

இட்லிக்கு வந்த சோதனை!
தென்னிந்தியாவிலேயே சிறந்த காலை உணவு என்றால், அது இட்லிதான். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி உண்னும் உணவு இது. இந்த இட்லியை மாறுபட்ட வடிவத்தில் வழங்க தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன. அந்த வகையில்தான் தட்டு இட்லி, டம்ளர் இட்லி எனச் சில ஊர்களில் இட்லிகள் கிடைக்கின்றன. தற்போது ஒரு படி மேலே சென்று, பெங்களூருவில் புதுமையாக ஐஸ் வடிவில் அறிமுகமாகியுள்ளது இட்லி.
பார்ப்பதற்கு பால் ஐஸ் போலவே இருக்கும் இதைக் குச்சி இட்லியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த இட்லியின் ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலானபோதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. புதுமை விரும்பிகள் இந்த இட்லி வடிவத்தை ஆராதிக்க, பாரம்பரிய உணவுப் பிரியர்களோ, இட்லி வடிவத்தை மாற்ற முயல்வதா என விமர்சிக்கிறார்கள். மரங்களை வெட்டக் கூடாது என்கிற விழிப்புணர்வு பெருகிவரும் நிலையில், இட்லிக்கு மரக்குச்சி தேவையா என்கிற எதிர்ப்புக் குரலும் ஒலித்திருக்கிறது.
நாய் பார்த்த பார்வைக்கொரு நன்றி
எப்போதுமே திருமணங்களில் மணமகனும் மணமகளும்தான் மையமாக இருப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்களைத் தாண்டி நாய் ஒன்று விழாவின் மையமாகிவிட்டது. சில வெளிநாடுகளில் மணமக்கள் மாற்றிக்கொள்ளும் மோதிரத்தைக் கொண்டு வர நாய்களைப் பயன்படுத்துவது வழக்கம். செல்லப்பிராணி மீதுள்ள அதீத பாசத்தை வெளிப்படுத்த இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
அப்படித்தான் அமெரிக்காவில் நடந்த திருமணம் ஒன்றுக்கு மோதிரம் கொண்டு வந்தது ஹென்றி என்கிற நாய். மணமக்கள் மோதிரத்தை மாற்றிக்கொண்ட வேளையில், அந்த நாய் ஓரப் பார்வையில் திரும்பிப் பார்த்த ஒளிப்படம்தான் தற்போது ஹிட் ஆயிருக்கிறது. ‘எங்கள் திருமணத்தில் எங்களைப் பின்னுக்கு தள்ளி எல்லோர் மனத்தையும் திருடிவிட்டாய்’ என்று மணமகள் எமிலி இன்ஸ்டாகிராமில் பகிர, அந்த ஒளிப்படம் இன்னும் இணையத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
பீட்சா தின்னக் கூலியா?
உலகிலேயே பீட்சாவுக்கு பெயர்போனது அமெரிக்காவில் உள்ள பீட்சா ஹட். அமெரிக்கா முழுவதும் உள்ள இந்நிறுவனம், தற்போது பல நாடுகளிலும் கடை விரித்திருக்கிறது. அதன்படி லண்டனில் கிளையைத் தொடங்கியுள்ள இந்நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் பேசுபொருளாகிவிட்டது. லண்டன் கிளைக்கு ‘சீஃப் கிரஸ்ட் டேஸ்டர்’ பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்யத் தொடங்கியிருக்கிறது. தயாராகும் பீட்சாவைச் சாப்பிட்டுப் பார்த்து, அதன் ருசி எப்படி இருக்கிறது என்பதைச் சொல்வதுதான் இந்தப் பணி.
தொடர்ந்து புதிய புதிய உணவு வகைகளை மாற்றி பீட்சாக்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்துவதால், அதன் ருசியைப் பற்றித் தகவல்களை எதிர்பார்க்கிறது. இதற்காகத்தான் இந்த டேஸ்டர் பணிக்கு விளம்பரம் அளித்திருக்கிறது. இப்பணிக்குச் சம்பளமாக 5 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்படும் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம் சம்பளம். சாப்பிட பீட்சாவும் கொடுத்து, அதற்குக் கூலியாக ரூ. 5 லட்சம் சம்பளமும் கொடுக்கும் இந்த வேலை பேசுபொருளானதில் வியப்பில்லைதானே!