

ஒரே நாளில் விளையாட்டு உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி. பஞ்சாப்பில் நடைபெற்ற தேசியத் தடகளப் போட்டியில் முன்னாள், இந்நாள் வீராங்கனைகளின் சாதனைகளை மின்னல் வேக ஓட்டத்தால் ஓரங்கட்டி, புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் இந்தத் தங்கத் தமிழ்ச்சி!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழக அணி சார்பில் திருச்சியிலிருந்து 20 பேர் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தனலட்சுமி (22). சில தினங்களுக்கு முன்பு 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் அவர் பங்கேற்றார். இந்தப் பிரிவில் ஆசியத் தடகள சாம்பியன்களான டுட்டி சந்த், ஹிமா தாஸ் போன்ற முன்னணி வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
பின்னுக்குத் தள்ளினார்
இப்போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடிய தனலட்சுமி, முன்னணி வீராங்கனைகளை முந்திக்கொண்டு முதலிடத்துக்கு வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். டுட்டி சந்த், ஹிமா தாஸ் போன்ற சாம்பியன் வீராங்கனைகளையே வீழ்த்திய தனலட்சுமியின் திறமையைக் கண்டு அப்போதே பலரும் வியந்தனர். அந்தச் சாதனையின் சுவடே இன்னும் மறையவில்லை. அதற்குள் முன்னாள் தடகள சாம்பியன் பி.டி. உஷாவின் நீண்ட நாள் சாதனையையும் இதே தொடரில் தகர்த்திருக்கிறார் தனலட்சுமி.
மார்ச் 19 அன்று நடைபெற்ற 200 மீ. ஓட்டப்பந்தயத்தின் தகுதிச் சுற்றில் பங்கேற்ற தனலட்சுமி, இலக்கை 23.26 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையைப் படைத்திருக்கிறார். 1998ஆம் ஆண்டில் இதே பிரிவில் பி.டி. உஷா 23.30 விநாடிகளில் இலக்கைக் கடந்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 23 ஆண்டுகளாக நீடித்துவந்த இந்தச் சாதனையை முறியடித்து, மலைக்க வைத்திருக்கிறார் தனலட்சுமி. இப்போட்டியிலும் பங்கேற்ற ஹிமா தாஸால், இரண்டாமிடத்தையே பிடிக்க முடிந்தது.
யார் இந்த தனலட்சுமி?
திருச்சி குண்டூர் பகுதியில் வசிக்கும் தனலட்சுமிக்கு இரண்டு தங்கைகள். இளம் வயதிலேயே தந்தையை இழந்து வறுமையின் பிடியில் சிக்கிய தனலட்சுமியையும், அவருடைய தங்கைகளையும் அம்மாவின் இடைவிடாத உழைப்புதான் முன்னேற்றியது. கஷ்டப்பட்டு மூன்று பெண் பிள்ளைகளையும் படிக்கவைத்தார் அவருடைய அம்மா. இயல்பாகவே அதிவேகமாக ஓடுவதில் அசாத்திய திறமையைப் பெற்றிருந்த தனலட்சுமி, பயிற்சியாளர் மணிகண்டன் ஆறுமுகத்தின் கண்ணில் பட்டார். அவருடைய பயிற்சியும் முயற்சியுமே தடகளத்தில் தனலட்சுமி முன்னேற உதவியிருக்கிறது.
ஒரே தொடரில் முன்னாள், இந்நாள் சாம்பியன்களை ஓரங்கட்டிய தனலட்சுமி, தடகளப் போட்டிகளின் புதிய சாதனை மங்கையாக உருவெடுத்திருக்கிறார். மின்னல் வேகத்தில் ஓடும் தனலட்சுமியின் அசாத்தியத் திறமை, அவரை இன்னும் உச்சத்துக்கு இட்டுச்செல்லும்!