

உலகத்தில் அநீதி கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுந்த புரட்சியாளர், மார்க்சியவாதி, மருத்துவர், போராளி எனப் பல அடையாளங்களைக் கொண்டவர் சே குவேரா.
தனது இளம் வயதிலேயே அரசியல் அறிவு கொண்டவர். தன் நாட்டு மக்களின் விடுதலைக்காக மட்டும் போராடாமல் உலகில் உள்ள அணைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகவும் போராடியவர் சே. கைதியாகக் காலில் குண்டடிப்பட்டு விழுந்த போதும் தன்னைச் சுட்டுக்கொல்ல வந்தவனிடம் "இரு நான் எழுந்து நிற்கிறேன்!" என்று கூறிய வீரன். உயிரைப் பறிக்கும் குண்டு அவரை நோக்கிப் பாயும் போதும் மண்டியிட்டு வாழ்வதை விட நின்று சாவதே மேல் என்று சாவை வரவேற்ற மாமனிதன்.
அப்படிப்பட்ட வீரனுக்குத் தனது தூரிகை மூலமாக மரியாதை செலுத்தியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி. சே குவேராவை வெவ்வேறு கோணங்களில் வரைந்து அந்த ஓவியங்களை சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சிப்படுத்தியிருந்தார்.
சென்னையில் உள்ள கவின் கலைக் கல்லூரியின் பேராசிரியரான இவர், தனது வித்தியாசமான படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தன் பதினாறு வயதிலேயே தமிழீழப் போரின் கோரத்தைக் கண்டு மனம் வருந்தி சமூக அவலங்களை தன் ஓவியங்களில் பதிவு செய்யத் தொடங்கியவர்.
சே குவேராவை ஓவியங்களில் உயிர்த்தெழச் செய்தது பற்றி அவர் கூறும்போது, "பல ஆண்டுகளாக மனிதனை மனிதனே அடக்கி ஆண்ட கலத்தில் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் சிலரே. அவர்களுள் உயர்ந்து நின்றவர்கள் பெரியார் மற்றும் சே குவேரா ஆகியோர். தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை ஒழித்து தமிழனைச் சமூகப் புரட்சியில் ஈடுபடச் செய்தவர் பெரியார். அதே போல சே குவேராவும் உலக மக்களின் விடுதலைக்காகப் பாடுப்பட்டார்.
இந்த ஒவியங்களைக் கருப்பு வெள்ளையாக வரைந்ததற்குக் காரணம், அந்த நிறங்களே ஓவியங்களைப் பார்ப்பவர்களின் மனதில், ஓவியத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும். அதிலுள்ள அழ்ந்த கருத்துகளைக் கூறும். ஓவியங்களின் பின்னணியில் சே குவேராவின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களை இடம்பெறச் செய்திருக்கிறேன். இது ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு சே வாழ்ந்த காலத்தின் வரலாற்றை உணர்த்தும். ஓவியங்களில் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறேன். சிவப்பு புரட்சியையும், நீலம் கடலையும் மற்றும் பச்சை நிலத்தையும் உணர்த்துகின்றன.
‘வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதிக்க முடியாது' என்பது சே குவேராவின் கருத்து. அதை இக்கால இளைஞர்களுக்கு உணர்த்தவே எனது இந்த சிறு முயற்சி!" என்றார் ஆழ்ந்த சிந்தனையுடன்.