

ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கரோனா வைரஸ் தொற்று, இந்த ஆண்டையே சோதனை ஆண்டாக மாற்றிவிட்டது. ஆனால், கனவுகளை நோக்கிய இளம் தலைமுறையினரின் சாகசப் பயணங்களுக்குச் சோதனைகள் தடைக்கற்கள் அல்ல என்பதை இளைஞர்கள் நிரூபித்தனர். இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த இளைய தலைமுறையினர்:
ஆர்யா ராஜேந்திரன்: இந்தியாவின் இளம் மேயர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்தார். முடவன்முகல் வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற 21 வயதே நிரம்பிய இவரைப் புதிய மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. மாணவப் பதவிகள் பலவற்றை அலங்கரித்த இவர், தற்போது மேயர் அந்தஸ்தைப் பெற்று இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார்.
நடராஜன்: கிரிக்கெட் போட்டிகளே அதிகம் நடைபெறாத இந்த ஆண்டில், அதிகம் பேசப்பட்ட வீரரானார் நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்திலிருந்து இன்று சர்வதேச கிரிக்கெட் வீரராக உயர்ந்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். டி20 போட்டிகளில் சிறப்பாக ‘யார்க்கர்’ வீசி 16 விக்கெட்களை வீழ்த்தி, தேர்வாளர்களைக் கவர்ந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்று, அங்கும் தன் திறமையை நிரூபித்தார். சமூகஊடகங்களில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட வீரர் ஆனார்.
ஜீவித் குமார்: இந்த ஆண்டு அரசியல் அரங்கில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயருக்குச் சொந்தக்கார் 19 வயதான ஜீவித்குமார். தேனியைச் சேர்ந்த இவர், நீட் தேர்வில் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்தார். மேலும், தேசிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் எடுத்தவர் என்கிற பெருமையையும் சேர்த்தே படைத்தார்.
பிரியங்கா ராதாகிருஷ்ணன்: சென்னையில் பிறந்து நியூசிலாந்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரியங்கா, அந்நாட்டு தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் வெற்றிபெற்று அசத்தினார். அத்துடன் நியூஸிலாந்தின் புதிய அமைச்சரவையில் சமூக - தன்னார்வத் துறை அமைச்சராகவும் பதவியேற்றார். முதல் தேர்தல் வெற்றியிலேயே நியூசிலாந்து அமைச்சராக அவர் பதவியேற்றது பெருமையாகக் கருதப்படுகிறது.
தீபக் புனியா: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர மல்யுத்த வீரர். 21 வயதான தீபக், கடந்த 18 ஆண்டுகளில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியர். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை பிரகாசப் படுத்திக்கொண்டுள்ளார். ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ இதழில் சாதனை படைத்த இளைஞர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே விளையாட்டு வீரர் இவர்தான்.
நீலகண்ட பானு: கணிதம் என்றாலே அஞ்சும் இந்தியர்கள் ஏராளம். இவர்கள் மத்தியில் 20 வயதான நீலகண்ட பானு, உலகின் மிக வேகமான ‘மனித கால்குலேட்டர்’ என்கிற சாதனையைப் படைத்துள்ளார். ஏற்கெனவே நான்கு உலகச் சாதனைகள், 50 லிம்கா சாதனைகளை இவர் படைத்திருக்கிறார். இந்த ஆண்டு மூளைக்கு வேலை தரும் உலக மனக் கணக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.
மல்லேஸ்வர் ராவ்: பாரதியின் வாக்கைப் பொய்யாக்க பசியால் வாடும் வறியவர்களின் பசியைப் போக்க ஓடிக்கொண்டேயிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மல்லேஸ்வர் ராவ் (29). உணவகங்கள், சுப நிகழ்வுகளில் வீணாக எறியப்படும் உணவைப் பெற்று குடிசைப் பகுதிகளில் வாழும் இரண்டாயிரம் பேருக்கு நாள்தோறும் உணவு வழங்கிவருகிறார் இந்த பி.டெக். பட்டதாரி. இதற்காகவே ‘டோன்ட் வேஸ்ட் ஃபுட்’ என்கிற அமைப்பை நடத்திவருகிறார்.
புவன் பாம்: 26 வயதான குஜராத்தைச் சேர்ந்த புவன் பாம்தான் இந்தியாவின் ‘டாப் யூடியூபர்’. இந்தியாவில் முதன்முதலில் 20 லட்சம் சந்ததாரர்களை எட்டிப் பிடித்த முதல் யூடியூபர். காமெடியன், பாடகர், பாடலாசிரியர் என வெவ்வேறு பரிமாணங்களில் யூடியூபில் இவர் பதிவேற்றும் வீடியோக்களுக்குச் சமூக ஊடகங்களில் ஏக கிராக்கி. இதனால், இந்தியாவின் சமூக ஊடக ஸ்டார் என்கிற அந்தஸ்தையும் பெற்றவர். தற்போது இவருடைய ‘பிபி கி வைன்ஸ்’ என்கிற அலைவரிசைக்கு 1.94 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.
முகமது ஆஷிக் ரகுமான்: கரோனாவை எதிர்த்து முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் களமிறங்க, அவர்களுக்கு உதவுவதற்காக சில இளைஞர்கள் களத்தில் இறங்கினர். அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த முகமது ஆஷிக் ரகுமான் என்ற இளைஞர், ஸாஃபே (ZAFE), ஸாஃபே மெடிக் (ZAFE MEDIC) என்கிற இரண்டு ரோபாட்களை உருவாக்கினார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள், உணவை அவர்களுடைய இடத்துக்கே கொண்டுபோய் கொடுக்கவும், வீடுகளுக்குப் பொருள்களைக் கொண்டுபோய் கொடுக்கவும் இந்த ரோபாட்கள் பயன்படுத்தப்பட்டன.
ரோஜா ஆதித்யா: தமிழகத்தில் ஆண்களே சொல்லிசை பாடல்களின் முகங்களாக உள்ள நிலையில், பெண்கள் இல்லாத குறையைப் போக்கிவருகிறார் சென்னையைச் சேர்ந்த ரோஜா ஆதித்யா. சமூக, சுற்றுச்சூழல் கருத்துகளைக் கிராமிய, சொல்லிசைப் பாடல்கள் வழியாகப் பாடி அவர் வளர்ந்துவருகிறார். ஃபேஸ்புக்கில் ‘மக்கள் பாட்டு’ என்கிற பக்கம் மூலம் மக்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவர் பாடும் சொல்லிசைப் பாடல்கள், சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற தவறவில்லை. இத்துறைக்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு ரோஜா முன்மாதிரியாகியிருக்கிறார்.