டு காலமாக இந்தத் துறையின் ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்து வரும் ஆர்வம், மற்ற விலங்குகளில் இருந்து உடல் உறுப்புகளை மனித உடலில் பொருத்தி இயங்க வைக்க முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதுதாம்.
மாற்றின உடல் உறுப்பு அறுவை சிகிச்சை என நீளமாக மொழிபெயர்க்க வேண்டிய ‘Xenotransplantation’ என்ற இந்தப் பிரிவில் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்துவருகின்றன. முதலில் இதன் தேவை என்ன என்பதை பார்த்துவிடலாம்.
கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் என உடலின் பல உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்தவர்கள், எதிர்பாராதவிதத்தில் இறந்து போகையில் அவர்களது உடலில் இருந்து உறுப்புகளை மேற்படி அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் முறை பல நாடுகளில் உள்ளது.
உதாரணமாக, பழுதான நுரையீரல் கொண்ட ஒருவரை எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பழுதுக்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். பிறப்பில் இருந்தே ஆஸ்துமா நோய், வளரும்போது வரும் புற்றுநோய் போன்றவை காரணமாக இருக்கலாம். விபத்து போன்றவற்றாலும் நுரையீரல் பாதிக்கப்படலாம். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கையாக சுவாசிக்கும் வசதிகள் செய்வது உண்டு. ஆனால், அது மட்டுமே போதாது என்ற நிலை வருகையில் நுரையீரலை மாற்றும் அவசியம் வந்துவிடுகிறது. இந்த முடிவு எடுக்கப்பட்டதும், பாதிக்கப்பட்டவர் அதற்கு தகுதியானவர்தானா என்பதை மருத்துவர்கள் குழு தீர்மானிக்கிறது.
நோய் எவ்வளவு முற்றிய நிலையில் இருக்கிறது? நுரையீரலை மாற்றும்போது அவருடைய உடல் அதை ஏற்குமா அல்லது உதறித்தள்ளுமா? புதிய நுரையீரலுடன் எத்தனை ஆண்டுகள் அவரால் வாழ முடியும் ? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் சமர்ப்பிக்கப்பட, நுரையீரலுக்கு காத்திருப்பவர்களின் பட்டியலில் அவருடைய வைக்கப்படும்.
அந்தக் கணத்தில் இருந்து நீங்கள் செய்ய வேண்டிய ஒரே செயல், பொறுமையாக காத்திருப்பது மட்டுமே. மற்றவருக்கு பொருந்தும் வகையில் ஆரோக்யமாக நுரையீரல்கள் கிடைப்பது அதன் தேவையை விட மிகவும் குறைவு என்பதால் நுரையீரலுக்காக காத்திருந்து, கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமானது.
ஒருவர் சாலை விபத்து போன்ற ஏதோ ஒன்றில் இறந்துபோகும் பட்சத்தில், அவரது உடலின் உறுப்புகள் மாற்று அறுவைக்கு பொருத்தமானவையா என்பதை விரைவில் முடிவு செய்ததும், அவரது ரத்த வகை, நுரையீரலின் அளவு, அவர் உடல் இருக்கும் இடத்தில் இருந்து நீங்கள் இருக்கும் தூரம் ஆகியவை கணக்கிடப்பட்டு, அவரது நுரையீரல் உங்களுக்கு பொருத்தலாமா என்ற முடிவு எடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் பொருந்திவரும்பட்சத்தில் பழுதான நுரையீரல் மாற்றப்பட்டு, புதிய நுரையீரலுடன் வாழக்கையைத் தொடர முடியும்.
படிப்பதற்கே மலைப்பாக இருக்கிறதுதானே ? காரணம், மேற்கண்ட ஏதாவது ஒரு படியில் தவறு நிகழந்தாலும், மாற்று நுரையீரல் கிடைக்காமல் போய்விடும். இந்த மருத்துவ முறைமையில் இருக்கும் பதட்டத்தை தவிர்க்க ஆரம்பிக்கப்பட்ட முயற்சிதான் ‘Xenotransplantation’. விலங்குகளின் உறுப்புகள் மனிதர்களுக்குப் பயன்படுவது புதிதான ஒன்றல்ல. தீ விபத்துகளில் ஆழமாக எரிந்து போய்விட்ட தோல் திசுக்கள் தானாக குணமாக நீண்ட நாட்கள் ஆகும். மேலும் ஆழமான தோல் காயம் உயிர் ஆபத்தில் கொண்டுபோய் விடும் ஆபத்து உள்ளதால், தீவிரமான சிகிச்சை அவசியம்.
இதற்குக் குளிரூட்டப்பட்ட பன்றியின் தோலை பயன்படுத்துவதுண்டு. பன்றியின் தோலில் இருக்கும் கொலாஜன் எனப்படும் புரதம், காயப்பட்ட மனிதத் தோல் மீண்டுவர உதவி செய்யும். அண்மைக் காலமாக சிலேபி கெண்டை மீன்களின் தோல் இதற்கு பயன்படுவது கண்டறியப்பட, தோல் காயங்களுக்கு அதை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால், உடலுக்குள் இருக்கும் உறுப்புகளின் மாற்று சிகிச்சைக்கு மற்றொரு விலங்கினம் பயன்படுத்தப்படுவது இதுவரை வெற்றிகரமாக செய்யப்படவில்லை.
என்ன நடந்தது ?
நியூயார்க் நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் நிலை ‘மூளை இறப்பு’ (Brain Dead) என்ற நிலைக்கு சென்றுவிட்டது. உடலின் உறுப்புகள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், மூளை மட்டும் முற்றிலும் செயல் இழந்து, அந்த நிலை மாறவே போவதில்லை என்ற நிலையே ‘மூளை இறப்பு’. இந்த நிலையை அடைந்தவர்களுக்கு மூச்சு விடுவதில் இருந்து அனைத்தும் செயற்கையாகச் செய்தாக வேண்டும்.
மேற்படி நோயாளியின் உறவினர்களின் அனுமதியுடன் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை பரிசோதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. பன்றியின் சிறுநீரகம் (kidney) அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை முறையில் பொருத்தப்பட்டு, அவரது உடல் அதை ஏற்றுக்கொள்கிறதா அல்லது ஒதுக்கித் தள்ளுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது. முதல் முறையாக விலங்கினம் ஒன்றின் சிறுநீரகம் வெற்றிகரமாக மனித உடலுக்கு மாற்றப்பட்ட மருத்துவ அதிசயம் நடத்தப்பட்டது.
இந்த மைல்கல் நிகழ்வு யதேச்சையாக நடந்துவிடவில்லை. கலிபோர்னியாவில் இருக்கும் ‘Synthetic Genomics’ என்ற நிறுவனம் 2014-ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள் என்பது புள்ளிவிபரம். இறந்து போகும் மனிதர்களிடமிருந்து உறுப்புகளை எடுத்து பயன்படுத்துவது என்பது சாத்தியமில்லை என்பதால் இந்த ஆராய்ச்சி தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தப்பட்டது. மற்றொரு விலங்கினத்தின் உறுப்பை வெற்றிகரமாக பயன்படுத்துவது எளிதல்ல.
ஆக, பன்றியை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம், அதன் உள்உறுப்புகளின் அளவு கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளின் அளவிற்கு சமமாக இருப்பதால்தான். மாட்டின் உறுப்புகள் மிகப் பெரிய அளவிலும், ஆட்டின் உறுப்புகள் மிகச் சிறிதாகவும் இருக்கும். எனவேதான் பன்றி இதற்கு பொருத்தமானது எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அளவில் சமமாக இருப்பதால், பன்றியின் சிறுநீரகம் மனிதர்களுக்கு பொருந்திவிடுமா என்றால், தீர்க்கமாக இல்லை என்ற பதிலே வரும். எந்த விலங்கினத்தின் உறுப்பும் அதில் இருந்து எடுக்கப்பட்டதும் வீக்கம் கண்டுவிடும். அதன் காரணமாக வரும் ரத்த உறைவு அதை பயன்படுத்த தடையாக நிற்கும். அதைவிட முக்கியமானது, மனித உடலில் ‘ஆல்ஃபா-1’ என்ற நொதி (Enzyme) கிடையாது. பன்றியின் உடலில் இந்த நொதி உண்டு. இந்த நொதியின் விளைவாக, பன்றியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரக செல்களில் சர்க்கரை வடிவில் அமர்ந்திருக்கும். இதைக் கண்டுகொள்ளும் உடல், மேற்படி உறுப்பு தனக்கு பொறுத்தமில்லை என முடிவு செய்து, அதை உதறித்தள்ளிவிடும்.
இதற்கு நொதி இல்லாத பன்றிகளை வளர்ப்பதுதான் தீர்வு. இதற்கு ஆபத்பாந்தவனாக வருவதுதான் ‘கிரிஸ்பர்' என்ற தொழில்நுட்பம். மரபணு வரிசையை மாற்றியமைக்கும் இந்த அற்புத தொழில்நுட்பம் ‘ஆல்ஃபா-1’ நொதி நீங்கிய பன்றியை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாற்று மரபணு பன்றி வகைகளை ‘GalSafe’ என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். இப்படி மரபணு மாற்றம் செய்வதில் இருக்கும் அறம் சார்ந்த கேள்விகளின் விடைகளையும், கிரிஸ்பர் தொழில்நுட்பத்தின் அடிப்படை மற்றும் ஆழங்களையும் இந்தத் தொடரில் விரிவாக கதைக்கப்போகிறோம்.
இத்தொடருக்கான பிரத்யேக முகநூல் பக்கம் - https://www.facebook.com/LetsTalkSTEM . அதில், தொடர் பற்றிய பின்னூட்டங்களையும், எந்த அறிவியல் அம்சங்களை அலசலாம் என்பதையும் தெரிவியுங்கள். +1 (628) 240-4194 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பலாம்.