Published : 30 Oct 2015 09:51 am

Updated : 30 Oct 2015 09:53 am

 

Published : 30 Oct 2015 09:51 AM
Last Updated : 30 Oct 2015 09:53 AM

பரண்: ‘இதுதான் என் இதயத் துடிப்பு

அஞ்சல்தலைகள், நாணயங்கள், கலைப்பொருட்கள் என பலவற்றையும் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களைப் பார்த்திருப்போம். சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் கென்னடியின் வீட்டுக்குப் போனால், சுவர்க் கடிகாரமல்ல… கடிகாரங்களால் ஆன சுவர் நமக்கு நேரத்தைக் காட்டுகிறது. சீரான தாளகதியில் பெண்டுலங்கள் அசைகின்றன. “இதுதான் சார், என் இதயத் துடிப்பு,” என்றபடி வருகிறார் கென்னடி.

286 சுவர்க் கடிகாரங்கள், 1,700 டைம்பீஸ், 1,100 கைக் கடிகாரங்கள், 75 காந்தி கடிகாரங்கள், இதுதவிர பழங்கால அஞ்சறைப் பெட்டி, விதவிதமான புத்தர் சிலைகள், மினியேச்சர் பொருட்கள் போன்றவை இவருடைய சேகரிப்பில் அடங்கும்.


கடிகாரக் காதலின் ஆரம்பம்

நாகர்கோவில்தான் என்னுடைய பூர்விகம். என்னுடைய தாத்தாவுக்கு ஆங்கிலேயர் ஒருவர் ஷெவ்ரோலே கார் ஒன்றையும் சுவர்க் கடிகாரம் ஒன்றையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அது, எங்கள் வீட்டின் முன்அறை சுவரில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் Ansonia சுவர்க் கடிகாரம். அதற்கு ஒவ்வொரு முறை சாவி கொடுக்கும் போதும், `வெள்ளைக்காரன் ஒன்னோட தாத்தாவுக்கு கொடுத்ததுடே… கவனம்… கவனம்…’ என குடும்பமே சேர்ந்து எச்சரிக்கைக் குரல் கொடுக்கும். காலம் மாறியது.

பேட்டரியால் இயங்கும் கடிகாரம் உலக அதிசயமாகக் கொண்டாடப்பட்டது. குடும்பமே கொண்டாடிய கடிகாரத்தை பரணில் போட்டுவைத்ததை என்னால் தாங்க முடியவில்லை. என்னுடைய அறையில் வைத்து அதைப் பராமரிக்க ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 10, 15 வயது. அந்த வயதிலேயே 20 ரூபாய் கொடுத்து, ஒரு சுவர்க் கடிகாரத்தை வாங்கி வந்தேன். குடும்பமே திட்டித் தீர்த்தது. அதுதான் ஆரம்பம். ஒவ்வொரு கடிகாரத்தின் மெக்கானிசமும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

`குப்பை’ கென்னடி

கல்லூரியில் படிப்பதற்காக சென்னைக்கு வந்தேன். என்னுடைய செலவுக்கு மாதத்துக்கு 700 ரூபாயை ஊரிலிருந்து அனுப்புவார்கள். அதில் எப்படியாவது சேமித்து மாதத்துக்கு 2 கடிகாரங்களை வாங்கிவிடுவேன். எப்போது பார்த்தாலும் மூர் மார்க்கெட், காயலான் கடை என சுற்றியதால் நண்பர்களின் வட்டத்தில் `குப்பை’ கென்னடி என்று எனக்குப் பட்டப் பெயர் கிடைத்தது!

கண் திறந்த புத்தகம்

நம் நாட்டில்தான் கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கு மரியாதை இல்லை. ஸ்காட்லாண்ட், ஜெர்மனி போன்ற நாடுகளிலெல்லாம் பெரிய மரியாதை இருக்கிறது. அமெரிக்காவின் கனெக்டிகெட் என்னும் இடத்தில் 1890-லேயே கடிகாரத்துக்கென தனி அருங்காட்சியகம் அமைத்திருக்கின்றனர் என்று சொல்லும் கென்னடி, புரூக்ஸ் பால்மர் எழுதிய `எ டிரெஷரி ஆஃப் அமெரிக்கன் கிளாக்ஸ்’ என்னும் புத்தகத்தை படித்த பிறகுதான் தன்னுடைய சேமிக்கும் ஆர்வம் ஒருமுகப்பட்டது. என்னிடம் இருக்கும் சேகரிப்புகள் குறித்து உலகம் முழுவதும் இன்றைக்குத் தெரியும் என்கிறார்.

3 ஆண்டு ஓடும்

லண்டன் கிளாக் டவரில் இடம்பெற்றிருக்கும் கடிகாரத்தைச் செய்த பிக்பென் நிறுவனம் தயாரித்த டைம்பீஸ்கள், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 250 ஆண்டுகள் பழைமையான கடிகாரம், ஒருமுறை சாவி கொடுத்தால் ஓராண்டு ஓடும் கடிகாரம், ஒருமுறை சாவி கொடுத்தால் 3 ஆண்டுகள் ஓடும் கடிகாரம்வரை இவருடைய சேகரிப்பு விதம்விதமாக விரிகிறது.

கென்னடி விலைக்கு வாங்கிய கடிகாரங்களைத் தவிர, சில கடிகாரங்களுக்குப் பின்னால் நெகிழ்ச்சியான சம்பவங்களும் இருக்கின்றன. “என்னுடைய கணவர் அவருடைய இறுதிக்காலம்வரை மிகவும் பொறுப்போடு பார்த்துக்கொண்ட கடிகாரம் இது. நீங்கள் இதைத் தொடர்ந்து பராமரிப்பீர்கள் என்று நம்பிக் கொடுக்கிறேன்…” என்று ஒரு பழங்கால கடிகாரத்தை கென்னடியிடம் கொடுத்திருக்கிறார் ஒரு பெண்மணி. “விலை மதிக்க முடியாத இந்தச் சேகரிப்புகளைத் தனியார் சிலர் வாங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அரசு வாங்கிப் பராமரிக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. நோக்கம்,” என்கிறார் கென்னடி.

- ஏதாவது ஒரு கடிகாரத்தின் மணி ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும் கென்னடியின் வீட்டிலிருந்து வெளியே வரும்போது, சாவி கொடுக்க சோம்பல்பட்டு பழைய வீட்டிலேயே விட்டுவிட்டுவந்த ரிவெக்ஸ் கடிகாரத்தின் நினைவு மனதில் நிழலாடியது.


பழமையான கடிகாரம்அஞ்சல்தலைகள்நாணயங்கள்கண் திறந்த புத்தகம்கென்னடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x