கலைடாஸ்கோப்: காதல் டாம் அண்ட் ஜெர்ரிகள்

கலைடாஸ்கோப்: காதல் டாம் அண்ட் ஜெர்ரிகள்
Updated on
2 min read

கரோனா ஊரடங்கு தொடங்கிய பிறகு திரையரங்குகளுக்கு ரசிகர்கள் கொண்டாட் டமாகப் போவது தடைபட்டுவிட்டது. ஆனால், எத்தனை நாளுக்குத்தான் நாலு சுவரையே பார்த்துக்கொண்டிருக்க முடியும் எனப் பலரும் இணையவழித் திரையில் மூழ்கிவிட்டார்கள். அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆந்தாலஜி குறும்படங்களைப் பெரிய இயக்குநர்களின் பொறுப்பில் ஒப்படைத்து எடுக்கும் அளவுக்கு இணையவழித் திரை வளர்ந்துவிட்டது. கடந்த ஓராண்டில் நிறைய குறும்படங்கள், ஆந்தாலஜி சீரீஸ் எடுக்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் நிரந்தர மூலப்பொருளாக இருக்கும் காதலின் வேறொரு பரிமாணத்தை எடுத்துச் சொல்கின்றன ‘மேட்பாய்ஸ்’ நிறுவனம் எடுத்துள்ள ஆந்தாலஜி சீரீஸ் வகையான ‘ஐ லவ் யூ, ஐ ஹேட் யூ’. இதுவும் காதல்தான், இப்படியும் காதலை வெளிப்படுத்த முடியும் என்பதை இன்றைய நவீன காதல் ஜோடிகள் – தம்பதிகள் இடையே எழும் பிரச்சினைகளைக் கொண்டு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஊடல் காதல்

ஐந்து காதலர்கள்/தம்பதிகள் இடையே மிகச் சாதாரணமாக எழும் ஊடல்/உரசல் எப்படி அவர்களுடைய மனங்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் கடந்துவந்த சம்பவங்களின் வழியாக மிக யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த யதார்த்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள காதல், வலி, பிடிப்பு, விட்டுக்கொடுக்காத தன்மை எனப் பல அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தை பிறந்த பிறகு பெண்களைப் பாதிக்கும் ‘போஸ்ட்பார்ட்டம்’, தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் விலகல், தனக்குரியதை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத மனத்தால் ஏற்படும் மோதல், கோபமின்றி இயல்பாக எதையும் கற்றுக்கொடுக்கத் தயாராக இல்லாத தன்மை, தன் இணையருக்குச் சமமாகத் தானும் இல்லையே என்கிற தாழ்வு மனப்பான்மை… இப்படி மிக யதார்த்தமான பிரச்சினைகளைப் பளிச்சென்று ஈர்க்கும் குறும்படங்களாக வடித்திருக்கிறார்கள்.

இளம் இயக்குநர்களின் சிக்சர்

தேவ், ஸ்ரீ கார்த்திக் தயாரித்துள்ள இந்த ஐந்து குறும்படங்களையும் விக்னேஷ் ராஜா, விநாயக் வைத்தியநாதன்,  கார்த்திக் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமில் வெளியான

ஆந்தாலஜி வரிசைகளில் சீனியர் இயக்குநர்களே சுவாரசியப்படுத்தவும் புதுமை படைக்கவும் திணறியதைப் பார்த்தோம். ஆனால், இந்த இளம் இயக்குநர்கள் ஒவ்வொரு படத்திலும் சிக்சர்களாக விளாசுகிறார்கள். மேக்கிங், ஒளிப்பதிவு, ஸ்டாக்கட்டோ குழுவின் இசை எனப் பல அம்சங்கள் இந்தப் படங்களைத் தனித்துவமாக்குகின்றன.

நாயகிகளில் பலர் நாம் ஏற்கெனவே அறிந்தவர்கள்தாம்: காயத்ரி, வித்யா பிரதீப், சம்யுக்தா விஸ்வநாதன், தேஜு அஸ்வினி, சம்யுக்தா. சீரீஸின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ், ஒரு குறும்படத்தின் இயக்குநர் விநாயக் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே இயல்பாக, யதார்த்தமாக நடித்துள்ளதும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுடன் நம்மை நாமே எளிதில் அடையாளம் காண முடிவதும் இந்தத் தொடரை வெற்றிகரமாக்குகின்றன.

தைக்கும் உண்மைகள்

இந்தத் தொடரில் சற்றே அசூயை ஏற்படுத்தக்கூடிய விஷயம், அப்பர் மிடில்கிளாஸ் தன்மையுடன் இருப்பதுதான். ஆனால், கதைப்போக்குகளும் அவற்றில் ஏற்படும் முடிச்சுகளும் நம் கவனத்தைக் கட்டிப்போட்டுவிடுகின்றன. நேரம் நழுவுவது தெரியாமல் (எட்டு நிமிடங்கள் முதல் 16 நிமிடங்கள் வரை கதைக்கேற்ப நீளம் மாறுபடுகிறது) கதை நகரும் அதேநேரம், வாழ்க்கையின் சில உண்மைகளை மனத்தில் தைப்பதுபோல் சொல்லிச் சென்றுவிடுகிறார்கள்.

குறும்படங்கள் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற நம்பிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு சந்தோஷமாக இந்தப் படங்களைப் பார்க்கலாம். கவுன்சலிங் சென்று இணையரைப் புரிந்துகொள்ள முட்டிமோதுவதைவிட, இந்தப் படங்களே இரண்டொரு விஷயங்களை நமக்குப் புரியவைத்துவிடுகின்றன.

‘ஐ ஹேட் யூ ஐ லவ்’ யூ தமிழ்ப் படத்தொடரைப் பார்க்க: https://bit.ly/2QT6BAu

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in