

‘ஒய் ஃபில்ம்ஸ்’ தயாரிப்பில் யூட்யூபில் வெளியாகும் ஆன்லைன் சீரியல்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதற்கு ‘மேன்ஸ் வேர்ல்டு’ ஆன்லைன் சீரியலைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், தற்போது ‘லவ் ஷாட்ஸ்’ (Love Shots) என்ற தலைப்பில் ஆறு குறும்படங்களை வெளியிடவிருக்கிறது ‘ஒய் ஃபில்ம்ஸ்’. இந்தப் படங்களில் திலோத்தமா ஷோம், நிம்ரத் கவுர், ஷ்வேதா திரிபாதி, குல்பூஷண் கர்பந்தா, ஃபரிதா ஜலால் என பாலிவுட்டின் பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதனால், இந்த ‘லவ் ஷாட்ஸ்’ சீரிஸ் குறும்படங்களுக்காகப் பலரும் காத்திருக்கிறார்கள்.
இந்த சீரிஸின் முதல் குறும்படமான ‘தி ரோட் டிரிப்’ கடந்த செவ்வாய்க்கிழமை யூடியூப்பில் வெளியானது. நிம்ரத் கவுரும், தாஹிர் ராஜ் பசினும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ஏழு நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் படம் காதலர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் ஒரு ‘மெசேஜ்ஜை’ சொல்கிறது. அங்குர் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அர்ச்சனா(நிம்ரத்), நிகில் (தாஹிர்) என இரண்டே கதாபாத்திரங்கள்தான்.
ஒருநாள் காலை, ‘ரொமாண்டிக்’ டிரைவ் செல்லும் நிகில், அர்ச்சனாவின் கார் விபத்துக்குள்ளாகிறது. காருக்கு அருகில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருவருக்குமான இந்த உரையாடலில் காதலர்களின் ஊடல் கவித்துவத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. நடந்த விபத்துக்கு இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். இறுதியில் படம் ஒரு டிவிஸ்டுடன் முடிகிறது.
இந்த ‘லவ் ஷாட்ஸ்’ சீரிஸின் அடுத்த படம் ‘கோயி தேக் லேகா’. இந்தப் படத்தில் ஷ்வேதாவும், சாகிப் சலீமும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p>