

சுவாரசியமான நிகழ்வுகள் எப்போதும் வைரலாகிவிடும். அந்த வகையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இணையத்தில் வைரல் ஆனது.
கிரிக்கெட் 11 பேர் சேர்ந்து விளையாடும் ஆட்டம். ஆனால், அந்த 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா சார்பில் 12 பேர் களமிறங்கினார்கள். 11 இந்தியர்களில் ஒருவர் மட்டும் வெள்ளையர். ‘முதல் வெள்ளை இந்திய கிரிக்கெட் வீரர்’ என்ற ஹாஷ்டாக்கில்தான் இந்த விஷயம் வைரலானது. வீரர்களின் ஓய்வு அறையிலிருந்து இந்திய வீரர்கள் களத்தில் இறங்கியபோது 11 வீரர்களுடன் அவரும் இணைந்துகொண்டார்.
இந்திய வீரர்கள் அணிந்திருந்த அதே டெஸ்ட் கிரிக்கெட் உடையை அவரும் அணிந்திருந்ததால் யாராலும் அவரைப் பிரித்தறிய முடியவில்லை. ஆனால், களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள் சிலர் ஒரு கணம் குழம்பிப் போயினர். இந்தக் குறும்புக்கார 12வது ஆளை இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முதலில் கண்டறிந்தார். அவரிடம் கேலியாக, “எந்தப் பகுதியில் பந்துவீச விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார். மற்ற வீரர்கள் என்ன ஏது என்று கேட்டு அறிவதற்குள் மைதானப் பாதுகாவலர்கள் அவரை இழுத்துச் சென்றனர்.
அப்போதும் அவர், “ நானும் ரவுடிதான்டா. ரவுடியா ஃபார்ம் ஆயிட்டேன் டா” என்று நடிகர் வடிவேலு பாணியில், “நானும் இந்திய வீரர்தான்.. பாருங்க இந்திய ஜெர்சியெல்லாம் போட்டிருக்கேன்” என்று வம்பு செய்தார். ஆனாலும், அவரை பாதுகாவலர்கள் அள்ளிக்கொண்டு சென்றனர். அந்த நேரத்தில், ஏதோ மைதானத்தில் சாதனை செய்துவிட்டு திரும்புவதுபோல ரசிகர்களை நோக்கிக் கை அசைத்தபடி திரும்பினார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த இந்திய வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். குறிப்பாக, முகமது சிராஜ் அடக்க முடியாத அளவுக்கு சிரித்தார்.
ஜார்வோ என்ற பெயரில் அறியப்படும் அவர் இங்கிலாந்தின் பிரபல பிராங்க் ஸ்டார். இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் ரசிகரும்கூட. இவர் ஏற்கெனவே ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் போட்டியாளர்களுக்கு இடையில் புகுந்து பாதுகாவலர்களை ஏமாற்றிவிட்டு குளத்தில் குதித்து ரணகளம் செய்தவர். இதேபோல கால்ஃப் போட்டிக்குள்ளும் புகுந்திருக்கிறார். இவருடைய சுவாரசியமான விளையாட்டு பிராங்க்குகள் மூலம், இங்கிலாந்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்டார்.