Published : 10 Jun 2021 17:30 pm

Updated : 10 Jun 2021 18:32 pm

 

Published : 10 Jun 2021 05:30 PM
Last Updated : 10 Jun 2021 06:32 PM

எஸ்.பி.பி.யின் பழைய மெலடியை மீட்டெடுக்கும் ‘காத்தாடி மேகம்’!

melody-king-spb

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி…


என்னும் பழைய பாடலில் வெளிப்படும் எஸ்.பி.பி.யின் குரல் இனிமையை, குழைவை இன்றைக்கும் சிலாகித்துப் பேசுபவர்களைப் பார்த்திருப்போம். அப்படியொரு அசாத்தியமான மெலடியை ‘ஸ்டார் மியூசிக் இந்தியா’ வெளியிட்டிருக்கும் ஒரு சுயாதீனப் பாட்டில் பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். குட்டி ரேவதி எழுத, விக்னேஷ் கல்யாணராமன் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் ‘காத்தாடி மேகம்’ என்னும் பாடல்தான் அது.

“தீராதா தூரங்கள் நீளாதா காலங்கள்

வான் போகும் மேகங்கள் போலானேன்

கால் போகும் தேசங்கள் நாம் போவோம் வா…”

என்று எஸ்.பி.பி. பல்லவியைத் தொடங்கும்போதே நாமும் காதலியின் விரல்பிடித்தபடி பயணிக்கத் தொடங்கிவிடுகிறோம்.

“காற்றாடி கீழே நான் வீழ்ந்தேனே

நீ வந்தாய் காற்றேகி நீந்தேனோ

கண்களுக்குள் பாரடி காணும் காட்சியே நீயடி..”

என்று கவித்துவமான வார்த்தைகளைப் பாட்டில் செதுக்கியிருக்கும் குட்டி ரேவதியிடம் இந்தப் பாடல் குறித்துப் பேசினோம்:

“இந்தப் பாடல் சுதந்திரமான இருவர் பற்றியது. ஆண் பாடணும். ஓர் அழகான நீண்ட விடுதலையான பயணத்துக்குத் தன்னுடைய தோழியை அழைக்கிறார். இப்படியாகத்தான் இந்தப் பாட்டுக்கான சூழலை எனக்குச் சொன்னார் விக்னேஷ். வார்த்தைகள் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்றார். அப்படியே எழுதிக் கொடுத்தேன். சில நாட்கள் கழித்து என்னிடம் பேசிய விக்னேஷ், இந்தப் பாடலை எஸ்.பி.பி. சாரை வைத்துப் பாடவைக்கப் போகிறேன் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எஸ்.பி.பி. எப்படிப்பட்ட பாடகர்.. அவரின் அசாத்தியமான திறமை எப்படிப்பட்டது என்றெல்லாம் எல்லோருக்குமே தெரியும். திரைப் பாடல் என்றால் அதற்கென்று ஒரு தயாரிப்பாளர் இருப்பார். இது ஒரு சுயாதீனப் பாடல் என்பதால் தயாரிப்பாளரும் கிடையாது. இது சாத்தியமாகுமா என்கிற கேள்வி எனக்கு இருந்தது. ஆனால், எஸ்.பி.பி. பாடிக் கொடுத்திருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தில் எப்படிப்பட்ட ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் நடக்கின்றன. தனி ஒருவரின் முயற்சிக்கும் திறமைக்கும் தீவிர ஆர்வத்தினாலும் எஸ்.பி.பி.யின் மனத்தைத் தொட்டு அவரைப் பாடவைத்திருக்கிறது. பயணம் என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம், அன்பைப் பகிர்வது என்பது போன்ற விஷயங்களை முன்னிறுத்தித்தான் பாடலை எழுதினேன்” என்கிறார் குட்டி ரேவதி.

‘சன் ரைசர்ஸ்’ ஹைதராபாத் அணிக்கான ஆன்தம் இசை, சூரியன் பண்பலைக்காக ஜிங்கில்ஸ் எல்லாவற்றுக்கும் விக்னேஷ் இசையமைத்திருக்கிறார். இதில் அனிருத், பென்னி தயாள், ஸ்வேதா மோகன், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலரும் பாடியிருக்கின்றனர். இது தவிர அருந்ததி, நாகினி, அலாவுதீன் தொடர்களுக்கான டைட்டில் பாடலையும் சிலவற்றுக்குப் பின்னணி இசையையும் வழங்கியிருக்கிறார். தற்போது ‘ஜாஸ்மின்’ என்னும் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். இது தவிர இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கவிருக்கிறார். அருண்ராஜா காமராஜாவின் சுயாதீனப் பாடல் ஒன்றும் இவர் இசையில் வெளிவரவிருக்கிறது.

“சுயாதீனப் பாடல் ஒன்றைத் தயாரிக்கும் விருப்பம் இருக்கிறது, அதற்குப் பாடல் எழுத முடியுமா என்று குட்டி ரேவதியிடம் கேட்டேன். அவரிடம் சொல்லும்போதே, இந்தப் பாடலை எஸ்.பி.பி. சார்தான் பாடப் போகிறார். அதனால், நல்ல தமிழில் வார்த்தைகள் எளிமையாக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்றேன். அவரும் மிகவும் அருமையான மொழிநடையில் பாடலை எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு அதற்கான இசையை அமைத்து முடித்தவுடன் எஸ்.பி.பி. சாரின் மேலாளரை இது விஷயமாகத் தொடர்புகொண்டேன். முதலில் சுயாதீனப் பாடல் என்றவுடன் வேண்டாம் என்று தெரிவித்தனர். அதன்பின் நான் பாடலையும் அதற்கான மியூசிக் டிராக்கையும் அனுப்புகிறேன். சார் கேட்கட்டும். கேட்டுவிட்டு என்ன முடிவு எடுத்தாலும் சரி என்று கூறினேன்.

அப்போது எஸ்.பி.பி. சார் அமெரிக்காவுக்கு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அந்தப் பாடல் வரிகளையும் பாடலுக்கான இசையையும் கேட்டபிறகு, பாடுவதற்குச் சம்மதித்தார். ஆனால், அப்போது இசை நிகழ்ச்சிகளுக்காக உலகின் பல பகுதிகளுக்கும் அவர் சென்றுகொண்டிருந்தார். மூன்று நான்கு மாதங்களுக்குப் பின் அவருடைய சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்று ரத்தானது.

அந்த இடைவெளியில் அவரின் அலுவலகத்தில் இருந்து எனக்கு எஸ்.பி.பி.சார் அந்தப் பாடலை அனுப்புவதாகத் தகவல் வந்தது. அவரின் வீட்டிலேயே பாடி எனக்கு அனுப்பினார். பாடலின் இரண்டு இடங்களில் எனக்குச் சில வார்த்தைகளை இம்ப்ரூவைஸ் செய்ய வேண்டி இருந்தது. அதையும் நான் கேட்டபடியும் அவருடைய பாணியிலும் இரண்டுவிதமாக இம்ப்ரூவைஸ் செய்த பதிவை எனக்கு அனுப்பி உதவினார். பாடலை அவர் முழுமையாகப் பாடும் காட்சியைத்தான் இந்தப் பாடலில் சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. ஆனால், அதற்கான படப்பிடிப்பை நடத்துவதற்குள் நிலைமை வேறுவிதமாக முடிந்துவிட்டது.

வெறுமனே அவரின் படங்களைச் சேர்த்து அந்தக் கழிவிரக்கத்தைப் பயன்படுத்தி இந்தப் பாடலை பிரபலப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால், ஒரு நீண்ட பயணத்துக்குத் தயாராகும் காதலர்களை வரைந்து அதை கிராஃபிக்காக இந்தப் பாடலுக்கான காட்சிகளாக்கி, நான் மிகவும் மதிக்கும் எஸ்.பி.பி. சாரின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களின் சார்பாக இந்தப் பாடலை அன்புக் காணிக்கை ஆக்கியிருக்கிறேன்” என்றார் விக்னேஷ் கல்யாணராமன்.

பாடலைக் காண:


தவறவிடாதீர்!

SpbOne minute newsSongTamil songsதமிழ்எஸ்பிபிபாடகர்இளைய நிலாகுட்டி ரேரவதிஇளைய ராஜா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x