Last Updated : 20 Apr, 2021 03:14 AM

 

Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

இளமைக் களம்: சென்னை பிகிலு!

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம். கிரிக்கெட் வீரர்கள் கடவுளர்கள் என்று கூறப்படுவது உண்டு. அப்படியானால் உலகின் மதம், உலகின் கடவுளர்கள் யாரெனக் கேட்டால், சந்தேகமின்றி கால்பந்தும் கால்பந்து வீரர்களும்தாம்.

மேற்கத்திய நாடுகளில் கால்பந்து விளையாட்டு மிகப் பெரிய கொண்டாட்டம். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் கால்பந்தின் தாக்கம் குறைவுதான். இந்நிலையில், கால்பந்தில் தடம் பதிக்க வேண்டும் என்கிற நோக்கில் நீண்ட காலமாக உழைத்துவருகிறது சென்னை வியாசர்பாடியில் உள்ள எஸ்.டி.இ.டி.எஸ்., கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம்.

அழகான மைதானம்

பச்சைப் பசேலென்ற மைதானம், விளையாட்டு வீரர்களுக்கு உடை, காலணிகள், பயிற்சி அறை என அனைத்து வசதிகளுடன் காட்சியளிக்கிறது அந்த மையம். அந்த மாலை நேரத்தில் அனைவரும் விறுவிறுப்பாகப் பயிற்சியில் மூழ்கியிருந்தனர். சிறுவர், சிறுமியர்களுக்கென சிறு மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. கால்பந்து வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார் மையத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ். பயிற்சிக்கு இடையே தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“கால்பந்து விளையாட்டு அவ்வளவு எளிதல்ல. போட்டியின் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும். சிறு தவறுகூட அணியின் வெற்றி வாய்ப்பைப் பறித்துவிடும். ஒருவர் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் வாழ்நாளில் கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு சிறந்த ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்ள வேண்டும். ஆனால், இங்கே விளையாட வருவோர் ஏழை, எளிய குடும்பத்துப் பிள்ளைகள். எங்களால் முடிந்த அளவு சிறந்த பயிற்சியை அளிக்கிறோம். இன்னும் அவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு தேவைப்படுகிறது” என்கிறார் தங்கராஜ்.

உமாபதி, தங்கராஜ்

வடசென்னைவாசிகள்

பாமர மக்களுக்கும் கால்பந்து விளையாட்டு போய்ச்சேர வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த மையத்தைத் தொடங்கியவர் உமாபதி. சென்னையில் வருமான வரித் துறை ஆய்வாளராகப் பணியாற்றிவரும் உமாபதி, “எஸ்.டி.இ.டி.எஸ். கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் தொடங்கப்படுவதற்கு நானும் கால்பந்து வீரர் என்பதே காரணம்” என்று பேசத் தொடங்கினார். “விளையாட்டு இட ஒதுக்கீட்டில்தான் எனக்கு வருமான வரித் துறையில் வேலை கிடைத்தது. விளையாட்டு என் வாழ்வோடு கலந்தது. நான் பெற்ற அனுபவத்தை அடுத்தத் தலைமுறைக்கும் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும் என்பதே இந்த மையத்தின் நோக்கம். அதற்காக நான் எடுத்து வைத்த முதல் படிதான் இந்தப் பயிற்சி மையம்” என்கிறார் உமாபதி.

பொதுவாக வட சென்னை, வியாசர்பாடி என்றாலே சிலருக்கு நல்லவிதமாகத் தோன்றுவதில்லை. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தினக்கூலிகள்தான். சிலருக்குத் தங்களுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நேரம் இல்லாததால், சில தவறான பழக்கங்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர். அவற்றிலிருந்து அவர்களை மீட்கவும் எட்டாக்கனியாக இருந்த கல்வியை வழங்கி நல்வழிப்படுத்தவும் வேண்டும் என்கிற எண்ணம் உமாபதிக்கு வந்துள்ளது.

கால்பந்து ஹீரோக்கள்

1997ஆம் ஆண்டு பத்துக்கும் குறைந்த மாணவர்களுடன் இந்த மையம் தொடங்கப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கை 350-ஐத் தொட்டுவிட்டது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கே பயிற்சிபெற்றிருக் கிறார்கள். “எங்களுக்கு இன்னும் சவாலாக இருப்பது மாணவர்களின் குடும்பப் பின்னணிதான். இங்கே வரும் மாணவர்கள் பலர் தாய், தந்தையை இழந்தவர்கள். கால்பந்து விளையாட்டு என்பது உடல், அறிவுத்திறன் சார்ந்தது. ஒரு கால்பந்து வீரர் தினமும் இரண்டு வேளை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சில மாணவர்களின் குடும்பப் பின்னணியினால் ஊட்டச்சத்து நிறைந்த உணவு அவர்களுக்குச் சரிவர கிடைப்பதில்லை” என்று வருந்துகிறார் உமாபதி.

இந்த மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதுவரை பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை எனப் பல நாடுகளுடன் விளையாடியுள்ளனர். 2010ஆம் ஆண்டு ஸ்வீடனுடனான போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர். ஆசியக் கண்டத்தில் எந்த அணியும் வெல்ல முடியாததை, இங்கே பயிற்சி பெற்ற மாணவர்கள் சாதித்துள்ளனர். தற்போது இங்கே பயிற்சி பெற்றுவரும் கார்த்தி என்கிற வீரர் மூன்று முறை ஸ்பெயின் அணியுடன் விளையாடியுள்ளார். நந்தகுமார் என்கிற வீரர் தற்போது இந்திய அணிக்காக விளையாடிவருகிறார்.

மாறிய வாழ்க்கை

“பல நாடுகளில் சாதனை புரிவதற்காக கால்பந்து விளையாடி வருகின்றனர். இங்கோ அது ஒரு வாழ்க்கை விளையாட்டு. இந்த விளையாட்டு கடந்த 20 ஆண்டுகளில் பல மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. எனவே, கால்பந்து விளையாட்டுக்கு அரசு அதிகக் கவனம் கொடுக்க வேண்டும். இங்குள்ள மாணவர்களுக்குத் தொண்டு நிறுவனங்களும் துணை நின்றால் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்” என்று குறிப்பிடுகிறார் உமாபதி.

சக்கரங்களில் சுழலும் வாழ்க்கைக்கு நடுவில் சுழலும் கால்பந்தைப் பலரது வாழ்க்கையாக மாற்றியமைத்த உமாபதியின் கனவு நிச்சயம் ஒரு நாள் வெல்லும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x