அயோத்தியா மண்டபத்தில் ஒலித்த வெள்ளப்பாட்டு!

அயோத்தியா மண்டபத்தில் ஒலித்த வெள்ளப்பாட்டு!
Updated on
2 min read

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட (ஆமா)
வில்லினில் பாட (ஆமா)
வில்லினில் பாட வந்திடுவாய் கடல்மகளே…

- வழக்கமாய் உபன்யாசங்களும் ராமநாமாவளிகளும் கசியும் மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்திலிருந்து இப்படி தெறித்தது வில்லுப்பாட்டின் வடிவில் ஒரு வெள்ளப்பாட்டு!

பாடிக் கொண்டிருந்தவர்கள், சென்னை, பெசன்ட் நகர், ஊரூர் ஆல்காட் குப்பத்தின் பெண் குழந்தைகள்.

எப்படி நிகழ்ந்தது இது என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டி.எம். கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

“மனிதனின் அற்புதமான கண்டுபிடிப்பு கலைகள். பல்வேறு கலைகளை ஒன்றிணைப்பதன்மூலம் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மனிதர்களை ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். இந்த எண்ணத்தின் செயல்வடிவமே கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட ஊரூர் ஆல்காட் குப்பம் கலை விழா. இதன்மூலம் கர்னாடக இசையை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தப்பாட்டத்தையும் கேட்டனர். தப்பாட்டத்தை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த காதுகள், கர்னாடக இசையையும் கேட்டன. இதை இந்த ஜனவரியில் நடத்தமுடியாத அளவுக்கு டிசம்பர் மாதம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. மேற்கு மாம்பலம், அசோக்நகர், ஜாபர்கான்பேட்டை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை படகுகளின் மூலம் கரையேற்றிய நூற்றுக்கணக்கான மீனவர்களின் சார்பாக இங்கு வந்திருக்கும் நாற்பது மீனவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவே இதை நடத்துகிறோம்” என்றார்.

நகரை வெள்ளம் சூழ்ந்த கதையைத்தான் வில்லுப்பாட்டுக்கான கருவாக்கியிருந்தார்கள். இடையிடையே நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை நினைவுபடுத்தும் சமயோசித அம்புகளின் யதார்த்தமும் நம்மைத் துளைத்தன.

‘தப்புத்தப்பா பாட வந்தோம்’ என்று ஆரம்பிக்க, ஒத்துப்பாடும் சிறுமி ‘தப்புத்தப்பா பாடினா எப்படி?’ ரைட்டா பாடினாத்தான் தேசத் துரோக வழக்கு போடுறாங்களே…”

- புன்னகை மாறாத சிறுமியின் உதட்டிலிருந்து இப்படி புயலாய் வெளிப்படுகின்றன வார்த்தைகள்.

நாலே கால் கோடி ஆமா
நாலு பெட்ரூமு ஆமா
நடந்தே போனாக்கா
ஏர்போட் வந்துடும் ஆமா
ஆனா நாலு நாள் நடக்கணும் போடு பிராக்கெட்ல
ஸ்விம்மிங்பூல் இருக்கு
தண்ணி வராது ஆமா
சூப்பர் மார்க்கெட் இருக்கு
சரக்கு இருக்காது ஆமா
டென்னிஸ் கோட் இருக்கு. அந்தப்பக்கம் விளையாட ஆள் இல்ல..
(ஆமா ஆள் இல்லே ஐய்யோ ஆள் இல்ல)
ஆளே இல்லா குடியிருப்பு
கரைஞ்சு போச்சு கையிருப்பு
ஏரிமேல வீடு கட்டி
வீடு மேல மாடி கட்டி
மாடி மாடி அடுக்குமாடி
வேளச்சேரி செம்மஞ்சேரி
ஏரி பூரா அடுக்கு மாடி!

- என்று வெள்ளத்துக்குக் காரணம் மழை அல்ல மனிதனின் பேராசைதான் என்று முடிந்தது சிறுமிகளின் வெள்ளப்பாட்டு. தொடர்ந்து காயத்ரி வெங்கட்ராகவனின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

பிப்ரவரி 27, 28 அன்று பெசன்ட் நகர், ஊரூர் ஆல்காட் குப்பத்திலும் இந்த விழா நடக்கிறது. இரண்டு நாள்கள் நடக்கும் இந்த விழாவில் பறையாட்டம், கிராமியக் கலைகள், பரதநாட்டியம், ஊரூர் ஆல்காட் குப்பம் குழந்தைகளின் வில்லுப்பாட்டு, குழந்தைகளின் சேர்ந்திசை, ஃபியூஷன் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன என்றார் டி.எம். கிருஷ்ணா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in