

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதத்தைத் தாண்டிவிட்ட நிலையில், கூகுளில் இந்தியர்கள் தேடும் எண்ணிக்கையும் எகிறிவிட்டது. ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியலை 'கூகுள் இந்தியா' வெளியிடுவது வழக்கம். கரோனா தொற்று இந்தியர்களை முடக்கிய இந்த ஆண்டில், இந்தியர்கள் யாரையெல்லாம் தேடியிருக்கிறார்கள்?
1. ஜோ பைடன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்கிய ஜோ பைடனை அதிகம் தேடியிருக்கிறார்கள். குறிப்பாக, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரைப் பற்றி அதிகம் தேடியதால் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
2. அர்னாப் கோஸ்வாமி: உள்ளரங்க வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி பற்றிய வழக்கு அதிகம் தேடப்பட்டது.
3. கனிகா கபூர்: கரோனா தொற்று பரவ தொடங்கிய ஆரம்ப நாள்கள் நினைவிருக்கிறதா? மார்ச்சில் லண்டனிலிருந்து திரும்பிய பாடகி கனிகா கபூர், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்றார். அதன் பிறகு அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர் தனது பயண வரலாற்றை மறைத்ததாகவும், பல பிரபலங்களுக்கு கரோனா தொற்றைப் பரப்பியிருப்பார் என்பதற்காகவும் அதிகம் தேடப்பட்டார்.
4. கிம் ஜாங்-உன்: வட கொரிய அதிபர் இறந்துவிட்டார் என்று பரவிய செய்தியால், அதைப் பற்றி தெரிந்துகொள்ள அதிகம் தேடப்பட்டது.
5. அமிதாப் பச்சன்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஜூலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருடைய மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், அமிதாப்பச்சனும் அவருடைய குடும்பத்தினரும் அதிகம் தேடப்பட்டவர்கள் ஆனார்கள்.
6. ரஷித் கான்: இந்தியர்கள் அதிகம் தேடியதில் டாப் 10-க்குள் இடம்பெற்ற ஒரே விளையாட்டுத் துறையை சேர்ந்தவர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷித் கான். ஐ.பி.எல்.லில் சிறப்பாக விளையாடியதால் கவனம் பெற்றார்.
7. ரியா சக்ரவர்த்தி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துக்குப் பிறகு ரியா சக்கரவர்த்தியின் பெயர் அதிகம் தேடப்பட்டது. சுஷாந்த் மரணத்துக்குப் பின்னாலிருந்த அரசியல் மட்டுமல்லாது போதை பொருள் பயன்பாடு குறித்த சந்தேகத்தால் ரியா கைது செய்யப்பட்டிருந்தார்.
8. கமலா ஹாரிஸ்: அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண், அமெரிக்காவில் உயர் பொறுப்புக்கு வந்த முதல் கறுப்பின - ஆசியப் பெண், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பெண் எனப் பல பெருமைகளைப் பெற்றவர்.
9. அங்கிதா லோகண்டே: இந்தி சினிமா, சீரியல் நடிகையான அங்கிதா லோகண்டே அடிக்கடி தனது ஒளிப்படங்களை வெளியிட்டு சமூக ஊடகங்களில் பிஸியாக இருப்பவர். தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலி இவர். சுஷாந்த் சிங் மரணம் பற்றி முதன்முதலில் சி.பி.ஐ. விசாரணை கோரியதால் அங்கிதா லோகண்டே பேசுபொருளானார்.
10. கங்கனா ரனாவத்: பாலிவுட் நடிகை கங்கனா ரனவத், கரோனா ஊரடங்கு காலத்தில் ட்விட்டரில் இணைந்து மத்திய அரசு, ஒரு அரசியல் கட்சி சார்ந்த கருத்துகளை உதிர்க்கத் தொடங்கினார். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரும் அவருடைய நண்பர்களுமே சுஷாந்த் சிங் மரணத்துக்கு காரணம் என்று யாரும் யோசிக்காத குற்றச்சாட்டை முன்வைத்தார். சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலமே தொடர்ந்து கவனத்தில் இருக்க முயன்றார்.