

கால்பந்து, ஹாக்கியில் அடிக்கும் கோல் பற்றி அறிந்த உங்களுக்கு, ‘டிரிக் கோல்' விளையாட்டைப் பற்றி தெரியுமா? உலக அளவில் வெகு சிலரே உள்ள இந்த விளையாட்டில் இந்தியாவிலிருந்து ஓர் இளைஞர் கலக்கிவருகிறார். அவர், காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஹுசைஃப் ஷா. அதென்ன டிரிக் கோல்?
கால்பந்து விளையாட்டில் கோல் அடிக்க இரு புறமும் உள்ள கோல் போஸ்டை நோக்கிதான் பந்தை நகர்த்துவார்கள். ஆனால், பொழுதுபோக்குக்காக எந்த இடத்திலிருந்தாவது, ஏதோ ஒரு இலக்கை குறிபார்த்து கோல் அடிப்பதே டிரிக் கோல். வெளிநாட்டில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்த விளையாட்டு இப்போது இந்தியாவிலும் பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. இதில் ஹுசைஃப் ஷா உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறார்.
21 வயது மருத்துவ மாணவரான ஹுசைஃப், காஷ்மீரில் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் வளர்ந்தவர். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஹுசைஃப், உள்ளூரில் பல அணிகளுக்காக கால்பந்து விளையாடியுள்ளார். கால்பந்து விளையாட்டில் சீனியர்கள் சிலர் டிரிக் கோல் அடிப்பதைப் பார்த்த ஹுசைஃப், அதேபோல் செய்துபார்க்க முயன்று அதைக் கற்றுக்கொண்டார். இதன் பிறகு வீட்டுக்குப் பக்கத்தில் திறந்தவெளி மைதானத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் டிரிக் கோல் பயிற்சி எடுத்துக்கொண்டு, அதில் கைதேர்ந்தவரானார்.
ஹுசைஃப் அடிக்கும் டிரிக் கோல்கள் ஒவ்வொன்றையும் காணொலி காட்சியில் பார்க்கும்போது புல்லரிக்கிறது. நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு பின்புறம் உள்ள கூடையில் கோல் அடிப்பது,
உருண்டு ஓடிக்கொண்டிருக்கும் டயர் நடுவில் கோல் அடிப்பது என ஹுசைஃப் ஷா அடிக்கும் ஒவ்வொரு டிரிக் கோலும் சுவாரசியமானவை. சில டிரிக் கோல்களை அடிக்க 15 மணி நேரம்கூட பயிற்சி எடுத்திருப்பதாகச் சொல்கிறார். இவருடைய டிரிக் கோல் காணொலிக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெகு பிரபலம்.
ஹுசைஃப் ஷாவின் டிரிக் கோல்களை ரசிக்க: https://bit.ly/345EYI0