Last Updated : 06 Jul, 2021 03:45 AM

Published : 06 Jul 2021 03:45 AM
Last Updated : 06 Jul 2021 03:45 AM

யூடியூப் உலா: இலக்கியம் வளர்க்கும் இளைஞர்கள்!

வலைப்பூ, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வது வழக்கமானதுதான். ஆனால், யூடியூபில் இதுபோன்ற விமர்சனங்கள் அபூர்வம். அந்த வகையில் ‘புக் டேக் ஃபோரம்’ (Book tag forum), ‘இலக்கியப் பெட்டி’, ‘கதைச் சோலை’, ‘ஒயிட் நைட்ஸ்’ (White nights), ‘நாவல் ரிவ்யூ’, ‘சுபாவின் நூலகம்’ போன்ற பல யூடியூப் சேனல்கள் தமிழ் இலக்கியத் தொண்டாற்றிவருகின்றன. இந்த யூடியூப் அலைவரிசைகளை நடத்திவருபவர்கள் இளைஞர்களே.

‘ஒயிட் நைட்ஸ்’ யூடியூப் அலைவரிசை, இலக்கியம் மட்டுமல்லாமல், இலக்கியம் தொடர்பான உரையாடலையும் நிகழ்த்திவருகிறது. மனு தொடர்பான விவாதத்தை எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளம் மூலம் எப்படி எதிர்கொண்டார் என்பதைப் பற்றிய ஒரு பதிவை இந்த அலைவரிசை விவரித்திருக்கிறது. தமிழ்பிரபாவின் ‘பேட்ட’ நாவல் குறித்த விரிவான விமர்சனப் பார்வையும் இந்த அலைவரிசையில் இடம்பெற்றுள்ளது.

இலக்கிய விமர்சனம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியின் பல பரிமாணங்களை இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுவதை இந்தப் பதிவு சொல்கிறது. அதுபோல் இரா.முருகவேளின் புதிய நாவலான ‘புனைபாவை’ குறித்துத் தெளிவான பார்வையை இந்த அலைவரிசை முன்வைக்கிறது. “பொதுவாகப் பண்டைய காலத்தைப் பற்றிய நாவல்களில் காணப்படும் விதந்தோதல் இந்த நாவலில் இல்லை” என்கிற வசீகரிக்கும் சொற்றொடருடன் இந்தப் பதிவு தொடங்குகிறது. இந்த நாவல் உறுதியான வரலாற்றுப் பின்னணியில் பின்னப்பட்ட புனைவு என்பது விரிவான சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. உருக்கு, அதிலிருந்து கத்தி, அதிலிருந்து வணிகம் என நாவல் பிரம்மாண்டமாக விரிவதைச் சிறப்பாகச் சொல்கிறது. மேலும், இந்த நாவல் வர்க்கப் போராட்டத்தை தன் மையமாகக் கொண்டுள்ளதையும் இப்பதிவு சுட்டிக்காட்டுகிறது.

யூடியூப் இலக்கிய விமர்சனத்துக்கான தனித்துவமான தளமாக இருக்கிறது ‘புக் டேக் ஃபோரம்’. சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ குறித்த விரிவான பார்வையை இந்த அலைவரிசையில் காணலாம். மங்கத்தாயாரம்மாளின் குரல் வழியாக இந்த நாவலின் கட்டுமானத்தை அடுக்கடுக்காக விவரிக்கிறது இந்தப் பதிவு. கதையின் சுருக்கம், பாத்திரப் படைப்பு, அதிலிருந்து பெற்ற அனுபவம் என இந்த விமர்சனப் பதிவு தொடர்ந்து முன்னேறுகிறது.

எழுத்தாளர்களின் நாவல்கள்

‘கடல்புரத்தில்’, ‘குறத்தி முடுக்கு’, ‘நித்யகன்னி’, ‘கரைந்த நிழல்கள்’ ஆகிய தமிழ் செவ்வியல் நாவல்கள் குறித்தும் இதில் பதிவுகள் உள்ளன. இளம் எழுத்தாளர்கள் அய்யனார் விஸ்வநாத், சரவணன் சந்திரன், தமிழ்பிரபா, லஷ்மி சரவணக்குமார் ஆகியோரின் நாவல்கள் குறித்தும் விரிவான விமர்சனங்கள் உள்ளன. லஷ்மி சரவணக்குமாரின் ‘ரூஹ்’ நாவல் குறித்த விமர்சனப் பதிவு சிறப்பாக இருக்கிறது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மனின் ‘சூல்’ நாவலுக்கான விமர்சனப் பார்வையும் இந்த அலைவரிசையின் காத்திரமான முயற்சி. சோ.தர்மனின் இந்த நாவல், கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராம’த்துடன் ஒப்பிடப்பட்டிருப்பது சுவாரசியம். பெரியாரியவாதிகளை ‘சூல்’ நாவல் எப்படிச் சித்தரிக்கிறது என்றும், நாவலாசிரியர் சொல்லாமல்போன சங்கதிகளும் இந்த விமர்சனப் பார்வையில் கூறப்பட்டுள்ளன.

‘நாவல் ரிவ்யூ’ எனும் அலைவரிசையில் தேவன், நம்மாழ்வார் போன்ற கலவையான பலரின் நூல்கள் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. சசி வாரியர் எழுதிய ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ எனும் ஆங்கிலவழி மொழிபெயர்ப்பு நூல் குறித்த பதிவு இதில் உள்ளது. “இன்று தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், முன்பு திருவனந்தபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது அந்த சமஸ்தானத்தில் மரண தண்டனை கைதிகளைத் தூக்கிலிட்டுக் கொல்லும் வேலையைச் செய்துவந்த ஜனார்த்தனன் பிள்ளை என்பவரின் மனவேதனைப் பதிவுதான் இந்தப் புத்தகம்” எனத் திருத்தமான அறிமுகத்தை இந்த அலைவரிசை தருகிறது. நெம்புகோலை இயக்கிய பிறகு கயிற்றில் வெகுநேரம் துடித்துக்கொண்டே இருந்த தூக்குக் கைதிகளைப் பற்றிய ஜனார்த்தனன் பிள்ளையின் மனப்பதிவையும் தொகுப்பாளர் வாசித்துக் காட்டுகிறார்.

புத்தாக்க முயற்சி

நாவல்கள், சிறுகதைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பதிவுகள்தாம் யூடியூபில் அதிகமாகக் காணக் கிடைக்கின்றன. மாறாக ‘இலக்கியப் பெட்டி’ யூடியூப் அலைவரிசையில் கவிதைகள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. கவிஞர்கள் ஆனந்த், தேவதச்சன், நகுலன் ஆகியோரது கவிதைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தை தந்துள்ளார் இந்த அலைவரிசையின் தொகுப்பாளர். அந்தக் கவிதைகள் உருவாக்கிய மனப் பதிவை கவித்துவத்துடன் இதில் அவர் பகிர்ந்துள்ளார்.

சினிமா விமர்சனம், உணவு, பிராங்க் எனக் கொட்டிக்கிடக்கும் யூடியூப் அலைவரிசைகளுக்கு மத்தியில், இளைஞர்களின் புதிய முயற்சியின் மூலம் தமிழ் நூல் விமர்சனத்துக்கும் ஒரு தனித்த இடம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x