இனி இணையத்திலும் விவாதிக்கலாம்!

இனி இணையத்திலும் விவாதிக்கலாம்!
Updated on
2 min read

சமூக வலைத்தளங்கள் எல்லாம், யார் வேண்டுமானாலும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொண்டுசேர்ப்பதற்குமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பிரபல வலைத்தளங்களில் பதிவுகளை எழுதுவதன் மூலமாகவும் காணொலிகள் மூலமாகவும் ஆடியோ மெசேஜ்களாகவும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்துவந்தது. தற்போது ட்விட்டர் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதியான ‘ஸ்பேசஸ்’ (Spaces) தொலைபேசி எண் போன்ற எந்தத் தொடர்பும் இல்லாமல் யாருடன் வேண்டுமானாலும் குரல்வழியில் உரையாடவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் வழிவகுத்துள்ளது.

பயன்படுத்துவது எப்படி?

சில மாதங்களாக சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த ‘ஸ்பேசஸ்’ உரையாடல் அரங்கை, யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்று ட்விட்டர் அண்மையில் அறிவித்தது. அதைத் தொடங்கி நடத்துபவர் ‘ஹோஸ்ட்’ ஆக இருப்பார்.

ட்விட்டர் செயலியில் வலது மூலையில் கூட்டல் ( ) குறி இருக்கும். சின்ன சின்ன வட்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வைர வடிவிலான ஐகானை அழுத்தினால் ‘ஸ்பேசஸ்’ அரங்கைத் தொடங்கிவிடலாம். அங்கே உரையாடலுக்கான தலைப்பைக் கொடுக்க வேண்டும். எந்தத் தலைப்பிலும், எதைப் பற்றியும் உரையாடலாம். உரையாடல் அரங்கைத் தொடங்குவதற்கு முன் உங்களைத் தவிர வேறு யாரெல்லாம் பேச்சாளர்களாகப் பங்கேற்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

அவர்களுடைய ‘புரொஃபைல் ஐடி’யை கிளிக் செய்து அவர்களைச் சக பேச்சாளர்களாகச் சேர்க்கலாம். உங்கள் ‘ஸ்பேசஸ்’ உரையாடலை ட்விட்டரில் இருக்கும் யார் வேண்டுமானாலும் கேட்க முடியும். யார் கேட்கிறார்கள் என்பதை கட்டுப்படுத்த முடியாது. கேட்பவர்கள் உரையாடலில் பங்கேற்க விரும்பினால், ‘ஹோஸ்ட்’ அதை அனுமதிக்கலாம். பேச விரும்புகிறவர்கள் அதைத் தெரிவிப்பதற்கான சாத்தியம் உள்ளது. தலைப்புக்குத் தொடர்பில்லாமலோ அநாகரிகமாகவோ பேசுபவர்களின் குரலை நிறுத்துவதற்கான வழியும் இதில் உள்ளது.

இது ரொம்ப முக்கியம்

‘ஸ்பேசஸ்’ உரையாடலை உடனடியாகத் தொடங்கலாம். குறிப்பிட்ட தேதி, நேரத்துக்குத் திட்டமிட்டு நடத்துவதற்கான வசதியும் உள்ளது. தேதி, நேரம் குறிப்பிட்டு அதற்கான இணைப்பை உங்கள் சமூக வலைத்தளக் கணக்குகளில் கொடுப்பதன் மூலம் இந்தத் தகவல் அதிகமானோரை சென்றடைய வைக்கலாம். அதிகப் பயனர்களைக் கேட்க வைக்கவும் முடியும். உங்கள் ‘ஸ்பேசஸ்’ உரையாடல் நடப்பது குறித்த தகவல் பல்லாயிரம் பயனர்களை அடைய வைப்பதற்கென்றே ட்விட்டரில் தனிப் பக்கங்களும் உள்ளன.

ராஜலட்சுமி
ராஜலட்சுமி

அதிகரிக்கும் தமிழ்

தற்போது ‘ட்விட்டர் ஸ்பேசஸ்’ தமிழகப் பயனர்களிடையே ட்ரெண்டிங்கில் உள்ளது. பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இதை ‘ஹோஸ்ட்’ செய்கிறார்கள், உரையாற்றுகிறார்கள். அண்மையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ‘டிஜிட்டல் யுகத்தில் கருத்து சுதந்திரம்’ என்னும் தலைப்பில் ஸ்பேசஸ் அரங்கில் உரையாற்றினார்.

தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ராஜலட்சுமி, தமிழகத்தில் இயங்கும் திருமண வரன் தேடும் இணையதளங்களினால் பாதிக்கப்பட்டோர் குறித்து ஒரு ‘ஸ்பேசஸ்’ அரங்கை கடந்த வாரம் ‘ஹோஸ்ட்’ செய்தார். “ஸ்பேசஸில் நீங்கள் என்ன தலைப்பைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். நான் தேர்ந்தெடுத்த தலைப்பு, அதிக இளைஞர்களைப் பாதித்த விஷயம் தொடர்பானது. நிறைய பேர் அதில் பங்கேற்று மனக் குமுறல்களைப் பகிர்ந்தனர். இந்த உரையாடலுக்கு ஒரு மேட்ரிமோனி நிறுவனத்திடமிருந்து எதிர்வினையும் வந்தது” என்கிறார் ராஜலட்சுமி.

என்ன பயன்?

இந்த ‘ஸ்பேசஸ்’ வசதி மூலம் என்ன பயன் கிடைக்கும்? “ஸ்பேசஸ் மூலம் கிடைக்கும் முதல் பயன் ட்விட்டரில் உங்களைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் கருத்துகளைப் பிரபலங்கள் உள்பட அதிகப் பயனர்களுக்குக் கொண்டுசெல்ல முடியும். தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்கள் ‘ட்விட்டர் ஸ்பேசஸ்’ உரையாடல்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்கள். உரையாடல்களை நடத்துவதன் மூலம் உங்கள் பேச்சுத் திறனும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஒரு நிகழ்ச்சிக்கு ‘ஹோஸ்ட்’டாக இருப்பதே மன நிறைவு அளிக்கும் விஷயம்.

ஆனால், அதேநேரம் மோசமான கருத்துகளைப் பகிர்வதற்கான வாய்ப்பாகவும் இது மாறிவருகிறது. அதற்கு வழிவகுக்காத வகையில் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதும் அநாகரீகமாக உரையாடுபவர்களை உடனடியாகத் தடுத்துநிறுத்துவதும் ஹோஸ்ட்டின் கடமை” என்கிறார் ராஜலட்சுமி.

ட்விட்டர் ஸ்பேசஸ் உரையாடல்களைக் கேட்பதற்குக் கட்டணம் நிர்ணயிப்பதற்கான வசதியையும் ட்விட்டர் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை ட்விட்டர் நிறுவனம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யூடியூப் போல பெருந்தொற்றுக் காலத்தில் ஜனநாயக உரையாடலுக்கான மிகப் பெரிய வெளியாக இருப்பதோடு, மற்றுமொரு வருமான வாய்ப்பாகவும் ட்விட்டர் ஸ்பேசஸ் மாறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in