

பிரம்மாண்டத் திரைப்படம் என்பதற்கான வரையறையை மாற்றி எழுதிய பாகுபலி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்தில் வெளியாகி பெரு வெற்றிபெற்றது தெரிந்த சேதிதான். இப்போது அந்த வெற்றியை மற்ற வகைகளிலும் கொள்முதல் செய்யும் வேலை தொடங்கிவிட்டது. அதன் முதல் படியாக பாகுபலி காமிக்ஸ் வரப்போகிறது.
ஒரு திரைப்படமோ, டிவி தொடரோ பிரபலமடைந்தால், தொடர்ச்சியாக அதன் மெர்கண்டைஸ் வணிகப் பொருட்களை சந்தைப்படுத்துவது அமெரிக்க உத்தி. பாகுபலி அதை உடனடியாகச் ஆரம்பித்துள்ளது.
கிராஃபிக் நாவல்
இதற்காக பாகுபலியை தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் கிராஃபிக் இந்தியா நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. விரைவில் பாகுபலி முதல் பாகத்தின் காமிக்ஸ் புத்தகங்கள், நாவல்கள், அனிமேஷன் படங்கள், மொபைல் விளையாட்டு போன்றவை வெளியாக உள்ளன.
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இந்தப் படத்தின் சர்வதேச எடிடட் படமான நவ் யு சீ மீ, டேக்கன் 2 ஆகிய இரண்டும் 30 நாடுகளில் விரைவில் வெளியாக உள்ளன.
விரைவில் இதன் அடிப்படையில் இரண்டு கிராஃபிக் நாவல்கள் வெளியாக உள்ளன என்கிறார் கிராஃபிக் இந்தியா இணை நிறுவனர் ஷரத் தேவராஜன். அதேபோல பாகுபலி: தி லாஸ்ட் லெஜண்ட்ஸ் என்ற விரிவான அனிமேஷன் படமும் வெளியாக உள்ளது.
“இப்போது மேற்கத்திய, ஜப்பானிய அனிமேஷன் படங்களே சந்தையை ஆக்கிரமித்துள்ளன. இந்த நிலையில் உலகெங்கும் வெளியாக உள்ள இந்திய அனிமேஷன் படமாக பாகுபலி அமையும்” என்கிறார் தேவராஜன். அது மட்டுமல்லாமல் பாகுபலி மொபைல் விளையாட்டு, இந்தியாவில் உள்ள 90 கோடி மொபைல் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
மிகப் பெரிய உலகம்
“பாகுபலி என்பது மிகப் பெரிய உலகம். திரைப்படத்தில் வெளிவந்துள்ளது கொஞ்சம்தான். அதில் இன்னும் வெளியே சொல்லப்படாத நிறைய கதைகள் உள்ளன. தற்போது சினிமாவுக்காக அவை சுருக்கப்பட்டுள்ளன. அப்படி சொல்லப்படாத விஷயங்கள் எல்லாம் மற்ற வகைகளில் பயன்படுத்தப்படும். அவற்றை நான் மேற்பார்வையிடுவேன். என்கிறார் இயக்குநர் ராஜமௌலி.
அதேபோல, ஏ.எம்.டி. என்ற நிறுவனத்துடன் அர்கா மீடியா ஒர்க்ஸ் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, பாகுபலி திரைப்படத்தின் அடிப்படையில் மெய்நிகர் உலகம் ஒன்றை உருவாக்கும் திட்டமும் தற்போது உருவாகி வருகிறது.