

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் கலை வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் சா.பாலுசாமி (பாரதிபுத்திரன்)’, 'தம்பி, நான் ஏது செய்வேனடா?' என்னும் தலைப்பில் கேள்வி-பதில் வடிவில் பாரதி குறித்த கேள்விகளுக்குப் பதிலாக நூல் எழுதியவர். இன்றைய இளைஞர்கள் பாரதியைத் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த நேர்காணலில் விளக்குகிறார்:
இன்றைய இளைஞர்கள் பாரதியாரை ஏன் வாசிக்க வேண்டும்?
நம்முடைய வாழ்க்கை, அறிவு வளம் மிக்கதாக, பண்பாட்டுச் செழுமைமிக்கதாக, வரலாற்று உணர்வுமிக்கதாக, உணர்வோங்கி நின்று இந்த மண்ணைப் பயன்கொண்டு, நமக்கும் இந்த உலகத்துக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்பதுதான் பாரதியுடைய மையமான கருத்து. ஒரு நாடு, மலைகள், கடல்கள், காடுகள், நதிகள், மனிதர்கள் உட்படத் தன்னுடைய வளங்களை முதலில் காக்க வேண்டும். நம் நாட்டின் வளங்கள் குறித்த பெருமிதத்தின் வழியே அவன் இயற்கையோடு தொடர்புபடுத்திக்கொள்கிறான். ஒரு நாடு தனக்கான தொழில்களை உருவாக்கிப் பெருக்கி மக்களை வாழ்விக்க வேண்டும் என்கிறான். ஒரு நாட்டினுடைய முன்னேற்றம், அதன் வளங்களை நாம் எவ்வாறு பொருளாதாரப்படுத்துகிறோம், மக்களுடைய வாழ்க்கைக்குரியதாக வளத்துக்குரியதாக எவ்வாறு மாற்றுகிறோம், அதற்காக எப்படிச் சோர்வில்லாமல் உழைக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறான்.
பாரதி பழம்பெருமை பேசியது அந்தக் காலகட்டத்தில் இந்த நாட்டு மக்கள் தங்களுடைய பண்டைய பெருமையை அறியாதவர்களாக வரலாற்று உணர்வு அற்றவர்களாக இருந்ததனால்தான். அதே நேரம் பாரதியை நுட்பமாகப் பார்த்தால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகள் என்ன வகையில் வளர்ந்திருக்கின்றன, அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் என்னவெல்லாம் காரணங்களாக அமைந்திருக்கின்றன என்பதை எல்லாம் பார்த்து அவற்றை எல்லாம் நாம் கைகொள்ள வேண்டும், அறிவியலை வளர்க்க வேண்டும், இயந்திரங்களை வகுக்க வேண்டும் என்றும் பாடியிருக்கிறான்.
சுதேசக் கல்வி என்று எழுதியிருப்பதில் பாரதி எழுதுகிறான் - தாய்மொழியே உணர்வுத் தொடர்புக்கு இயல்பான, இயற்கையான மொழி. தாய்மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். மக்களுடைய தொடர்பு மொழியாக, மிக முக்கியமாகக் கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்கிறான். வளர்கின்ற கலைகளை எல்லாம் நாம் நம்முடைய மொழியில் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறான். இந்தியா போன்ற பல்வேறு மொழிகளைப் பேசுகிற நாட்டில் இருப்பவர்களுக்கு இப்படி இந்த உணர்வு மிக அவசியம். பாரதி என்றென்றைக்கும் தேவைப்படும் ஒருவர்.
பாரதியார் மதம், சாதி குறித்து எழுதியவற்றை வைத்தே ஒரு தரப்பினர் அவரை முற்றிலும் நிராகரிப்பதும் இன்னொரு தரப்பினர் அவரைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இவற்றைக் கடந்து பாரதியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
பாரதி எந்தச் சமயத்தையும் சேர்ந்தவன் அல்ல. எல்லாச் சமயங்களையும் ஏற்றுக்கொண்டவன். எல்லாச் சமயங்களும் உண்மை, ஆனால் எந்தச் சமயமும் முழு உண்மை இல்லை என்பதே அவனது கூற்று. எந்த ஒரு சமயத்தையும் சார்ந்து நிற்காதவன். பாரதியை அவனுடைய சாதி சார்ந்து விமர்சிப்பவர்கள் அவனை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தான் அணிந்திருந்த பூணூலை அறுத்தெரிந்தவன், கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டவன். தன்னுடைய சாதி எதிர்ப்புக் கருத்துகளை கவிதைகளில் மட்டுமல்லாமல் கதைகளிலும் ஏராளமாக எழுதியிருக்கிறான். அவை எல்லாம் இன்னும் முறையாக வாசிக்கப்பட வேண்டும்.
பாரதியாரைச் சரியாக உள்வாங்கிக்கொள்ள எந்தெந்த நூல்களை வாசிக்கலாம்?
பிரேமா நந்தகுமார் எழுதிய ‘சுப்பிரமணிய பாரதி’ (நேஷனல் புக் டிரஸ்ட், தமிழில் - வீ.எம்.சாம்பசிவன்), சீனி விஸ்வநாதன் எழுதிய விரிவான வாழ்க்கை வரலாறு, ரா.அ.பத்மநாமனின் ‘சித்திர பாரதி’ (காலச்சுவடு) எனும் ஒளிப்பட நூல், பெரியசாமி தூரனின் ‘பெண்களுக்கு பாரதி’, ‘சமுதாயத்துக்கு பாரதி’ எனப் பல நூல்களைச் சொல்லலாம். முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.