

உலகம் முழுவதும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காதலர் தினம் என்றாலே பரிசுகள் இல்லாமல் இத்தினம் முழுமையடைவதில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஒரு தசாப்தத்துக்கு முன்புவரை ஒற்றைச் சிவப்பு ரோஜாவில் காதலர் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடிவிட முடிந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது அல்லவா? அதற்கேற்ப காதலர் தினப் பரிசுகளும் புது வடிவம் பெற்றுவிட்டன.
விதவிதமான பரிசுகள்
காதலர் தினத்தில் காதலருக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்வது ஸ்பெஷலாகப் பார்க்கப்படுகிறது. எனவே, காதல் பரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் வித்தியாசமான முயற்சிகளை காதலர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், இப்போதும் டிரெண்டில் உள்ள காதல் பரிசுகளாக வித்தியாசமான வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துகள், இதய வடிவ சாக்லெட்டுகள், காதல் தலையணைகள், காதல் டெடிபேர் பொம்மைகள், வண்ணமயமான துணை அலங்காரப் பொருள்கள், கேட்ஜெட்கள், நகைகள், ஆடைகள் எனப் பட்டியல் நீள்கிறது.
அதேவேளையில் காதலர் தினத்தைப் பரிசுகளுடன் கொண்டாடாமல் ஸ்பெஷல் தருணங்களுடன் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பல மாற்று வழிகளும் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்குக் காதலர் தினத்துக்கு என்றே சிறப்பு பேக்கேஜ்கூட உண்டு. எடுத்துக்காட்டாக, கேண்டில் லைட் டின்னர், லாங் டிரைவ், படகுசவாரி எனக் காதலர் தினம் அன்று மேற்கொள்ளப்படும் சாகசப் பயணங்கள் போன்றவை இந்த ஸ்பெஷல் தருணங்களில் அடங்கும்.
ஆன்லைன் பரிசுகள்
அண்மைக் காலத்தில் காதலர் தினத்துக்கென மாபெரும் சந்தையே சர்வதேச அளவில் உருவாகியிருக்கிறது. ‘காதலை வலிமையாக்கும் காதல் பொருள்கள்’ என்கிற வாசகங்களுடன் விளம்பரப்படுத்தி அந்தப் பொருள்களைச் சந்தைப்படுத்துகிறார்கள். இதேபோல காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பல காதலர் தின சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்திருக்கின்றன. காதலர்களுக்கான புதிய பரிசுகளையும் அறிமுகப் படுத்தியுள்ளன. கடைக்குச் சென்று பரிசுப் பொருள் வாங்க நேரமில்லாதவர்கள் இணையம்வழியே ஆர்டர் செய்து காதலர் தினத்தைக் கொண்டாடலாம்.
ஆன்லைனில் காதலரின் மனநிலைக்கு ஏற்ப பரிசுகளை அளிக்கும் வாய்ப்புகளை இணையதளங்கள் எளிமையாக்கி யிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் காதலர் விளையாட்டுப் பிரியர் என்றால் அதற்கு ஏற்றாற்போல, விளையாட்டு சம்பந்தமான பரிசுப் பொருள்களை வகைப்படுத்தி யிருக்கிறார்கள். இதுபோல் ஒவ்வொருவரின் மனதுக்குப் பிடித்த மாதிரியான பொருள்களைக் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தத் தளங்களில் வரிசைப்படுத்தி யிருக்கிறார்கள்.
‘நீயே எனக்கொரு கிப்ட், அப்புறம் எதற்குத் தனியாக கிஃப்ட்' என்று உங்கள் இணை கூறினாலும்கூட, ஏதாவது ஒரு வித்தியாசமான பரிசுப்பொருளைக் கொடுத்து அசத்துங்கள்.