

தமிழ் பிக்பாஸில் நடிகர் ஆரி சமீபத்தில் புகழ்பெற்றதைப் போலவே, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்களிடையே பிக்பாஸ் இந்தி 13ஆம் சீசனில் இரண்டாமிடம் பிடித்த பஞ்சாபி நடிகையும் பாடகியுமான ஷேனாஸ் கில் பிரபலமடைந்தார். அவர் பிரபலமடைந்ததற்கு, பிக்பாஸ் வீட்டில் அவர் பேசிய குறிப்பிட்ட பேச்சும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் யாஷ்ராஜ் முகாதேயின் கைவண்ணமுமே காரணம்.
2019 செப்டம்பர் 29லிருந்து 2020 பிப்ரவரி 15 வரை நடைபெற்ற பிக்பாஸ் இந்தி சீசன் 13 போட்டியாளர்களில் ஒருவர் ஷேனாஸ் கில். சகப் போட்டியாளர்களுடன் நடைபெற்ற உரையாடலின்போது “மெய்ன் கியா கரு, மர் ஜாவ்? மெரி கோய் ஃபீலிங் நஹி ஹை? துமாரி ஃபீலிங் துமாரி…தண்டா குத்தா டோமி... சண்டா குத்தா குத்தா’ என்று தன் தாய்மொழியான பஞ்சாபியில் கோபமாகப் பேசினார். இதன் பொருள், நான் என்ன செய்ய வேண்டும்…சாக வேண்டுமா? எனக்கு எந்த உணர்ச்சிகளும் இருக்காதா? உனது உணர்ச்சிகள் உனக்கு. உன்னுடைய நாய் மட்டும் டாமி? எங்களுடைய நாய் வெறும் நாயா?
ராப்புடன் கைகோத்த பேச்சு
குறிப்பிட்ட இந்த பகுதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது ராப் கலைஞர் யாஷ்ராஜ் முகதே, கில்லின் இந்தப் பேச்சை வைத்து ஒரு சிறிய ராப் பாடல் ஒன்றை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். 2020 டிசம்பர் 8 அன்று வெளியிடப்பட்ட இந்த ராப் பாடல் இன்ஸ்டாகிராமில் இந்தியா முழுவதும் வைரலானது.
தடைசெய்யப்பட்ட டிக்-டாக் செயலியின் இடத்தை ‘இன்ஸ்டா ரீல்ஸ்’ என்னும் இன்ஸ்டாகிராம் வீடியோ வசதி எடுத்துக்கொண்டுவிட்டது. இன்ஸ்டா ரீல்ஸில் வீடியோக்களை வெளியிடும் நடிகர்களும் தொலைக்காட்சிப் பிரபலங்களும் இன்ஸ்டா பிரபலங்களும் சாதாரண பயனர்களும்கூட இந்த ராப் பாடலுக்கு வாயசைக்கும், நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து நடனமாடும் வீடியோக்களை இதயக் குறியீடுகளைக் (லைக்) குவித்துவருகின்றனர்.
வெகுளிப் பேச்சும் துள்ளல் இசையும்
கடந்த ஆண்டு ‘சாத் நிபானா சாத்தியா’ என்னும் இந்தி நெடுந்தொடரில் கோகிலா பென் என்னும் கண்டிப்புமிக்க மாமியார் கதாபாத்திரத்தில் நடித்த ரூபா படேலின் வசனம் ஒன்றை வைத்து ’ரசோதே மெய்ன் கோன் தா’ என்னும் வசனத்தை வைத்து உருவாக்கப்பட்ட ராப் பாடல் வட இந்திய நெட்டிசன்களிடையே வைரலானது. மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத் நகரைச் சேர்ந்த யாஷ்ராஜ் முகாதே என்னும் ராப் இசைக் கலைஞர், அதன் மூலமாக நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலமானார். இப்போது பிக்பாஸ் ராப் வீடியோவின் மூலம் இன்னும் பல மடங்கு பிரபலமாகிவிட்டார். தொடர்ந்து இந்தி நெடுந்தொடர் வசனங்களையும் பிக்பாஸ் சீசன் 14 போட்டியாளர்களின் உரையாடல்களையும் வைத்து சில ராப் இசை வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.
ஷேனாஸ் கில்லின் பிக்பாஸ் உரையாடல், மொழி எல்லைகளைக் கடந்து பிரபலமடைய முகாதேவின் துள்ளலான ராப் இசை முக்கியக் காரணம் என்றாலும், கில் வெகு இயல்பாகப் பேசிய வரிகளில் தென்பட்ட வெகுளித்தனமும் அந்த உச்சரிப்பில் இருந்த தெனாவட்டும்கூட அனைவரையும் ஈர்த்திருப்பதை மறுக்க முடியாது.
உடைபடும் எல்லைகள்
ஒருவர் இயல்பாகப் பேசிய ஒரு விஷயம் தொலைக்காட்சியில் இடம்பெற்று ராப் இசை வடிவம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி மொழி எல்லைகளைக் கடந்து அனைவரையும் ஈர்த்திருப்பது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மனிதர்கள் செயற்கையாக வகுத்துக்கொண்ட எல்லைகள் உடைகின்றன என்பதை உணர்த்துகிறது. மொழிப் பண்பாடு, சூழலுக்கு மட்டும் உரியனவாக உருவாக்கப்பட்ட காட்சிகளும் வசனங்களும் பாடல்களும் கதாபாத்திரங்களும் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தேசிய அளவிலும் அரிதாக சர்வதேச அளவிலும்கூட பிரபலமடைந்துவிடுகின்றன. இப்போது சமூக வலைத்தளங்களில் எதுவெல்லாம் பிரபலமாகும் என்பதற்கு வரையறையே இல்லை என்பதையும் இந்த வீடியோவின் வெற்றி உணர்த்துகிறது.
வீடியோவைக் காண: https://bit.ly/3iGZRPP