Last Updated : 18 May, 2021 03:11 AM

 

Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

ஒலிம்பிக் நாயகர்கள்: முத்திரை பதிப்பாரா மூன்றாம் ஜாக்கி?

கடந்த ஆண்டு கரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக் போட்டிக்கு மிகத் தீவிரமாகத் தயாராகிவருகிறது. இந்தியாவிலிருந்து இதுவரை 95 பேர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறார்கள். பாய்மரப் படகு, வாள்வீச்சு போன்ற போட்டிகளிலும் இந்த முறை இந்தியா களம் காண உள்ளது. அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து ‘ஈக்வெஸ்ட்ரியன்’ எனப்படும் குதிரையேற்றத்திலும் இந்தியா களமிறங்க உள்ளது.

இந்தப் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இந்தியாவுக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார் 20 வயதான ஃபுவாத் மிர்சா. இதன்மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் பங்கேற்கும் முதல் இந்திய ஜாக்கி என்கிற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் பிரிவில் இவர் பங்கேற்க உள்ளார்.

2000-ம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்கில் இம்தியாஸ் அனீஸும், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் மறைந்த விங் கமாண்டர் லம்பாவும் முன்னதாகப் பங்கேற்றிருந்தனர். ஒலிம்பிக் குதிரையேற்றத்தில் கலந்துகொண்ட இரண்டு இந்திய ஜாக்கிகள் இவர்கள் மட்டுமே. தற்போது ஃபுவாத் மிர்சா தேர்வாகியிருக்கிறார்.

குதிரையுடன் நெருக்கம்

பெங்களூருவில் பிறந்த ஃபுவாத் மிர்சா, சிறு வயதிலிருந்தே குதிரைகளைச் சுற்றித்தான் வளர்ந்தார். கால்நடை மருத்துவரான அவருடைய தந்தை ஹஸ்நேய்ன் மிர்சா, குதிரைகளுக்குச் சிகிச்சையளிக்கும் பணிகளைச் செய்துவந்தார். அந்த நெருக்கத்தில் குதிரையேற்றம் ஃபுவாத்துக்குப் பரிச்சயமானது. தொடர்ந்து குதிரையேற்றப் போட்டிகளில் பங்கேற்றுவந்த ஃபுவாத், 2018-ல் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 36 ஆண்டு கழித்து ஆசிய குதிரையேற்றப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியரானார்.

இதேபோல 2019-ம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஃபுவாத் தகுதிபெற்றார். இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் குதிரையேற்றத்தில் பங்கேற்கும் முதல் ஆசியர் என்கிற சிறப்பையும் சேர்த்தே பெற்றிருக்கிறார் ஃபுவாத். பதக்கம் வெல்லும் கனவோடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காகக் காத்திருக்கிறார் இந்த ஜாக்கி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x