

நிர்பயா வழக்கில் முக்கியக் குற்றவாளி என்று கருதப்படுகிற அந்த இளைஞர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். குற்றம் நடந்த நாளில் 17 வயதான சிறுவனாக இருந்த அவர், தற்போது 20 வயது இளைஞனாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
அந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், இதுதொடர்பாக இளைஞர்கள் அதுவும் அந்த இளைஞரின் வயதையொத்த சில ஆண்களிடம் கருத்து கேட்டதிலிருந்து
ரா.ஆதிலிங்கேஷ், கல்லூரி மாணவர், கோவை
கண்டிப்பாக அவருக்கு கடும் தண்டனை வழங்கியே ஆக வேண்டும். இல்லையேல் இன்னும் நிறைய பேர் இதுபோன்ற செயலில் ஈடுபடத்தான் வாய்ப்பு அதிகம் ஏற்படும். 17 வயதில் தவறு செய்தால் ஒன்றிரண்டு வருடங்கள்தான் தண்டனை கிடைக்கும். அது பரவாயில்லை என நினைக்கும் மனபோக்குத்தான் அதிகமாகுமே தவிர குற்றங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை.
சி.விக்னேஷ்வரன், தூத்துக்குடி
இதுபோன்ற இளம் குற்றவாளிக்கென பிரத்யேகமாக சட்டத்தில் இடம் உண்டு. அவர்களின் இளமைக் காலத்தில் வெளியே சுதந்திரமாக 5 வருடமோ அல்லது 10 வருடமோ இருக்கலாம். குறிப்பாக நிபந்தனை அபராதத்துடன் பின்பு 30 வயதிற்கு மேல் அவரையும் மற்றவரைப் போல் கண்டிப்பாகத் கடும் தண்டனை ஆக வேண்டும். இல்லையேல் பலரும் இதுபோல தவறு செய்ய ஆரம்பித்து விடுவர்.
முத்துராஜா, கட்டிடப் பொறியாளர், கோவை
17 வயதுக்கும், 18 வயதுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. சட்டத்தின் வழியாகவே ஒருவன் தப்பிப்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இன்னும் எத்தனை நிர்பயாக்கள் வரும்வரை இந்தச் சட்டத்தைத் திருத்தாமல் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
இசக்கிராஜா, கங்கைக்கொண்டான்
அவனைச் சிறுவன் என்று சொல்வதற்கு அது ஒன்றும் தெரியாமல் செய்த குற்றம் அல்ல. அவன் இந்த நிலைமைக்கு ஆளானதற்கு அவன் குடும்பத்தாரும், சுற்றியுள்ள சமூகமும்கூட முக்கியக் காரணம். ஆகையால், அவனுக்கு சில உரிமைகளையும் ரத்து செய்ய வேண்டும்.
செல்வம், கல்லூரி மாணவர், நாகர்கோயில்
அந்த இளைஞனை விடுதலை செய்வது தவறு. மற்ற நான்கு குற்றவாளிகளுக்கும் என்ன தண்டனை வழங்கப்பட்டதோ, அதே தண்டனைதான் இளைஞனுக்கும் வழங்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் அவன் தொடர்ந்து இதே செயலைச் செய்யக்கூடும்.
ரகு, கல்லூரி மாணவர், சேரன்மகாதேவி
விடுதலை கொடுத்தது சரி. இவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனை தானாகவே கூனிக் குறுகிப்போகும் அளவுக்கு அரசாலும் சமூகத்தாலும் நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இவர்கள் மூலமாகப் பெரிய தொகையை வழங்க வேண்டும்.
ஹரிராம், கல்லூரி மாணவர், பாளையங்கோட்டை
விடுதலை கொடுத்தது தப்பு. இதைப் பார்த்து யாரும் திருந்தமாட்டார்கள். இதனால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மாதிரியான குற்றவாளிகளை முழுமையாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
ராஜேஷ் கண்ணா, கல்லூரி மாணவர், பாளையங்கோட்டை
அந்த இளைஞனை விடுதலை செய்தது சரிதான். அவனுடைய ஒளிப்படத்தை அனைத்து ஊடங்கள் மூலம் வெளியிட வேண்டும். அப்போது அவன் வெளியில் வந்து எந்த வேலையும் செய்யமுடியாது. யாரும் அவனுடன் பழகமாட்டார்கள். அந்தத் தனிமையே அவனைக் கொன்றுவிடும். விடுதலையே அவனுக்குத் தண்டனையாக மாறிவிடும்.