

பல நகரங்களையும், கிராமங்களையும் அடக்குமுறையாக ஆண்டு வருகிறது ஒரு அரசு. அவர்களுடைய அடக்குமுறைகள் அதிகரிக்க, ஒரு கிராம மக்கள் இவர்களுக்கு எதிராகப் புறப்படுகின்றனர். அந்தக் கிராம மக்களுக்கு உதவுகிறார் ஒரு குரு. அவர் தயாரிக்கும் ஒருவகையான கஷாயம் அசாத்திய வலிமை தரவல்லது. ஆனால், அதன் வலிமை குறுகிய காலம் மட்டுமே இருக்கும். அவர்களில் ஒரு வீரனுக்கு மட்டும் கால அவகாசத்தைக் கடந்து. அசாதாரணச் சக்தி நீடிக்கிறது…
இது விஜய் நடித்த ‘புலி’ படத்தின் கதை என்று தோன்றுகிறதா? மேலே சொன்னதுதான் ஒரிஜினல் ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸின் கதை. நூற்றுக்கும் மேலான மொழிகளில் சாகசம் செய்யும் அஸ்டெரிக்ஸ் (ஆங்கிலத்தில் ஆஸ்ட்ரிக்ஸ்) கதை தொடரின் அடிப்படை அம்சம் இதுதான்.
மறைக்கப்பட்ட சீசர் வரலாறு
பண்டைக் காலத்தில் ஃபிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலியின் சில பகுதிகளை உள்ளடக்கிய பெரிய சாம்ராஜ்யமாக இருந்ததுதான் கால் (Gaul). இதை ஜூலியஸ் சீசரின் ரோமானியப் படை கைப்பற்றியது வரலாறு. ஆனால், ரோமானியர்களால் கால் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஒரே ஒரு சிறிய கிராமம் மட்டும் தன்னிச்சையாகவே இயங்கி வந்தது. அந்தக் கிராமத்து மக்களின் சாகசங்களைச் சொல்வதே ஆஸ்ட்ரிக்ஸ் தொடர். இந்தக் காமிக்ஸ் தொடரின் சமீபத்திய வரவு Asterix & The Missing Scroll.
ஜூலியஸ் சீசரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது, ஒரு அத்தியாயத்தில் கால் மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டதை எடிட் செய்துவிடுகிறார் சீசரின் எழுத்தாளர். ஆனால், இதைக் கண்டுபிடித்து விடுகிறார், எட்வர்ட் ஸ்னோடன்போல தோற்றமளிக்கும் ஒருவர். உலகுக்கு உண்மைகளை எடுத்துரைக்கும் பத்திரிகையாளர் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்ச் போல தோற்றமளிக்கும் ஒருவருக்கு அவர் அதை அளிக்கிறார். அதை நமது நண்பர்கள் ஆஸ்ட்ரிக்ஸ், ஓபிலிக்ஸ் இடம் கொடுக்கிறார் அவர்.
கால் மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாதென்பதால், தங்களது குருவின் உத்தரவின்படி, தலைமுறை தலைமுறையாகக் கதைகள் மூலமாக ஆவணப்படுத்தும் வேறொருவரிடம் அந்தத் தகவல்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகமயமாக்கல் விமர்சனம்
இப்படியாகச் சீசரின் தோல்வி ஆவணப்படுத்தப்பட, அது செவிவழித் தகவலாகப் பல தலைமுறைகளைக் கடந்து இத்தொடரின் படைப்பாளிகளான ரெனே குசினி, ஆல்பர்ட் உடர்சோவிடம் வந்தடைவதாகக் கதையை அமைத்திருக்கிறார் தொடரின் புதிய கதாசிரியர் ஜான் ஃபெரி. ஓவியர் தீதியர் கோன்ராடின் அருமையான ஓவியங்களுடன் கடந்த ஆண்டின் இறுதியில் 40 லட்சம் பிரதிகளுடன் வெளியானது இந்தப் புத்தகம், சமீபத்தில் வெளியான ஆஸ்ட்ரிக்ஸ் புத்தகங்களில் மிகச் சிறந்ததாக இது கருதப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், எட்வர்ட் ஸ்னோடன், ஜூலியன் அசாஞ்ச் போல இந்தக் கால மனிதர்களின் முக்கியத்துவத்தைக் காமிக்ஸில் பொருத்திக் கூறியிருப்பதுதான்.
ஆஸ்ட்ரிக்ஸ் பட வரிசையில் முதல் 3D அனிமேஷன் படமான The Mansions of the Gods ஆங்கிலத்தில் கடந்த வாரம் ரிலீசானது. கதைத்தொடரின் 17-வது புத்தகத்தை மையமாக வைத்து 2014-ம் ஆண்டில் பிரெஞ்சு மொழியில் வெளியானது இப்படம். தங்களுடைய சுதந்திரத்தைப் பெரிதாக மதிக்கும் பிரெஞ்சுக்காரர்களின் குணாதிசயங்களை மையமாகக்கொண்டு, உலகமயமாக்கலுக்கு எதிரான கருத்துகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதைத்தொடரை வெள்ளித்திரையில் காட்சிப்படுத்துவதில் மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.
சீசரின் புதிய திட்டம்
தனக்கு அடங்க மறுக்கும் கால் பகுதி மக்களைப் பழி வாங்க புதிய திட்டம் ஒன்றை வகுக்கிறார் சீசர். கிராமத்தைச் சுற்றி இருக்கும் காடுகளை அழித்து, அங்கே அதிநவீன அபார்ட்மெண்ட்டுகளை கட்டி, புதிய வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்களுடைய பொருளாதாரத்தை மறைமுகமாகச் சீர்குலைக்க நினைக்கிறார். ஆனால், இந்தத் திட்டத்தைத் தனது குருவின் உதவியுடன் முறியடிக்கிறார் ஆஸ்ட்ரிக்ஸ்.
காமிக்ஸ் கதைகளை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும்போது ஏற்படும் நடைமுறை சிக்கல் இங்கேயும் தலைகாட்டுகிறது. படிக்கும்போது வெடிச்சிரிப்பை வரவழைத்த இந்தக் கதை, கார்ட்டூன் படமாகப் பார்க்கும்போது ரசிக்க வைத்தாலும், முழுமையான திருப்தியைத் தரவில்லை. ஆனால், அற்புதமான அனிமேஷன் காட்சிகள் அதை மறக்கடிக்கின்றன. ஆஸ்ட்ரிக்ஸ் ரசிகர்கள் பார்த்து மகிழலாம். மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, குதூகலிக்க வைக்கும் ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ்.