Published : 27 Nov 2015 11:57 AM
Last Updated : 27 Nov 2015 11:57 AM

உறவுகள்: சொந்தக் காலில் நிற்பதே மரியாதை!

வணக்கம் அம்மா. நான் 22 வயதுப் பெண். நான் பட்டப்படிப்பு முடித்துவிட்டுத் தற்போது போட்டித் தேர்வுகளுக்காகத் தயார் செய்துவருகிறேன். நல்ல ஒரு வேலை கிடைத்தால் அதில் வரும் ஊதியத்தை வைத்து என் வீட்டையும் கவனித்துக் கொண்டு மேற்படிப்பும் படிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.

ஆனால், எனக்குத் திருமணம் முடித்து வைக்க என் வீட்டில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஒருவர் என்னைப் பெண் பார்த்துவிட்டுப் போனார். அவர் மஸ்கட்டில் பணியாற்றுகிறார். திருமணத்துக்குப் பிறகு நானும் அவருடன் மஸ்கட்டுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. இதனால் அவருக்கே என்னை மணமுடித்து வைக்க முடிவு செய்துள்ளார்கள்.

எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று எனது எண்ணத்தை எனது பெற்றோருக்குத் தெரிவித்தும் பயனில்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன். எனக்கு ஒரு நல்ல வழி சொல்லவும்.

நவீன காலத்து ‘கேரியர் வுமனா'க (career woman) உருவெடுக்க விரும்பும் தோழியே! உங்கள் ஆசை நியாயமானதுதான். திருமண விஷயத்தை உங்கள் பெற்றோர் தரப்பிலிருந்து பார்க்கலாமா?

உங்கள் பின்னணி எதுவும் எனக்குத் தெரியாவிட்டாலும், மகளுக்கு மணம் முடிக்கும் கடமை அவர்களை உந்தலாம். உங்களுக்கு ஒரு அண்ணனோ, தங்கையோ இருந்தால் அவர்கள் திருமணம் உங்களால் தாமதமாகக் கூடாதென்பதற்காகவே உங்களை அவசரப்படுத்தலாம். அதிலும் ஒரு நல்ல மாப்பிள்ளை அமையும்போது கைநழுவவிட அவர்கள் மனம் ஒப்புமா?

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழ - நீங்கள் விரும்புவது, அவர்கள் விரும்புவது இரண்டும் நடக்க - ஒரு யோசனை. நீங்கள் மணக்கப்போகும் நபரிடம் பேசி, மணமான பின் நீங்கள் படிக்க அனுமதி கோருங்கள். அனுமதி கிடைக்கலாம். அல்லது அவர் உங்களை நிராகரித்துவிடலாம். ஏன் நிராகரித்தார் என்ற உண்மை வெளிவரும்போது உங்கள் தலை உருளும்.

பெற்றோர் கோபம் அடங்கிய பின், உங்களை மணம் செய்துகொள்பவர் உங்கள் மேற்படிப்புக்கு ஒப்புக்கொண்டால்தான் மணப்பீர்கள் என்று வலியுறுத்திக் கூறிவிடுங்கள். உங்கள் குடும்பப் பொருளாதார நிலையை உயர்த்த உடனடியாக ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து கொள்ளுங்கள். கூடவே நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாரிப்பது போன்ற முயற்சிகள் தொடரட்டும்.

பெற்றோர் உங்கள் நிபந்தனையை வரும் மாப்பிளையிடமோ, அவரது பெற்றோரிடமோ சொல்லாமல் விட்டுவிடலாம். ஆனால் மாப்பிள்ளையிடம் நீங்கள் பேசும்போது சொல்லிவிடுங்கள். பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்வது உங்கள் சாமார்த்தியம். உங்கள் பெற்றோருக்கு எதிராக உங்களைத் திருப்பிவிடுவது என் நோக்கம் அல்ல. ஆனால் பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதுதான் அவர்களுக்கு மரியாதை. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். துணிவே துணை!

நான் 24 வயதுப் பெண். நான் ஒருவரை மனதாரக் காதலித்தேன். அவரும் என்னைக் காதலித்தார். அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தேன். அதனால் என்னையே இழந்தேன். நாங்கள் பல நாட்கள் தனிமையில் சந்தோஷமாக இருந்தோம்.

நாங்கள் இருவரும் காதலிப்பது எங்கள் இரு வீட்டாருக்கும் தெரியும். ஆனால் இன்னும் நேரடியாகப் பார்த்துப் பேசவில்லை. இந்நிலையில், அவர் வீட்டில் வேறு பெண் பார்ப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

அவரிடம் நான் என்னை இழந்த விஷயம் இன்னும் எங்கள் இரு வீட்டாருக்கும் தெரியாது. ஒரு முறை அவரின் வீட்டுக்கு நான் நேரடியாகச் சென்று நாங்கள் இருவரும் காதலிப்பதைக் கூறினேன். ஆனால் ‘அந்த' விஷயத்தை நான் சொல்லாமல் மறைத்துவிட்டேன். அவர் வீட்டில், ‘உன் பெற்றோர்களை அழைத்து வா. பிறகு பேசலாம்' என்று சொல்லிவிட்டார்கள்.

என் வீட்டில் இந்த விஷயத்தைச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது. அவரை வந்து என் வீட்டில் பேசச் சொன்னால், அதற்கு அவர் மாட்டேன் என்கிறார். என்ன செய்வது என்று எனக்கு எதுவும் புரியவில்லை. ரொம்பக் குழப்பமாக உள்ளது. எனக்கு ஒரு தீர்வு சொல்லவும்.

இரு குடும்பங்களும் சம்மதம் கொடுப்பதில் தடங்கல் இல்லை என்று நம்புகிறேன். ஜாதியும், சம்பிரதாயங்களும் வேறு வேறோ? திருமணப் பேச்சை யார் முதலில் ஆரம்பிப்பது என்பதில் இரு குடும்பமும் கவுரவம் பார்த்துக்கொண்டு ஒத்திப்போட்டுக் கொண்டிருக்கிறீர்களோ?

உங்களால் நடந்ததைக் கூறவும் முடியவில்லை. இப்போது உங்களுக்குச் சாதகமாக ஒரு நெருக்கடி வந்திருக்கிறது. காதலன் வீட்டில் அவருக்குப் பெண் பார்க்கிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி, உங்கள் பெற்றோரை அவசரப்படுத்தலாம். அவர்கள் மசியவில்லையென்றால், உணர்வுபூர்வமாக அவர்களை நீங்கள் மிரட்டிப்பார்க்கலாம். அதுவும் பலனளிக்கவில்லை என்றால், காதலனை உங்கள் வீட்டிற்கு வரவழைத்து உங்கள் மீது பழிபோடாமல் நடந்தவற்றிற்கு முழுபொறுப்பேற்று உங்கள் பெற்றோரைத் தன் வீட்டிற்கு அழைக்கச் சொல்லுங்கள்.

வீட்டில் உங்களுக்கு நிச்சயம் தரும அடி விழும். ஆனால் அதன் பின், உங்கள் பக்கம் ஸ்ட்ராங் ஆகிவிடும். இந்தக் காரணத்தாலேயே காதலனுக்கே மணம் முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறதல்லவா?

திருமணமாவதற்கு முன் இருவரிடையே சேர்க்கை நடந்துவிட்டதால் பாதிப்பு உங்களுக்குத்தான். அதை உணர்ந்து காதலன் உங்களுக்காகத் துரித கதியில் செயல்பட வேண்டாமா?

காதலிக்கும் காலத்தில் ஏற்படும் கிறக்கம், காதலரின் நெருக்கம், மூளையில் ஏற்படும் வேதியல் பாதிப்பு, தொடுவதால் ஏற்படும் கிளர்ச்சி இவையெல்லாம் உடலுறவுக்குத் தூண்ட, சிந்திக்க நேரமே இல்லாமல் அது நடந்துவிடும். முதல்முறைதான் குற்ற உணர்வு அரிக்கும். அதன் பின், மனம் பல நியாயங்களைச் சொல்லி சமாதானம் அடைந்துவிடும்.

மேலை நாட்டுச் சமூக அமைப்பு மாதிரியல்ல, நமது நாட்டில். இங்கு வாலிப வயதுக் காதல் வெல்லும் எனும் உத்தரவாதம் கிடையாது. ஏனெனில் வேறு பல விசைகள் எதிராக இயங்கித் தோற்கவும் வாய்ப்புண்டு. இது புரிந்தால் காதலர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். காதலரைச் செயல்பட நெருக்குங்கள். இன்றைய நிலைமைக்கு அவருடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x