கம்பீரக் காளைகளோடு கொஞ்ச நேரம்

கம்பீரக் காளைகளோடு கொஞ்ச நேரம்

Published on

காளைகள்…. திமிர்ந்த செருக்குடன் தலைதூக்கி நிற்கின்றன, காற்றில் சீறிப் பாய்கின்றன, தரையில் கால்களை ஊன்றித் திமிறலுடன் பார்க்கின்றன, ஆற்றல் முழுவதையும் கொம்பில் திரட்டிக் குனிந்து முட்டத் தயாராகின்றன.

காளைகளும் மாடுகளும் தொடர்ந்து விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நிஜக் காளைகளிடம் காணப்படும் அதே சிலிர்ப்பை, சிற்பி இளஞ்செழியனின் வெண்கலக் காளைகளிடமும் உணர முடிகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடியைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். அப்பா ஆசிரியராக இருந்தாலும் விவசாயம்தான் இளஞ்செழியனின் பரம்பரைத் தொழில். அதனால் கால்நடைகளோடு சேர்ந்தே வளர்ந்தார்.

சிற்பக் கலைஞர்கள் நிறைந்த கும்பகோணம் மண்ணில் அமைந்துள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் படித்ததால், வெண்கலச் சிலைகளை வடிப்பதன் மீதான ஈடுபாடு அதிகரித்தது. ஆறேழு ஆண்டுகளுக்கு முன் கிராமத்துக் காட்சிகளைச் சிற்பமாக வடிக்கத் தொடங்கியபோதுதான், காளைகளின் மீது அவருடைய பிடிப்பு தீவிரமானது.

“கிராம மக்களுக்கும் மாடுகளுக்கும் இடையிலான உறவு ஆழமானது. விவசாயிகளின் தோழனான மாடுகளை, நமது பண்பாட்டில் வணங்கிவருகிறோம். நந்தியாக உருவகித்திருக்கிறோம். அது பற்றி தேட ஆரம்பித்த பிறகுதான், தொடர்ச்சியாகக் காளைகளைச் சிற்பங்களாக வடிக்க ஆரம்பித்தேன்.

காளைகளின் அழகும் வீரியமும் அவற்றின் கம்பீரமும் சிலிர்ப்பும்தான். அதுவே என் சிற்பங்களின் அடிநாதம். காளைகளின் சிறப்பு அம்சங்களான திமில், முன்னங்கழுத்துத் தோல், கொம்பு போன்றவற்றை மிகைப்படுத்திக் காட்ட விரும்புவேன். வெண்கலத்தில் சிற்பம் வடிப்பதும் பச்சை நிறமேற்றுவதும் எனக்கு மிகவும் பிடித்தமானது.

கடவுளின் நீட்சியாக மாடுகளைப் பாவிப்பதால்தான், கடவுளர் சிற்பங்களைக்கொண்டே ஒரு காளை சிற்பத்தை வடித்தேன்” என்கிறார் இளஞ்செழியன்.

அவருடைய காளைச் சிற்பக் கண்காட்சியைவிட்டு வெளியே வந்த பிறகும் சிலிர்த்து நிற்கும் திமில்கள், நீண்டு தொங்கும் தாடை தோல், மேலெழுந்து சுழலும் வால் போன்றவை மனதில் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

(இளஞ்செழியனின் காளைகள் சிற்பக் கண்காட்சி, சென்னை அடையாறு பத்மநாபா நகரில் உள்ள ஃபாரம் ஆர்ட் கேலரியில் பிப்ரவரி 20-ம் தேதிவரை நடக்கிறது. தொடர்புக்கு: 044-42115596)

இளஞ்செழியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in