

எதிராளி கீழே விழுந்து கிடக்கிறான். அவனருகே பேச வருகிறான் நாயகன். அப்போது எதிராளி, “ஐயா சாமி, நீ பேசும் டயலாக்கை என்னால் தாங்க முடியலை. அதுக்குப் பேசாம என்னைய இப்பவே கொன்னு போட்டுடு” என்று கதறுகிறான். சிரித்துக்கொண்டே மேலும் சில வசனங்களைப் பேசி(யே) அவனைக் கொல்கிறான் நாயகன்.
இது நிச்சயமாக கவுண்டமணி படமில்லை. உலகிலேயே மிக அதிக விமர்சனங்களுக்கு உள்ளான காமிக்ஸ் கதாசிரியரான ராப் லைஃபெல்ட்டின் படைப்பான டெட்பூல் கதாபாத்திரத்தின் ஒரு சாம்பிள். வாயாடிக் கொலைகாரன் (Mercenary With a Mouth) என்றழைக்கப்படும் டெட்பூல் ஏற்கனவே எக்ஸ்மென் பட வரிசையில் ஒருமுறை மொக்கையாகச் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம்தான். இப்போது வெளியாகியுள்ள டெட்பூல் படமே, அவருடைய அதிகாரபூர்வ வெள்ளித்திரை அறிமுகம்.
இந்தப் படம்தான் இதுவரையில் வெளியான சூப்பர் ஹீரோ படங்களிலேயே (முதல் வாரயிறுதியில்) மிக அதிக வசூலைக் குவித்த படம். இப்படி ஒரு அசாத்திய வெற்றியின் பின்னணி என்ன என்று தெரிந்துகொள்வதற்கு முன், கொஞ்சம் டெக்னிகல் விஷயங்களையும் அலசிவிடுவோம்.
குழந்தைகளை ஈர்க்கும் திட்டம்
ஹாலிவுட் படங்களைக் கட்டுப்படுத்தும் பெரிய பெரிய ஸ்டுடியோக்களுக்குத் தனிநபர் அல்லது நண்பர் குழுக்களின் வருகையைவிட, குடும்பங்களின் வருகையே உத்தரவாதமான லாபமாகக் கருதப்படுகிறது. பெரிய ஹீரோ படங்களையோ அல்லது காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களின் படங்களையோ வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்யும்போது, முடிந்த அளவுக்கு PG 13 என்ற ரேட்டிங் வருமாறு ஸ்டுடியோக்கள் பார்த்துக்கொள்கின்றன. இதற்காகவே பல வசனங்களை, காட்சிகளை வெட்டியெடுத்துவிட்டுப் படங்களை ரிலீஸ் செய்வார்கள். இந்த PG 13 ரேட்டிங் மூலம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களையும் (பெற்றோருடன்) திரையரங்குக்குக் கொண்டுவர முடியும்.
ஹாலிவுட்டில் படங்களின் திரையரங்க வசூல் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமான இன்னொரு விஷயம் படம் சம்பந்தப்பட்ட வணிகச் சந்தை (Merchandising). ஒரு சூப்பர் ஹீரோ படம் வெளியாகும்போது அத்திரைப்படம் சார்ந்த பொம்மை, டீ ஷர்ட், தொப்பி, சிறப்புக் காலணிகள் என்று வகை வகையான பொருட்கள் சந்தையில் குவியும். இவற்றை வாங்குவது இளையோரே என்பதால், அவர்களைத் திரையரங்குக்குக் கொண்டுவரவே இந்த PG 13 ரேட்டிங்.
ஆனால், உள்ளடக்கக் கருத்து, வன்முறை காரணமாகச் சில திரைப்படங்கள் R ரேட்டிங் பெறுவதுண்டு. இத்திரைப்படங்களைக் காணும் குடும்ப மற்றும் இளையோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இவற்றின் வசூலும் கணிசமாகக் குறையும். ஸ்டுடியோக்களின் இந்த ரேட்டிங் வியாபாரத்தால், தீவிர காமிக்ஸ் வாசகர்கள் கடுப்பாவதும் உண்டு.
இரண்டு வித்தியாச மனிதர்கள்
சுமார் 12 ஆண்டுகளாகத் திட்டமிடுதல் நிலையிலேயே இருந்த டெட்பூல் திரைப்படத்தை இதுபோன்ற வணிகச் சமரசத்துக்கு உள்ளாக்குவதை இரண்டு நபர்கள் விரும்பவில்லை. ஒருவர், வாரத்துக்கு நானூறு டாலருக்கு காமிக்ஸ் மட்டுமே வாங்கிப் படிக்கும் அதிதீவிர வாசகரான இப்படத்தின் இயக்குநர் டிம் மில்லர். கடந்த 20 ஆண்டுகளாக இவர் ஒரு அனிமேஷன் ஸ்டுடியோவை வழிநடத்தி வருகிறார். இரண்டாவது நபர் டெட்பூல் கதாபாத்திரத்தை உருவாக்கியவரான ராப் லைஃபெல்ட். கல்லூரியில் ஓவியக் கலையைப் பயின்று, பீட்சா டெலிவரி செய்தவாறு தனது ஓவியத்திறனை மெருகேற்றிக்கொண்ட இவர், முதன்முதலில் காமிக்ஸ் வரைந்த கதை மிகவும் சுவாரசியமானது.
அமெரிக்காவின் மிகப்பெரிய காமிக்ஸ் சந்தையான சான்டியாகோ காமிக் கானுக்குச் செல்ல, நண்பர்களுடன் பல மணி நேரம் டிரைவிங் செய்து, அங்கே DC Comics எடிட்டரான டிக் ஜியோர்டினோவை சந்தித்துத் தனது ஓவியங்களைக் காண்பித்து, காமிக்ஸ் உலகின் கதவுகளைத் திறந்தார் லைஃபெல்ட். அதன்பின்னர் இவர் உருவாக்கிய கதாபாத்திரம்தான் டெட்பூல். இவருடைய ஓவியப் பாணி மிகவும் மாறுபட்டது. தினவெடுத்த தோள்கள், திடகாத்திரமான நாயகர்கள், ஆனால் உடல் அளவில் சம்பந்தமே இல்லாத கை, கால் என்று ஒரு தினுசாக வரைபவர் இவர்.
யார் இந்த டெட்பூல்?
தொழில்முறை கொலையாளி வில்சனுக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. மனம் நொந்த நிலையில் இருக்கும்போது, ஃப்ரான்சிஸ் என்ற நபர், தன்னிடம் ஒரு விசித்திரமான சிகிச்சை இருப்பதாகவும், அதன்மூலம் புற்றுநோயைக் கடந்து வருவதுடன் அசாத்தியத் திறமைகளைப் பெறலாம் என்று சொல்லி வில்சனை சிகிச்சைக்கு உட்படுத்துகிறார். இந்தச் சிகிச்சை, சிதைவுற்ற திசுக்களை அசாத்திய வேகத்தில் ஆற்றும் தன்மையை அளிக்கிறது. ஒரு கை வெட்டப்பட்டால்கூட, உடனடியாகப் புதிய கை முளைத்துவிடும். ஆனால், இதன் பக்க விளைவாக வில்சனின் முகம் கோரமாக மாறிவிடுகிறது. அவனுடைய தோலும் பாதிக்கப்படுகிறது. இதனால், உடல் முழுக்க மறைக்கும் ஒரு உடையை அணிந்து, டெட்பூல் என்ற சூப்பர் வில்லனாக உருவெடுக்கிறார் வில்சன்.
ஏற்கெனவே பேசியே கொல்லும் இவர், இப்படிப்பட்ட அசாத்திய வலிமையுடன் வரும்போது அவரது Punch-க்குப் பஞ்சம் இருக்குமா? ஆக, டெட்பூல் படத்தின் முதல் பாகம் வெளியாகும் முன்பே இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வந்த ஆச்சரியம் இருக்கிறதா என்ன?
- கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: prince.viswa@gmail.com