Last Updated : 12 Oct, 2021 03:13 AM

 

Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

இளமைக் களம்: ஒரே தொடர் ஓஹோன்னு புகழ்!

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவரும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை முதன் முறையாக அதிக அளவில் இந்த ஆண்டு அள்ளிக் குவித்திருக்கின்றன இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள். நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணிகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் முத்திரை பதித்த பிறகு, இந்த விருதுகள் இந்திய வீரர், வீராங்கனைகளைத் தேடி வந்திருக்கின்றன.

சர்வதேச ஹாக்கியில் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகள் வழங்கும் நடைமுறை கடந்த 1998-ம் ஆண்டில் தொடங்கியது. முதலில் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருதுகள், பின்னர் விஸ்தரிக்கப்பட்டன. 2001 முதல் ஏற்கெனவே இருந்த பிரிவுகளோடு புதிதாகச் சிறந்த இளம் வீரர், சிறந்த இளம் வீராங்கனை என்கிற விருதுகளும் உருவாக்கப்பட்டன. பின்னர் 2014-ல் ஆடவர் அணியில் சிறந்த கோல்கீப்பர், மகளிர் அணியில் சிறந்த கோல்கீப்பர் விருதுகளும் ஏற்படுத்தப்பட்டன.

இது முதன் முறை

தொடக்கத்தில் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் என்று வழங்கப்பட்ட இந்த விருதுகள், தற்போது பலருக்கும் வழங்கப்படுகின்றன. என்றாலும், முதன்மையான வீரர்கள் தனியாக அங்கீகரிக்கப் படுவார்கள். இந்த விருதை முதன் முதலாக 2005-ல் இந்திய வீரர்கள் தேவேஷ் சவுகான், திலீப் டர்கி ஆகியோர் வென்றனர். பிரபாஜோத் சிங் (2007), ராணி ராம்பால் (2010, 2013, 2014), சர்தாரா சிங் (2012), மன்பிரீத் சிங் (2013, 2019), அக்‌ஷ்தீப் சிங் (2014, 2015), ஸ்ரீஜேஷ் ரவீந்திரன் (2014), பி.ஆர். ஸ்ரீஜேஷ் (2016), லால்ரெம்சியாமி, விவேக் பிரசாத் (2019) ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் விருதுகளை வென்றிருக்கிறார்கள். ஆனால், விருதுக்குரிய ஆறு பிரிவுகளிலும் ஒருசேர இந்தியர்கள் இதுவரை இடம் பெற்றதில்லை.

கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விருதுகள் வழங்கப்படாத நிலையில், 2020-21 ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறுபிரிவுகளிலும் முதன் முறையாக இந்திய வீரர், வீராங்கனைகள் விருதுகளைப் பெற்றிருக் கிறார்கள். அதுவும் முதன்மையான விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். ஹர்மன்பிரீத் சிங் (சிறந்த வீரர்), குர்ஜித் கவுர் (சிறந்த வீராங்கனை), விவேக் பிரசாத் (சிறந்த இளம் வீரர்), ஷர்மிளா தேவி (சிறந்த இளம் வீராங்கனை), பி.ஆர். ஸ்ரீஜேஷ் (சிறந்த ஆடவர் கோல்கீப்பர்), சவிதா பூனியா (சிறந்த மகளிர் கோல்கீப்பர்) என நம் வீரர், வீராங்கனைகள் விருதுகளை அள்ளியிருக்கிறார்கள்.

வெற்றிப் பரிசு

ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு சிறந்த வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப் பட்டனர். பல நாட்டு தேசிய ஹாக்கி சங்கங்கள், ஊடகங்கள், ரசிகர்கள், வீரர், வீராங்கனைகள் ஆகியோர் வாக்களித்து விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதுவரை எல்லாப் பிரிவுகளிலும் விருது பெற்ற ஒரே நாடாக நெதர்லாந்து மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவும் அதில் இணைந்திருக்கிறது.

பழம்பெருமைகளைக் கொண்ட நம் ஹாக்கி வரலாற்றை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர், மகளிர் அணிகள் மீட்டெடுத்தன. ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாகப் பதக்கம் வென்றது ஆடவர் அணி. முதன் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை முன்னேறி அசரடித்தது. அதற்கு அடையாளமாகத் தற்போது இந்த விருதுகளும் வீரர், வீராங்கனைகளின் சாதனையில் மகுட மாய் மாறியிருக்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x