சாலையோர உணவகங்களைக் கண்டுபிடிக்கும் செயலி

சாலையோர உணவகங்களைக் கண்டுபிடிக்கும் செயலி

Published on

பிரபலமான பல அடையாளங்கள் சென்னைக்கு உண்டு. அதில் முக்கியமான அடையாளமாக அதன் சுவையான சாலையோர உணவகங்களைச் சொல்லலாம். ஆனால், சென்னை போன்ற பெருநகரத்தில் எந்தச் சாலையில் எந்தக் கடையில் சுவையான சமோசா கிடைக்கும்? எங்கே சுடச் சுட ருசியான புதினா சட்னியுடன் ஆம்லெட் கிடைக்கும்? என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பது சற்று கடினமான விஷயம்தான்.

சென்னைவாசிகளின் இந்தக் கஷ்டத்தை மனதில் வைத்துத்தான், சுவையான, தரமான சாலையோர உணவகங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு செயலியை ஆறு பேர் கொண்ட குழு உருவாக்கியிருக்கிறது. ‘ஃபைண்ட் எ கடை’ (Find A Kadai) என்னும் இந்தச் செயலி சமீபத்தில் ‘ஆப்ஸ் பார் சென்னை’ (Apps for Chennai) போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறது.

எப்படி உருவானது?

ரஜோஷி, கார்த்திக், வால்டர், சரத் குமார், தன்மய் கோபால், ஹர்ஷித் என ஆறு பேரும் சேர்ந்துதான் ‘ஃபைண்ட் எ கடை’ செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். ‘34 கிராஸ்’ என்னும் செயலிகளை வடிவமைக்கு நிறுவனத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாகப் பணியாற்றுகின்றனர். ரஜோஷியும், தன்மய் கோபாலும் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

“நாங்கள் ‘நைட் ஷிப்ட்’ வேலை செய்யும்போது, பெரும்பாலும் சாலையோரக் கடைகளில்தான் சாப்பிடுவோம். அப்போது, ஒருநாள் ஆழ்வார்பேட்டையில் ஒரு தள்ளுவண்டி கடையில் சுடசுட புதினா சட்னி தடவிய சுவையான ஆம்லெட்டை சாப்பிட்டோம். அந்தத் தள்ளுவண்டிக்காரர் தினமும் அங்கே இரவில் மட்டும் கடை போடுவதை கவனித்தோம். பத்து, பதினைந்துபேர் கொண்ட கூட்டம் அந்தத் தள்ளுவண்டியைச் சுற்றி அந்த நள்ளிரவிலும் இருந்தது. அப்போதுதான், நிறையப் பேருக்கு இந்த மாதிரி குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இயங்கும் ருசியான உணவு வழங்கும் சாலையோர கடைகளைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதற்குப் பிறகே, ‘ஃபைண்ட் எ கடை’ செயலி உருவாக்கும் எண்ணம் எங்களுக்கு வந்தது” என்று சொல்கிறார் ரஜோஷி.

எப்படி பயன்படுகிறது?

ஆண்டராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு ‘கிரவுட் சோர்ஸ்டு’ (Crowd Sourced App) என்பதால் இதில் சுவையான, தரமான சாலையோரக் கடைகளைப் பற்றிய தகவல்களை யார் வேண்டுமானாலும் இணைக்கலாம்.

“பொதுவாக, சாலையோர உணவகம் என்றாலே, அங்கே சாப்பிடும் உணவு சுகாதாரமாக இருக்காது என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. அந்த எண்ணத்தைப் போக்குவதற்காகவே, இந்தச் செயலியில் இணைக்கப்படும் சாலையோர கடைகளுக்கு ‘சுகாதாரத்தை’ முக்கியக் காரணியாக வைத்து வடிவமைத்திருக்கிறோம். ஒரு சாலையோர உணவகத்தை இதில் இணைப்பதற்குமுன், அங்கே சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறதா, குப்பைத் தொட்டி இருக்கிறதா என்னும் அடிப்படை விஷயங்களை சரி பார்த்த பிறகுதான் இணைக்கிறோம்” என்று சொல்கிறார் ரஜோஷி.

இதுவரை, சென்னையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களை அதன் படங்களுடன் இந்தச் செயலியில் சேர்த்திருக்கிறார்கள். பெரும்பாலான, சாலையோர உணவகங்களுக்குப் பெயர் இருக்காது என்பதால், அந்தச் சாலையை போட்டோ எடுத்து ‘அப்லோட்’ செய்தால், அங்கேயிருக்கும் கடைகளை அறிந்துகொள்ளும்படி இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், சாப்பிடுவதற்கு இருநூறு ரூபாய் வரை செலவாகும் சாலையோர உணவகங்கள் மட்டுமே இந்தச் செயலியில் சேர்க்கப்படுகின்றன. பழச்சாறு கடை, டீ-காபி கடை, ஸ்நாக்ஸ் கடை, டிபன்-சாப்பாடு கடை என நான்கு வகையான கடைகளை இந்தச் செயலியின் உதவியோடு தேடிக்கண்டுபிடிக்கமுடியும்.

அடுத்து என்ன?

‘ஃபைண்ட் எ கடை” செயலியில் அடுத்த ஆறு மாதத்துக்குள் ஆயிரம் சாலையோர உணவகங்களை இணைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். விரைவில் ஐஓஎஸ் வெர்ஷனிலும் வெளியிடப்படவிருக்கிறது.

“பத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ஒரு கடையைத் தேடினால், அதை அந்தக் கடை நடத்துபவருக்குத் தமிழில் ‘எஸ்எம்எஸ்’ செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இதனால் கடை நடத்தபவர் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுவதைத் தவிர்க்கலாம். இவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, சாலையோர உணவு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், கடை நடத்துபவர்களுக்கும் ஏற்படுத்துவதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று சொல்கிறார் ரஜோஷி.

மேலும் விவரங்களுக்கு: >http://www.findakadai.in/

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in