Published : 12 Jan 2021 03:13 am

Updated : 12 Jan 2021 10:56 am

 

Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 10:56 AM

அஞ்சலில் வந்த சிலிர்ப்பு!

mail

பொங்கலுக்கு சேர்ந்தாற்போல் வருகிற ஐந்து நாள் விடுமுறையைத் தாண்டி சிறு வயதில் மகிழ்வித்த தருணம் என்றால், அது பிடித்த நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அனுப்பிய வாழ்த்துஅட்டை அனுபவங்கள்தான். சிலிர்ப்பையும் பரவசத்தையும் ஒரு சேரத் தந்த அந்த அனுபவங்கள் இன்றைய தலைமுறையினருக்கு வாய்க்காமலேயே போய்விட்டன. வாட்ஸ்அப் ஃபார்வர்டு குறுஞ்செய்திகளோடு இன்றைய பண்டிகை வாழ்த்துகள் மூட்டை கட்டப்படுகின்றன.

அன்றைக்கெல்லாம் பொங்கல் வாரமே, வந்துசேரும் வாழ்த்து அட்டைகளுடன்தான் தொடங்கும். கிறிஸ்துமஸ்-புத்தாண்டுத் தொடக்கம் முதலே பொங்கல் வாழ்த்து அட்டைகள் கிடைக்கத் தொடங்கிவிடும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி முன்னணி நாயகர்களின் உருவப்படங்கள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளை வாங்க இளையோர் போட்டிபோடுவார்கள். பெரியவர்களோ செங்கரும்பு, பானை சகிதம் காளைகள் நிற்கும் நிற்க வாழ்த்துஅட்டைகளை விரும்பி வாங்கிச் செல்வார்கள்.


வாழ்த்து அட்டைக் காலம்

தேடித் தேடி வாழ்த்துஅட்டைகளை வாங்கிப் பின்பக்கத்தில் கவிதைபோல் கைப்பட நாலு வார்த்தை எழுதி, வீட்டில் இருக்கும் எல்லோருடைய பெயரையும் வரிசைப்படுத்தி, மறக்காமல் ஸ்டாம்ப் ஒட்டி, தபால்பெட்டியில் அட்டைகளைத் திணித்துவிட்டு வீடும் திரும்பும்போது கிடைக்கிற மகிழ்ச்சியை வார்த்தைகளில் மொழிபெயர்த்துவிட முடியாது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தபால்காரரின் சைக்கிள் மணி ஓசைக்காக காத்திருப்பதும் சுகமாகத்தான் இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள்கூட உறவினர் முகவரிகைளைத் தேடித் தேடி வாழ்த்து அட்டைகள் அனுப்பிய காலமெல்லாம் இன்றைக்கு வெறும் பதிவுகளாகிவிட்டன.

அறிவியல் வளர்ச்சி பெருகப் பெருக, வாழ்த்துஅட்டை அனுப்புவது குறைந்துபோனது. குறிப்பாகப் புத்தாயிரத்துக்குப் பிறகு வீட்டுக்கு இரண்டு, மூன்று செல்போன்கள் வந்த பிறகு ‘ஹேப்பி பொங்கல்’ என்று ஆங்கில ஒற்றை வரியில் வாழ்த்தை அனுப்பிவிட்டு, வேறு வேலையைப் பார்க்கப் புறப்பட்டுவிடுகிறோம். குறுஞ்செய்திகளை ஓரங்கட்டி வாட்ஸ்அப் போன்ற செயலிகள் வந்த பிறகு வாழ்த்து சொல்வதோ இன்னும் சுருங்கிவிட்டது. குழுவில் இரண்டு வார்த்தைகள், ஒரு ஸ்மைலியுடன் வாழ்த்து செய்திகள் காற்றில் கரைந்துவிடுகின்றன.

வாட்ஸ்அப் வாழ்த்து

வாழ்த்துஅட்டைகளைப் பார்த்தும் பாதுகாத்தும் பரவசமடைந்த காலம், இப்போது இல்லை. வாட்ஸ்அப், சமூகஊடகங்களில் வரும் வாழ்த்துச் செய்திகளைப் பார்த்து புன்னகைக்கவோ, சிலிர்ப்படையவோ வழியில்லை. பார்த்த மாத்திரத்தில் ஸ்மைலியைப் பதிலாகவோ, விருப்பக்குறியை இட்டுவிட்டோ நம் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம். வாழ்க்கையில் கிடைத்த சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள், மகிழ்ச்சியான தருணங்களை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாமலாக்கிவிட்டன. கைபேசிகளுக்கு இடையே பரிமாறப்படுகிற வாழ்த்து செய்திகளில் மனப்பூர்வத்தன்மையையோ, மகிழ்ச்சியையோ பார்க்க முடிவதில்லை.

அன்று தபால்காரரிடம் வாழ்த்துஅட்டையைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டுவந்து, யாரெல்லாம் அனுப்பியிருக்கிறார்கள், யார் பெயரையெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பரபரப்புடன் பார்த்த சுகத்தை இந்தத் தலைமுறைக்குப் புரியவைப்பது சற்றே கடினம். ஆனால் அதேநேரம், இந்தத் தலைமுறைக்கு அதெல்லாம் வாய்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட, சிறு வயதில் நாம் அடைந்த இன்பத்தை இன்றைய தலைமுறையினரும் உணரும் வண்ணம் நாமே வாய்ப்பை ஏற்படுத்தித் தர முன்வரலாமே.

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துஅட்டைகளை அனுப்பினால், அதனால் வலுப்படுகிற அன்பு பரஸ்பரம் எதிரொலிக்கும். வாழ்த்துஅட்டை கிடைக்காவிட்டால், தபால்அட்டையில்கூட நாமே எழுதி அனுப்பலாம். பொங்கல் வந்துவிட்டது. நம் கைப்பட எழுதி அனுப்பும் வாழ்த்து, பல மனங்களை மலரவைக்கும்; குளிர வைக்கும். பண்டிகைக் கொண்டாட்டமும் உறவின் மகத்துவமும் மனப்பூர்வமான வாழ்த்திலும் மகிழ்ச்சியிலும் தானே அடங்கியிருக்கின்றன!


அஞ்சல்Mailசிலிர்ப்புபொங்கல்வாழ்த்து அட்டைவாட்ஸ்அப் வாழ்த்துPongal festival

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x