

யதார்த்த உலகில் வசிக்க விரும்புவர்களைவிட, கனவுலகில் வசிக்க விரும்புபவர்கள்தான் இங்கே அதிகம். ஆனால், கனவுலகவாசிகளுக்கும் யதார்த்தத்தை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும்படி அமைந்திருக்கிறது தக்ஷின்சித்ராவில் நடைபெறும் ‘வாழும் யதார்த்தங்கள்’ (Existing Realities) கண்காட்சி. ஓவிய சகோதரர்கள் எஸ்.ஏ.வி. இளையராஜா, எஸ்.ஏ.வி. இளையபாரதியின் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
“இன்றைய அவசர வாழ்க்கையில், அழகான தருணங்களை ரசிப்பதற்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. மிக இயல்பாக வாழ்க்கையின் யதார்த்தமான தருணங்களை எந்தவிதப் பதிவுகளும் இல்லாமல் கடந்துவிடுகிறோம். அப்படி எந்தவித பதிவுகளும் இல்லாமல், எல்லோரும் கடந்துசெல்லும் அழகான, இயல்பான, ஆழமான தருணங்களையே நாங்கள் இருவரும் ஓவியங்களாக்கியிருக்கிறோம்” என்கிறார் இளையபாரதி.
இவர்கள் இருவரும் மைசூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் இவர்களது சொந்த ஊர். இவர்களுடைய அண்ணன் எஸ்.ஏ.வி. இளஞ்செழியனைப் பார்த்துதான் இளையராஜாவுக்கும், இளையபாரதிக்கும் ஓவியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கின்றன. அதனால், இவர்கள் குடும்பமே ஓர் ஓவியர்களின் குடும்பமாகத் தான் ஊரில் அறியப்பட்டிருக்கிறது.
இந்தக் கண்காட்சியில் கிட்டத்தட்ட ஐம்பது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை எல்லாமே ‘ஹைப்பர்ரியாலிசம்’ எனப்படும் அதியதார்த்தவாதத்தைப் பேசுகின்றன. கண்காட்சியில் பெரும்பாலும் நீர் வண்ண ஓவியங்களையும், சில தைல வண்ண ஓவியங்களையும் காணமுடிகிறது. “கையாளுவதற்குக் கடினமான நீர் வண்ணங்கள் மூலம் அதியதார்த்தவாதத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடே இங்கே இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள். அத்துடன், இந்த ஓவியங்களின் தருணங்கள் அனைத்தும் எங்கள் இருவரின் பல்வேறு பயணங்களின்போது எடுக்கப்பட்டவை” என்று சொல்கிறார் இளையராஜா.
அதியதார்த்தவாதத்தை ஓவியங்களில் கொண்டுவருவதற்காக, முதலில் தங்களைக் கவர்ந்த, பாதித்தத் தருணங்களை கேமராவில் பதிவுசெய்திருக்கிறார்கள் இவர்கள். அதற்குப்பின்னர், ஒளிப்படத் தருணங்களுக்கு இவர்கள் தூரிகையால் உயிர்கொடுத்திருக்கின்றனர். அதனால், கண்காட்சியின் ஓவியங்களில் ஒருவித நேர்த்தியை உணரமுடிகிறது.
இளையபாரதியின் கங்கைக்கொண்ட சோழபுரம் கோவிலில் விளையாடும் இரண்டு குழந்தைகளின் ‘குறும்பு விளையாட்டு’ என்னும் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அதே மாதிரி, இளையராஜாவின் ஓவியங்களில் ‘அதே நேரம்’ என்னும் ஓவியம் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நீண்ட வெட்டவெளிக்காகவே அதிகமாகக் கவர்கிறது. தெருவோர காட்சிகளைப் பதிவு செய்திருக்கும் ஓவியங்கள் யதார்த்தவாதத்தைப் பற்றிய ஆழமான உணர்வுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
இந்தக் கண்காட்சி தக்ஷின்சித்ராவில் அக்டோபர் 30ந் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: >http://dakshinachitra.net/