

ஜெர்மனி ஒன்றியக் குடியரசின் மதிப்புறு தூதரும், திருவனந்தபுரத்தில் செயல்படும் ஜெர்மானியக் கலாச்சார மையமான கதே-ஸெண்டர்மின் தலைவருமான சையத் இப்ராஹிம், ஜெர்மன் மொழியில் எழுதிய பாடலுக்கு மலையாளி சகோதரிகளான ஆன்யா மோகன், அருணிதா மோகன் ஆகியோர் இசையமைத்தனர்.
சையத் இப்ராஹிம், கரோனா ஊரடங்கு காலத்தில் ஜெர்மானிய மொழியில் `விட்மங்’ என்னும் பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலை இளம் இசைக் கலைஞர்களைக் கொண்டு இசையமைத்துப் பாடவைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தவருக்கு, ஏற்கெனவே சமூக வலைதளங்களில் ஆங்கிலப் பாடல்களை இசையமைத்துப் பாடிப் பதிவேற்றிக் கொண்டிருக்கும் ஆன்யா, அருணிதாவைக் கொண்டே ஜெர்மன் பாடலுக்கான இசையை அமைக்கச் சொல்லலாம் என்று முடிவெடுத்தார்.
அதைத் தொடர்ந்து இருவருக்கும் தான் எழுதிய பாடலின் அர்த்தத்தையும் உச்சரிக்கும் விதத்தையும் கற்றுக்கொடுத்தார். பள்ளி மாணவிகளான அவர்களில் ஆன்யா பாடலுக்கான இசையை அமைக்க, அருணிதா பாடினார். சகோதரிகள் இசையமைத்துப் பாடிய விட்மங் ஜெர்மானியப் பாடல் ஜெர்மானிய கலாச்சார மையத்தால் யூடியூபில் உலக இசை நாளான ஜூன் 21 அன்று வெளியிடப்பட்டது. பாடலைக் கேட்டு உலகம் முழுவதும் இருக்கும் ஜெர்மானியர்கள் தங்கள் பாராட்டைப் பகிர்ந்துவருகின்றனர்.
இந்தியாவுக்கான ஜெர்மானியத் தூதர், “உலக இசை நாளில் மிகச் சிறந்த பெர்லினின் கோடை இசைப் பாட்டைக் கேளுங்கள்” என்று பாராட்டித் தன்னுடைய பிரத்யேகமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.