

வீடு கட்டத் தேவைப்படும் பொருட்களில் முக்கியமானது சிமென்ட். எப்போது விலை ஏறும், எப்போது விலை குறையும் என்று யாருக்கும் தெரியாது. இதோ, இப்போது ஒரேசமயத்தில் ஒரு மூட்டைக்கு 70 ரூபாயை சிமென்ட் நிறுவனங்கள் உயர்த்திவிட்டதாகக் கட்டுநர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். திடீர் சிமென்ட் விலை உயர்வு கட்டுமானத் தொழிலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்றும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த வாரத்தில் மொத்த கொள்முதல் விலையில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.243 முதல் ரூ.245 வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரத்திலோ நிலைமை தலைகீழ். ஒரு மூட்டை ரூ.310 முதல் ரூ.335 வரை உயர்ந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் கட்டுநர்கள்.
இந்தியாவில் செயல்படும் சிமென்ட் நிறுவனங்கள் ஒரே சமயத்தில் சிமென்ட் விலையை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது. பல சிமென்ட் நிறுவனங்கள் காரணம் குறிப்பிடாமல் சப்ளையைக் குறைத்து விட்டதாகவும் கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த வாரத்தில் ஒரு லோடில் 300 சிமென்ட் மூட்டைகள் வரை வழங்கிய சிமென்ட் நிறுவனங்கள் தற்போது 150 மூட்டைகள் வரை மட்டுமே வழங்குவதாகக் கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் தற்போது 3 முதல் 30 சதவீதம் வரை சிமென்ட் விலை உயர்ந்திருக்கிறது. மண்டலங்கள் வாரியாகச் சில பகுதிகளில் மிக அதிகமாகவும், இன்னும் சில இடங்களில் விலையை குறைவாகவும் சிமென்ட் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. குறிப்பாகத் தெற்கு மண்டலமான ஆந்திரா, தமிழகத்தில் விலை மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, வட மா நிலங்களில் தொடங்கியுள்ள பருவமழை, நஷ்டம், லாரி ஸ்டிரைக் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால், இந்த விலை உயர்வு கட்டுமானத் தொழிலைப் பாதிக்கும் என்று பல கட்டுமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. பருவமழையினால் கட்டுமானத் தொழிலில் தேக்கம் ஏற்படும் இந்தக் கால கட்டத்தில் திடீரென்று சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது தொழிலை நசிவடைய செய்துவிடும் என்று கிரெடாய் அமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது.
ஆனால், இந்த விலை உயர்வு கட்டுமானத் தொழிலைப் பாதிக்கும் என்று பல கட்டுமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. பருவமழையினால் கட்டுமானத் தொழிலில் தேக்கம் ஏற்படும் இந்தக் கால கட்டத்தில் திடீரென்று சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது தொழிலை நசிவடைய செய்துவிடும் என்று கிரெடாய் அமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது.
திடீர் சிமென்ட் விலை உயர்வால், கட்டுமானத் தொழிலில் பல்வேறு பின் விளைவுகளைக் கட்டுமான நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சென்னைப் புறநகர் கட்டுமானச் சங்கத்தின் செயலாளர் பிரிட்டோ ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். “கடந்த மாத இறுதியில் இருந்தே கட்டுமானத் தொழிலில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இப்போது சிமென்ட் விலை உயர்வு தொழிலில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். இதன் காரணமாகக் கட்டுமானப் பணிகளுக்கான செலவினங்கள் அதிகரிக்கும். இந்தப் புதிய விலை உயர்வு வீடு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். ஏற்கனவே மணல் விலை அதிகமாகவே உள்ளது. கடந்த சில வாரங்களாகச் சல்லிக் கற்களும் கிடைப்பதில்லை. இதனால் பல பிரச்சினைகளைக் கட்டுமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இந்த விலை உயர்வுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்” என்று கூறுகிறார் பிரிட்டோ ஃபிரான்சிஸ்.