

கரோனோ பாதுகாப்பு உடையுடன் இளம் மருத்துவர் பல மணி நேரம் பணியாற்றிய ஒளிப்படத்தை மருத்துவர் சோஹில், dr_sohil என்னும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பாதுகாப்பு உடையுடன் இருக்கும் ஓர் ஒளிப்படம், அதைக் கழற்றிய பிறகு வியர்வையில் குளித்திருக்கும் ஓர் ஒளிப்படம் என இரண்டையும் அண்மையில் பகிர்ந்து, ‘நாட்டுக்குச் சேவை செய்வதில் பெருமை’ என்கிற நிலைத்தகவலையும் இட்டிருந்தார். ட்விட்டரையும் தாண்டி இந்த ஒளிப்படம் வைரல் ஆனது. பல முன்னணி ஊடகங்கள் இதைச் செய்தியாகவும் வெளியிட்டன.
என்ன பாவம் செய்தது யானை?
உடுமலைப்பேட்டைக்கு அருகில் திருமூர்த்திமலைப் பகுதியில் காட்டு யானை ஒன்றை இளைஞர்கள் சிலர் தாக்கி விரட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இளைஞர்களின் தாக்குதலில் யானை பிளிறியபடி ஓடியது. இந்த வீடியோ வைரல் ஆகி, விமர்சனத்துக்கும் உள்ளானது. இப்போது இந்த இளைஞர்கள் கைது நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர். யானையைத் தாக்கிய இளைஞர்களின் நண்பர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்திருக்கிறார்.
90’ஸ் கிட்ஸ் எச்சரிக்கை!
பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வித்தியாசமான விளம்பரத் தட்டி ஒன்றை வைத்துள்ளனர். அது சென்ற வாரம் வைரலானது. தங்களுக்கு வரும் வரன் ஆலோசனைகளை உள்ளூரில் உள்ள சிலர் தவறாகச் சொல்லி தடுத்துவிடுவதாக அந்த விளம்பரத் தட்டியில் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி சொல்லியுள்ளனர். குறிப்பாக ‘ஒரே ஒரு டீக்கடை வைத்திருப்போர்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நற்பணி தொடர்ந்தால் ஒளிப்படத்துடன் விளம்பரத் தட்டி வைக்கப்படும் என்ற அன்பாகவும் அந்த இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.