

சமூக ஊடகங்களில் சவால்களுக்குப் பஞ்சமே இல்லை. பழைய ஒளிப்பட சவால், 10 ஆண்டுகள் சவால், ஐஸ் பக்கெட் சவால், கழுத்து எலும்பு சவால் என்று ஏதாவது ஒரு சவால் சமூக ஊடங்களில் டிரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கும். இதுபோன்ற சவால்கள் எல்லாம் பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்துதான் உலகின் பல நாடுகளுக்கு இறக்கி விடப்படுகின்றன. எப்போதும் ஏதாவது ஒரு சவாலில் மூழ்கிக் கிடப்பது அமெரிக்க இளசுகளின் வாடிக்கை. தற்போது, டிரெண்ட் ஆகியுள்ள ஒரு சவால், அமெரிக்கர்களைப் பதறச் செய்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகும் சவால்களைப் பார்த்துப் புருவத்தை உயர்த்தி யிருப்பீர்கள் அல்லது முகத்தைச்சுளித் திருப்பீர்கள். நீங்கள் என்ன வேண்டுமானலும் செய்துகொள்ளுங்கள். அதைப் பற்றியெல்லாம் இளைஞர்கள் கவலைப்படுவதே இல்லை. அவர்களுடைய உலகமே வேறு. ஜாலி, கேலிதான் அவர்களுடைய உலகம். அங்கு அவர்களை உற்சாகப்படுத்த ஏதாவது ஒன்று கிடைத்துக்கொண்டே இருக்கும். அப்படி அமெரிக்காவில் இந்த மாதத்தில் அறிமுகமானது ‘மில்க் கிரேட்’ சவால்.
நம்மூரில் பால் பாக்கெட்டுகளைப் பெரிய பிளாஸ்டிக் டப்பாக்களில் வைத்து விநியோகிப்பார்கள் அல்லவா? அந்த பிளாஸ்டிக் டப்பாக்களை பெரிய பிரமிடு போல உருவாக்குகிறார்கள். பிறகு அந்த பிரமிடின் உச்சிக்கு ஏறி நிற்க வேண்டும். பிறகு இன்னொரு பக்கமாக கீழே இறங்க வேண்டும். இப்போது அமெரிக்காவின் இளைஞர்கள் மத்தியில் இதுதான் சவால். பலரும் இந்தச் சவாலை ஏற்று பிளாஸ்டிக் டப்பா பிரமிடில் ஏறி இறங்கும்போது எடை தாங்காமல், குதித்துச் சாகசம் செய்கிறார்கள். அப்படிக் குதிப்போரில் சிலர் எக்குத்தப்பாகக் குதித்து மண்டையை உடைத்துக் கொண்ட சம்பவமும் நடந்தேறியது. இன்னும் சிலருக்கு கை, கால்களிலும் காயம் ஏற்பட்டது.
இதனால், இந்தச் சவாலைத் தடை செய்ய வேண்டும் என்று பேசும் அளவுக்கு அமெரிக்காவில் நிலைமை சென்றுவிட்டது. மருத்துவர்களும் இந்தச் சவாலை மேற்கொள்ளவேண்டாம் என்றும் மண்டையில் காயம் ஏற்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்றும் விளக்கிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது பிளாஸ்டிக் டப்பாக்களை அடுக்கினாலே, பெரியவர்கள் கூடி அறிவுரைகளைக் கொட்டத் தொடங்கிவிடுகிறார்கள். அதனால், சவால் சாகச இளைஞர்கள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்திருக்கிறார்களாம். நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அது இதற்கும் பொருந்தும்.