

கடந்த 15-ம் தேதி பயங்கரவாதிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள். பாரீஸ் நகரத்தின் இசை அரங்கம், கால்பந்து மைதானம், ஓட்டல்கள் உள்ளிட்ட 6 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் பாரீஸ் நகரம் சீர்குலைந்தது.
இந்தச் சம்பவத்தால் உலகம் முழுவதும் அதிர்ச்சிக்குள்ளானது. சமூக வலைதளங்களில் அதன் எதிரொலி தென்பட்டது. ஃபேஸ்புக்கில் தங்களது புரொஃபைல் படத்துக்கு மேலே மூன்று நிறங்களாலான பிரான்ஸ் கொடியைப் படரவிட்டார்கள். படபடவெனப் பலர் தங்கள் புரொஃபைல் பிக்சரை மாற்றிக்கொண்டார்கள். தீவிரவாதத் தாக்குதலுக்கான கண்டனமாகவும், பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவுக் குரல் என்றும் அது பார்க்கப்பட்டது.
அடிக்கடி தங்கள் புரொஃபைல் படத்தை மாற்றும் வழக்கத்தைக் கொண்ட இளம்தலைமுறையும் ஏனையோரும் துள்ளியெழுந்து படத்தை மாற்றினார்கள். நண்பர்களும் ஆர்வத்துடன் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் வாரி இறைத்தார்கள். கமெண்ட்டுகளில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தும் நடந்த சம்பவத்தைக் கண்டித்தும் பலர் பதிவிட்டார்கள். படங்களை மாற்றிய, படங்களை லைக்செய்த, அவற்றுக்கு கமெண்ட் போட்ட எவ்வளவு பேருக்கு பிரான்ஸில் நடைபெற்ற தாக்குதல் பற்றிய முழு விவரம் தெரியும் என்பது கேள்விக்குறிதான்.
ஆனால் ஏதோ தாக்குதல், எல்லோரும் புரொஃபைல் படத்தை மாற்றுகிறார்கள் நாமும் மாற்றுவோம் என்னும் எண்ணத்திலேயே படத்தை மாற்றுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அது அடையாளம் தேடும் முயற்சியின் ஓர் அங்கம் என்ற அளவிலேயே ஈடேறியிருக்கிறதோ என்று நினைக்க வைக்கிறது இந்தச் செயல்.
படத்தை மாற்றிய எல்லோரும் இந்தத் தாக்குதலுக்கு எதிரான மனோபாவம் கொண்டிருக் கிறார்கள் என்றோ, பிரான்ஸில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான மனநிலை கொண்டிருக்கிறார்கள் என்றோ புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் படத்தை மாற்றும் செயல் அதைத்தான் குறிக்கிறது. அதைக் குறைந்தபட்ச ஒரு கவன ஈர்ப்பாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். இளைஞர்களின் பணி இத்துடன் முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைத்துவிட்டால் அது ஆரோக்கியமானதாக அமையுமா? எங்கேயோ பிரான்ஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு இங்கிருந்து இவர்கள் என்ன செய்ய முடியும் எனத் தோன்றலாம்.
ஆனால் அப்படியொரு சம்பவமோ, தாக்குதல் நிகழ்ச்சியோ தான் இருக்கும் பகுதியில் நேர்ந்துவிடத் தான் ஒருபோதும் காரணமாகிவிடக் கூடாது என்னும் எண்ணம் இளையோர் மனத்தில் ஏற்பட்டுவிட்டாலே போதும். இப்படியான தாக்குதல்கள் நடைபெறும் சாத்தியமில்லை. ஏனெனில் பெரும்பாலான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடுவோர் இளைஞர்கள்தான் என்பது நாம் அறிந்த சேதிதான். மற்றபடி புரொஃபைல் படம் மாற்றுவதன் மூலம் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைத்து அதை ஒரு கொண்டாட்டத்தின் வடிகால் போல் மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை.