Published : 25 Mar 2016 11:12 AM
Last Updated : 25 Mar 2016 11:12 AM

பொருள்தனைப் போற்று! 9 - இது வேற கணக்கு!

ஒரு கணக்கு. மிக எளிமையானது.

ஒரு விமானம். சென்னையில் இருந்து ஹைதராபாத் வழியாக, டெல்லிக்குச் செல்கிறது. சென்னை ‍ டெல்லி இடையே தூரம் சுமார் 2,500 கி.மீ. ஹைதராபாத் ‍- டெல்லி இடையே 1,500 கி.மீ. எனில், சென்னை - ஹைதராபாத் இடையே உள்ள தூரம் எவ்வளவு? மிகச் சரி. 2500 - 1500 = 1000 கி.மீ.

இதே கணக்குதான். சற்றே மாற்றிப் போடுவோமா?

சென்னை ‍- டெல்லி இடையே விமானக் கட்டணம் சுமார், 6,000 ரூபாய். ஹைதராபாத் ‍- டெல்லி இடையே 5000 ரூபாய். எனில், சென்னை - ஹைதராபாத் இடையே விமானக் கட்டணம் எவ்வளவு? ஊஹூம். 1000 ரூபாய் இல்லவே இல்லை. 3,000 ரூபாய்க்கும் அதிகம்.

ஏன் இப்படி? அதுதான் பொருளாதாரக் கணக்கு!

இது குறித்துப் பார்ப்பதற்கு முன்...

ஸ்க்ரூ டிரைவர், ஸ்பானர், சுத்தி, அரிவாள்... இதெல்லாம் இயந்திரங்களா இல்லையா? ‘மெஷின்ஸ்' என்பதன் கீழ் இவை எல்லாம் வருமா வராதா? இல்லை. இவை இயந்திரங்கள் அல்ல. பிறகு? கருவிகள்.

அதாவது, இவை நமக்கு நமது கரங்கள். முறையாகப் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்பே, இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நாமாகப் பயன்படுத்திப் பயன்படுத்தி, பயிற்சி பெறலாம்.

தொழிற்சாலை இயந்திரங்களை முறையாகப் பயிற்சி பெறாமல் இயக்கினால், மிக நிச்சயமாக ஆபத்துதான். அது மேற்கண்ட கருவிகளில் இல்லை.

இப்படியும் சொல்லலாம். இயந்திரங்களை சிங்கம், புலி, கரடி போன்ற காட்டுயிர்களாகவும், கருவிகளை ஆடு, மாடு, நாய் போன்ற ஊர்திரி விலங்குகளாகவும் சொல்லலாம்.

காட்டுயிர்களை உயிரியல் பூங்கா போன்றவற்றில் பராமரிக்க அரசு அனுமதி, பயிற்சியாளர்கள் தேவை. ஆனால் செல்லப் பிராணிகள் விஷயத்தில்? அக்கறையும் ஆர்வமும் போதும்.

பொருளாதாரத்துக்கு வருவோம். கருவிகளைக் கொண்டு தொழில் செய்வோர் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள். இயந்திரங்களை நிறுவி, தொழிற்சாலை நடத்துபவர்கள், முதலாளிகள்.

முன்னவர், தாமே கருவிகளைப் பயன்படுத்துபவர். பின்னவர், அடித்தட்டு மக்களைக் கருவிகளாகக் கொண்டு இயந்திரங்களை இயக்குபவர்கள். கருவிகளின் முழுப் பயனும், அவற்றைப் பயன்படுத்துவோருக்கே நேரடியாகச் சென்று சேர்கிறது. இயந்திரங்களைக் கையாள்வோருக்கு, கூலி மட்டுமே கிடைக்கிறது. அவற்றின் பயன், இயந்திரங் களின் உரிமையாளருக்குப் போகிறது.

பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள, இந்த வேறுபாட்டை மனதில் கொள்வது மிக முக்கியம். வர்க்க பேதம், வர்க்கப் போராட்டம், வர்க்க விடுதலை என்றெல்லாம் எழுதுபவர்களை, பேசுபவர்களை அரசியல், சமூகக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கிறோம். அவற்றில் பொதிந்து கிடக்கும் பொருளாதார உண்மைகளைப் புரிந்துகொள்ள இந்த வேற்றுமையைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

காந்தியப் பொருளாதாரம், கருவிகளுக்கு முன்னுரிமை தருகிறது. பன்னாட்டுப் பொருளாதாரம், இயந்திரங்களை முன்னிறுத்துகிறது. ஏழ்மையை, வறுமையை, இல்லாமையை விரட்ட முன்னது முயற்சிக்கிறது. செல்வத்தை, வளமையை, சொத்துகளைப் பெருக்க பின்னது வழிசெய்கிறது.

நினைவில் கொள்ள வேண்டிய செய்தி, பொருளாதாரப் பாடம், எந்த ஒன்றையும், வெறுத்து ஒதுக்குவது இல்லை. ஒவ்வொன்றின் இருப்புக்கும் ஒரு தேவை இருக்கிறது. அதற்கென்று நிச்சயமான பயன்பாடு இருக்கிறது. அதன் மூலம் சமூகம் மொத்தமும் எவ்வாறு முன்னேறலாம் என்பதற்கு வழிகாண்பதே பொருளாதாரத்தின் நோக்கம்.

சரி. தொழிற்சாலைக்குள் நுழைவோம். ‘கட கட'வென்று இயந்திரங்களின் இரைச்சல் கேட்கிறதா? இயந்திரங்களின் வேகத்துக்கு இணையாகத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்களா? பகல் இரவு பாகுபாடின்றி, பரபரப்பாக சுறுசுறுப்பாகப் பணிகள் நடைபெறுகின்றனவா?

இயந்திரங்களின் சக்கரச் சுழற்சியில், பலரது வாழ்க்கை மேடு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. பொருளாதாரம் அதன் முழு வீச்சில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

மனிதர்கள், இயந்திரங்கள், மூலப் பொருட்கள், வாகனங்கள், கிடங்குகள், மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு, கணக்குகள், பிணக்குகள், சண்டைகள், சமரசங்கள், போராட்டங்கள், ஒப்பந்தங்கள் என எல்லாம் கலந்த ஒரு நவீனப் போர்க்களம், தொழிற்சாலை!

ஏதோ ஒன்று தயாரிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது. தயாரிப்பதற்குச் செலவாகிறது. தயாரிப்பதை விற்பதால், செலவிட்ட தொகை திரும்பக் கிடைக்கிறது, லாபத்துடன். இதில்தான் பல லட்சக் கணக்கான வீடுகளில் அடுப்பு எரிகிறது.

தயாரிப்பு பற்றிப் பசினோம் இல்லையா? அதற்கு ஆகும் செலவுதான், ‘காஸ்ட்'. அதாவது அடக்க விலை. இதிலும் பல கிளைகள் உள்ளன.

பிரதானமாக, ‘ஆப்பரேட்டிங் காஸ்ட்', ‘ஸ்டாண்டர்ட் காஸ்ட்', ‘மார்ஜினல் காஸ்ட்'.

சென்னை ‍- ஹைதராபாத் விமானக் கட்டணம் பற்றிய கேள்விக்கான பதில்,

இந்த ‘காஸ்ட்' வகைகளில்தான் அடங்கி இருக்கிறது.

சென்னை - கோயம்பேட்டில் இருந்து விழுப்புரத்துக்குப் பேருந்துக் கட்டணம் 100 ரூபாய். வடபழனி, கிண்டியில் இருந்தும் இதே கட்டணம்தான். அப்படியானால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி, கிண்டிக்குப் போக, கட்டணம் இல்லா சேவையா?

நிச்சயமாக இல்லை. பிறகு ஏன் இந்த முரண்பாடு? விடை சொல்கிறது ‘ஆப்பரேட்டிங் காஸ்ட்'.

ஒரு வியாபாரம், ஒரு இயந்திரம், ஒரு சாதனத்தின் இருப்புக்கே சில செலவுகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. இந்தச் செலவுகளைச் செய்யவில்லை என்றால், நாளடைவில் அது முற்றிலும் செயலிழந்து, பயன்பாட்டுக்கு தகுதி அற்றதாய்ப் போகும். ஏறத்தாழ, பராமரிப்புச் செலவு என்று சொல்லலாம்.

இதற்கான ‘விலை'யை, இவற்றைப் பயன்படுத்துவோர் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதற்கும், எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதற்கும் சம்பந்தமே இல்லை.

இன்னும் தெளிவாக இப்படியும் சொல்லலாம். நாம் தருகிற இந்தக் கட்டணம்தான் அதனை உயிருடன் வைத்திருக்கிறது. அது உயிருடன் இருந்தால்தான் நாளைக்கு அந்தச் சேவை, நமக்குப் பயன்படும். அதற்காகத் தருகிற கட்டணம், நாம் பெறுகிற பயன்பாட்டை ஒட்டியது அல்ல.

இவ்வாறு, இருப்புக்காகச் செய்யப்படும் செலவுகளைக் குறிப்பிடுவதே ‘ஆப்பரேட்டிங் காஸ்ட்'. அதாவது, இருப்புக்கான அத்தியாவசியச் செலவினம்.

'ஸ்டாண்டர்ட் காஸ்ட்'? இதற்கு இவ்வளவு செலவு ஆகும் என்று உத்தேசக் கணக்கு ஒன்று வைத்திருப்போம் அல்லவா? அதுதான் 'ஸ்டாண்டர்ட் காஸ்ட்'.

உதாரணத்துக்கு, மகன்/மகளின் பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்கிறோம். இதற்கு இவ்வளவு செலவு ஆகலாம் என்று ஒரு தோராயமாக‌ நினைத்திருப்போம். அதுதான் ‘ஸ்டாண்டர்ட் காஸ்ட்'.

சீரோடும் சிறப்போடும் பிறந்த நாள் கொண்டாடி முடித்துவிட்டோம். ஆற அமர உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பார்க்கி றோம். உண்மையில் எவ்வளவுதான் செலவு செய்தோம்? இந்தத் தொகைதான், உண்மை யான காஸ்ட். அதாவது, ‘ஆக்சுவல் காஸ்ட்'.

இப்பொழுதுதான் ‘ஸ்டாண்டர்ட் காஸ்ட்' தேவைப்படுகிறது. எவ்வளவு ஆகும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தோம் (‘ஸ்டாண்டர்ட் காஸ்ட்')? உண்மையில் எவ்வளவு செய்திருக்கிறோம் (‘ஆக்சுவல் காஸ்ட்')? எங்கே எவ்வளவு அதிகம் அல்லது குறைவாகி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

‘அதெல்லாம் என்னைக்குப் பார்த்திருக்கிறோம்?' என்கிறீர்களா? பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால், நீங்கள் சொல்கிறாற் போல் இருந்துவிடலாம்தான். ஆனால், பல லட்சம் போட்டு வியாபாரம் செய்கிற போது? ‘ஸ்டாண்டர்ட் காஸ்ட்'டுக்குத் தேவை இருக்கிறதா இல்லையா?

இன்னமும் இரண்டு முக்கிய ‘காஸ்ட்'டுகள் இருக்கின்றன. ‘காஸ்ட்', பொருளாதாரத்தின் மிக நுண்ணிய அம்சம். ஆனால் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமே இல்லை.

பாருங்களேன். ‘மார்ஜினல் காஸ்ட்' பற்றிப் பேசும்போது, நீங்களே இப்படிச் சொல்லத்தான் போகிறீர்கள். ‘இதான் எனக்கு தெரியுமே!'

(வளரும்)

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x