

கரோனா பாதிப்புகளை மையமாக வைத்து அதற்கான ஆற்றுப்படுத்தும் பாடலை ‘கிட்ஸ் Vs கரோனா’ என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கனடாவின் டி.எஸ். ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து யூடியூபில் வெளியிட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் சீனிவாசன் சோமசுந்தரம். பாடலை ரமேஷ் வைத்யா, பா.இனியவன் ஆகியோர் எழுதியுள்ளனர். நேர்த்தியான, நம்பிக்கை துளிர்க்கும் கதைசொல்லியாகப் பாடலுக்கான காட்சிகளை அஜயன் பாலா இயக்கியிருக்கிறார்.
கரோனா காலத்தில் குழந்தைகள் படும் அவஸ்தை களைத் துன்பியல் அனுபவமாகக் குழந்தைகளே வெளிப்படுத்துவது, உருக்கம். இனி செய்ய வேண்டியது என்ன என்பதைப் பொட்டில் அடித்ததுபோல் சொல்லும்
வரிகளோடு ஒலிக்கிறது கிட்ஸ் வெர்ஸஸ் கரோனா பாடல். ஒரே பாடலில் மூன்று வகைமையான இசையைப் புகுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.
‘கிருமியா விஷமியா உயிரை பறிக்கும் எனிமியா – தீ
நுண்மியாய் வருவியா உலகை முடக்கி அடிப்பியா’
- என்று கரோனா ஊரடங்கால் குழந்தைகள் வீட்டுக்குள் படும் பல்வேறு இடர்களைக் குழந்தைகளே பாடி ஆடுவதற்கு மேற்கத்திய பாணியில் இசை அமைந்திருக்கிறது. உருக்கமான வரிகளை சுர்முகி ராமன் பாடும்போது மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார்.
குரங்கில் பிறந்து
மனிதம் மறந்து
இயற்கை மொத்தமும் சிதைத்துவிட்டாய்..
இங்கு பார் மனிதா
விலங்கை ஒழித்து
காட்டை அழித்து
பெரும் நாசத்தை நீ இங்கு
விதைத்து விட்டாய்..
இனிவரும் காலங்கள்
மாறிடு நெஞ்சம் கொஞ்சம்!
இல்லையென்றால் மறுபடி
வந்திடும் வேறு வஞ்சம்!”
- என்று பாடலின் இறுதியில் சொல்லிசைப் போர் நடத்தும் பாடகரின் குரலுக்கு இணையாக இசையை மீட்டியுள்ளார் தாஜ்நூர். பாடலின் இறுதியில் நம்பிக்கை நாற்றை விதைக்கின்றனர். குழந்தைகளோடு ஸ்டன்ட் சில்வாவும் தன்னுடைய அட்டகாசமான பங்களிப்பை அளித்திருக்கிறார்.
காணொலியைக் காண: https://bit.ly/3tOZQO2