கனடாவின் ‘ப்ரைம் மிஸ்டர்

கனடாவின் ‘ப்ரைம் மிஸ்டர்
Updated on
1 min read

இளமைத் துடிப்பு, நவநாகரிகம், புதுமை, முற்போக்கு இவை எல்லாம் இணைந்த ஒரு பிரதமர் கிடைத்தால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அதற்கு நீங்கள் கனடாவில் இருக்க வேண்டும்!

ஆம், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள ஜஸ்டின் ட்ரூடோதான் மேலே சொல்லப்பட்டிருக்கும் அத்தனை தன்மைகளும் கொண்டவர். அப்படி அவர் பதவியேற்கும் பட்சத்தில், கனடாவின் அரசியல் வரலாற்றில், மிக இளம் வயதில் பிரதமராகப் பதவியேற்ற‌ இரண்டாவது நப‌ர் இவர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது இன்னும் ஸ்பெஷல்.

1971-ல் பிறந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அரசியல் புதிதல்ல. அவருடைய அப்பா பியர் ட்ரூடோ கனடாவின் 15-வது பிரதமர். ஜஸ்டின் ட்ரூடோ நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது, அதாவது 1972-ல், அவர் கனடாவின் வருங்காலப் பிரதமராக ஆவதற்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்தவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அமெரிக்காவின் அப்போதைய பிரதமர் நிக்ஸன்தான்.

ஆங்கில இலக்கியமும் கல்வியியல் படிப்பும் படித்த ஜஸ்டின் ட்ரூடோ ஆச்சர்யமூட்டும் விஷயங்களின் கலவை.

2000-ல் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான் ஜஸ்டின் அரசியலில் தீவிரம் காட்டினார். அவர் சார்ந்திருந்த ‘தாராளவாதக் கட்சி’ 2011 தேர்தலில் பழமைவாதக் கட்சியிடம் தோல்வியடைந்திருந்தது. அப்போது ஒரு தர்ம காரியத்துக் காக நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் பழமைவாதக் கட்சியின் உறுப்பினரை ஜஸ்டின் தோற்கடித்தார்.

குத்துச்சண்டை மட்டுமல்ல தர்ம காரியத்துக்காக மாடலிங்கும் செய்திருக்கிறார். கூடுதலாக, உடலில் 'டாட்டூ' இட்டுக்கொண்ட‌ முதல் பிரதமரும் கனடாவுக்கு இப்போது கிடைத்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு இவர் ஒரு மாடலாக இருக்கத்தான் முடியும், நல்ல பிரதமராக இருக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுந்திருக்கிறது. அதுவும் முடியும் என்பதைத் தன் முற்போக்கான கருத்துக்கள் மூலம் நம்பிக்கை அளிக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.

குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள வராகவும், ஆணழகராக இருந்தாலும் பெண்ணியத்துக்கு ஆதரவானவர் ஜஸ்டின். “பெண்கள் தங்கள் உடலை என்ன செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பெண்களிடமே விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தினர் தலையிடக் கூடாது” என்று ஜஸ்டின் கூறியிருக்கிறார்.

ஜஸ்டினுடைய முற்போக்கு எண்ணங்களுக்கு முன்னுதாரணம் அவரது தந்தைதான். ஆம், கனடா கண்ட ஆராவாரமிக்க, அறிவுஜீவி அரசியல்வாதிகளுள் ஒருவர் அவர். விவாகரத்து, தன்பாலுறவு, கருக்கலைப்பு போன்றவை தொடர்பான புரட்சிகரமான சட்டங்களை இயற்றியவர் அவர். அவரது வழியில் ஜஸ்டினும் செல்வார் என்பதே அவரது வெற்றிக்கான காரணங்களுள் ஒன்று.

அவர் குறித்த ஒரு வீடியோவைப் பார்க்க இங்கே சொடுக்கவும்: https://www.youtube.com/watch?v=jkZf_J3wqYc

ஆமாம் ட்யூட், கனடா விசாவுக்கு என்ன புரொசிஜர்...?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in