

ஆந்திராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாலம்குரு என்னும் கிராமத்தில் வாக்களித்த காசி வேங்கடரமணா என்னும் இளைஞர், தான் வாக்களிப்பதை செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இது வைரல் ஆக, அது சட்டவிரோதமானது என அவரது வாக்கைச் செல்லாதது என்று கிழக்கு கோதாவரி மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவித்துவிட்டார். இப்போது அவருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. தமிழகத்தின் வில்லிபுத்தூரில் இளைஞர்கள் சிலர் இதுபோல் வாக்களிப்பதை வீடியோ பதிவுசெய்ததும் வைரல் ஆகி சர்ச்சை ஆனது.
பி.எம்.டபிள்யு. பைக் பராக்
உலகப் பிரசித்திபெற்ற பி.எம்.டபுள்யூவின் புதிய மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் வடிவமைத்திருக்கிறார். D 05T எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளை கான்பூரில் உள்ள தேசிய வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவரான நீரஜ் ஜவேல் வடிவமைத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் தமிழகப் படை
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பாய்மரப் படகுப் போட்டிக்குச் சென்னையைச் சேர்ந்த கே.சி. கணபதி, வருண் தாக்கர், நேத்ரா குமணன் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர். இவர்களுடன் மகாராஷ்டிரத்தில் வசிக்கும் தமிழரான விஷ்ணுவும் இந்தப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
தொகுப்பு: ஜெய்