

திருநங்கை, திருநம்பி உள்பட பால்புதுமையருக்காக மதுரை அணியம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டுவரும் மின்னிதழ் `பால்மணம்'. கடந்த ஓராண்டாக மின்னிதழ்களில் வெளிவந்த படைப்புகள் தொகுக்கப்பட்டு `பால்மணம்' எனும் பெயரிலேயே சமீபத்தில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக அச்சு ஊடகம், மின்னிதழ் ஊடகங்களில் நூலைப் படிக்கத்தான் முடியும். ஆனால், பால்மணம் நூலை கேட்கவும் முடியும் என்பதுதான் புதுமை! பால்மணம் மின்னிதழ் கட்டுரைகளைப் பேசிப் பதிவுசெய்து யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார்கள். இந்த முயற்சியில் அணியம் அறக்கட்டளையோடு துல்கல் நூலகக் குழுவும் இணைந்து பங்களித்துவருகிறது.
“என்னுடைய பாலினம், என்னுடைய பாலீர்ப்பு குறித்த புரிதலை ஆழப்படுத்திக் கொள்வதற்கும் என்னுடைய ஆவணப் படம் குறித்த ஆய்வுக்காகவும் `லெஸ்பியன்' என்னும் வார்த்தையை கூகுளில் தேடுவதற்கே நான் தவித்துப் போன காலம் ஒன்றுண்டு. இந்தப் பின்னணியில் `பால்மணம்' நூல் வெளியிடப்படுவது மகிழ்ச்சியான தருணம். நமக்கான புத்தகங்கள் கிடைக்கவில்லையென்றால் நாமே அந்தப் புத்தகங்களை எழுதுவோமே என்கிற அடிப்படையில் உருவான நூலாகவே இதைப் பார்க்கிறேன்” என்கிறார் எல்.ஜி.பி.டி. செயற்பாட்டாளரும் ஆவணப்பட இயக்குநருமான மாலினி.
பால்புதுமையரே எழுதியிருக்கும் கட்டுரைகள், பலதரப்பட்ட துறை சார்ந்த திருநங்கைகளின் நேர்காணல்கள், பால்புதுமையருக்காகச் செயல்படும் தன்னார்வ அமைப்புகள், சிறுகதைகள், கவிதைகள், பால்புதுமையர் குறித்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்கள் மீதான விமர்சனம், பால்புதுமையருக்கு இழைக்கப்படும் மருத்துவரீதியான அநீதிகள் எனப் பல பிரிவுகளில் விரிகின்றன கட்டுரைகள். பால்புதுமையரின் உலகத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் எந்தவொரு வாசகருக்கும் இந்த நூல் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும்.
பால்மணம் இதழை நூல் வடிவில் படிக்கும் அதே வேளையில் ஒலிஒளி வடிவிலும் யூடியூபில் பார்ப்பது புதிய அனுபவத்தைக் கொடுக்கத் தவறவில்லை.
பால்மணத்தைக் கேட்க: https://bit.ly/3k7cCUA