

குளிரூட்டப்பட்ட அரங்கம் இல்லை. மேடை இல்லை. பக்கவாத்தியங்கள் இல்லை. பிரம்மாண்டமான மரத்தின் வேர், கிளை, அமைதியான நீர் நிலையின் நடுவில் துருத்திக்கொண்டிருக்கும் பாறை, சலசலக்கும் ஓடையின் ஓரம், மலையின் உச்சி, அதள பாதாளத்தின் விளிம்பு, புதர்கள் மண்டிய குகையின் முகப்பு... இப்படிப் பல இடங்களில் அதிகாலை, மஞ்சள் வெயில் விரியும் மாலைப்பொழுது, அந்தி, இரவு எனப் பல பொழுதுகளில் இயற்கையின் ஆதிக்கம் மிகுந்த காட்டில் சுற்றித் திரிந்து பாடுவதற்கு எந்தப் பாடகராவது தயாராக இருப்பாரா?
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பாட முடியும் என்பதைப் புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா `ஒன்’ இசைப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அகல் ஃபிலிம்ஸின் தயாரிப்பான `ஒன்’ இசைத் திரைப்படத்திற்காகக் கடந்த 2014 பிப்ரவரி மாதம் நீலகிரி மலையைச் சுற்றி இயற்கையின் தொட்டிலில் டி.எம். கிருஷ்ணாவைப் பாடவைத்துப் படம்பிடித்தனர். `ஒன்’ இசைத் திரைப்படம் அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சென்னையிலும் அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது. `ஒன்’ திரைப்படத்தின் டிவிடியைச் சமீபத்தில் வெளியிட்டார் `தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம். படத்தின் திரையிடலும் இசைக் கல்லூரி வளாகத்தின் தாகூர் அரங்கத்தில் நடந்தது.
“எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நல்ல இசையை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அந்த நோக்கம் இந்த இசைப்படத்தின் மூலமாக நிறைவேற்றிய திருப்தி எங்களுக்கு உள்ளது” என்றார் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் சந்திரசேகரன். இடத்தின் சூழலுக்கே நம்மை உணர்வுபூர்வமாகக் கொண்டு செல்லவைக்கிறது மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு.
சூரியனின் வெளிச்சக் கைகள்கூடத் தீண்டாத அதிகாலை 4 மணி. காட்டுச் சேவலின் கூவலே தம்புராவின் ஸ்ருதிக்குப் பக்கபலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அடர்ந்த பனிப்பொழிவு, 10 டிகிரிக்கும் குறைந்த குளிரிலும் நடுக்கமில்லாமல் கிருஷ்ணாவிடமிருந்து வெளிப்படும் கேதாரகௌளை தானம், இயற்கையும் இசையும் ஒன்றுதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
“எடிட்டிங், மிக்ஸிங் போன்றவற்றைக் கூடத் தேவைக்கு அதிகமாக இந்தப் படத்தில் செய்யவில்லை” என்றார் படத்தின் இயக்குநர் ஜெயேந்திர பஞ்சாபகேசன். “மூன்று கேமராக்களைக் கொண்டு படம்பிடித்தனர். ஆனால் என்னை எதுவுமே சங்கடப்படுத்த வில்லை” என்றார் டி.எம். கிருஷ்ணா.
எந்த விதமான முன்னேற்பாடுகளுடனும் படப்பிடிப்பை நடத்தவில்லை என்று படக் குழுவினர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றனர். ஆனால் படத்தின் நேர்த்தி அவ்வளவு கனகச்சிதமாக இருக்கிறது.
காய்ந்த சருகுகள் நிறைந்த பாதையில் கிருஷ்ணாவோடு பாண்டுரங்கனும் சேர்ந்து `வாக்கிங்’ போகும் உணர்வைத் தருகின்றது புரந்தரதாசரின் விட்டலா… விட்டலா. குகை என்றாலே பொதுவாக எல்லோருக்கும் முனிவர், தவம்தான் நினைவுக்கு வரும். இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவே, குகை போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து `புல்லாகிப் பூண்டாகி’ என்னும் திருவாசகத்தைப் பாடுகிறார் கிருஷ்ணா.
நீலகிரி மலையிலிருக்கும் எமரால்ட் லேக் அருகில் சாரல் மழையில் நனைந்துகொண்டே கிருஷ்ணா பாடும் முத்துசாமி தீட்சிதரின் `ஜம்புவதே’ எத்தனை பொருத்தமாக இருக்கிறது! இந்த இடத்துக்கு இந்தப் பாடலைப் பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்துப் பாடினார்களா அல்லது பாடும் பாடலுக்கேற்ப இயற்கையின் காட்சிகள் இயல்பாக அமைந்துவிட்டதா என்ற பிரமிப்பு, படம் திரையில் ஓடும் 90 நிமிடங்களைக் கடந்தும் நம் உள்ளத்தில் எழுகிறது.