

கரோனா தொற்றால் இன்று பலருடைய வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. வீட்டுக்குள் முடங்கியிருக்கும் வாழ்க்கைக்கு ஏராளமானோர் மாறியிருக்கிறார்கள். ‘வீட்டிலிருந்தே வேலை’ எனும் புதிய பணிச் சூழலுக்குள் பலரும் புகுந்திருக்கிறார்கள். இப்படி வீடே உலகம் எனும் புதிய சூழலால் ஓரிடத்திலேயே வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு புறம் இரவில் தாமதமாகத் தூங்கி பகலில் தாமதமாக எழும் பழக்கமும் பெருகியிருக்கிறது. இப்படி ஓரிடத்திலேயே மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது அல்லது படுத்திருப்பது தீமையில் முடியலாம் என்கிற எச்சரிக்கை அலாரங்கள் அடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இதுபோன்ற சூழலில் ‘வெர்சுவல் ஒர்க்கவுட்’ என்கிற உடற்பயிற்சி உலகெங்கும் பிரபலமாகியுள்ளது. ‘வெர்சுவல் ஒர்க்கவுட்’ என்பது மெய்நிகர் உடற்பயிற்சி. இருந்த இடத்திலேயே நம் வசதிக்கேற்ப வியர்வை வெளியேறச் செய்யும் ஓர் உடற்பயிற்சி முறை. எளிமையான உடற்பயிற்சிகளை மெய்நிகர்வழியாகச் செய்யலாம். இன்று உடற்பயிற்சிகளைக் கற்றுத்தரும் ஜிம்கள் மூடியிருக்கும் சூழலில், பல ஜிம்கள் இந்தப் பாணியில் உடற்பயிற்சிகளை அளித்துவருகின்றன.
இதற்காக ஜிம்களை நாட வேண்டும் என்றில்லை. யூடியூபிலேயே ஏராளமான மெய்நிகர் உடற்பயிற்சி வீடியோக்கள் வரிசைக் கட்டுகின்றன. 7 நிமிடங்கள், 12 நிமிடங்கள், 15 நிமிடங்கள் எனத் தொடங்கி மெய்நிகர் உடற்பயிற்சி வீடியோக்கள் காணக்கிடைக்கின்றன. வீட்டிலேயே முடங்கிக்கிடப்போர் யூடியூபில் பார்த்து காலை, மாலை என இரு வேளையும் மெய்நிகர் உடற்பயிற்சிகளைச் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை தரும். முயன்று பாருங்களேன்!