

வணக்கம் அம்மா. என் வயது 24. நான் பட்டப்படிப்பை முடித்து விட்டு, வேலை தேடி வருகிறேன். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் இருக்கும். ஒரு நாள் என் பக்கத்து வீட்டில் இருந்த அக்கா ஒருவர், அவரது வீட்டு மாடியில் காயப்போட்டிருந்த உள்ளாடைகளைத் திருடினேன். அவற்றை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த வயல்வெளியில் உள்ள பம்ப்செட் ரூமுக்குச் சென்று சுய இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று அந்த வயலின் உரிமையாளர் வந்துவிட்டார். நான் ஏதோ திருட வந்திருப்பதாக நினைத்து என்னை அடிக்கப் பாய்ந்தார். அவரின் பிடியிலிருந்து எப்படியோ தப்பி வந்துவிட்டேன்.
இதனால் கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு திடீர் திடீர் என்று பயம் ஏற்படுகிறது. எங்கே அவர் எனது நடத்தையைப் பற்றி அருகில் உள்ளவர்களுக்குச் சொல்லியிருப்பாரோ என்று சந்தேகப்படுகிறேன். அதன் காரணமாக எனக்கு அடிக்கடி நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது. இந்தச் செயலை நினைத்து நான் அவமானப்படுகிறேன். எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்று சில சமயம் தோன்றும். ஆனால், நான் பல சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நினைவில் இருந்து மீள எனக்கு ஒரு வழி சொல்லுமாறு கெஞ்சிக் கேட்கிறேன்.
நண்பரே, நீங்கள் எதையோ திருட வந்ததாக அந்த விவசாயி நினைத்து அடிக்க வந்திருக்கிறார். காணக்கூடாத காட்சி எதையும் அவர் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. ஊரில் உள்ளவர்களிடம் எதையும் சொல்ல வாய்ப்பில்லை. சொல்லி இருந்தாலும் முகம் தெரியாத யாரோ உங்களைப் பற்றித் தப்பாக நினைப்பதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? 'ரிலாக்ஸ் ப்ளீஸ்'.
ஆண்களுக்கு ஒரு பெண்ணின் 'ஃபிகரை'ப் பார்ப்பதும், அவளது உள்ளாடைகளைப் பார்க்கையில் ஒரு கிளர்ச்சி வருவதும் இயற்கையே! ஆனால் ஒரு பெண்ணின் உள்ளாடையைத் தொடுவதால் ஏற்படும் கிளர்ச்சியினால் சுய இன்பம் வரை உந்தப்படும் நிகழ்வு இயற்கயிலிருந்து பிழன்ற ஒன்றாகும்.
இது தொடர்ந்து நடந்தால் பாலுணர்வின் உச்சத்தை அடைய ஒரு பெண் தேவையில்லை, அவள் உபயோகப்படுத்தும் பொருட்கள்தான் வேண்டும் என்ற நிலை ஏற்படும். இதனால் பாலின்ப வாழ்க்கை பாதிக்கப்படும். மேலே சொல்லப்பட்ட சம்பவம் ஒரு முறைதான் நடந்ததாகத் தெரிகிறது. அதோடு முற்றுப்புள்ளி வைக்க முடிந்துவிட்டால், ஒரு பிரச்சினையும் இல்லை.
மேலும் தொடர்ந்தால் 'ஃபீடிஷிஸம் (Fetishism) எனும் பாலியலில் பிழன்ற ஒரு நடத்தையாக (Sexually deviated behaviour) கருதப்படும். தொடர்ந்து ஆறு மாதங்கள் இந்த எண்ணங்கள் அலைக்கழித்தால், உடனே மன நல மருத்துவரை நாடவும்.
வேலை இல்லாமல் வெட்டிப் பொழுதாக நேரம் செல்வதால், வேண்டாத எண்ணங்கள் வருகின்றன. வாலிபம் பாலின உணர்வுகளைப் பரிசோதிக்கும் வயது. குற்ற உணர்வும் அவமான உணர்வும் தேவையில்லை. இது தொடராமல் இருக்க ஆக்கபூர்வமான செயல்களில் மனதைச் செலுத்தவும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நீங்கள் எந்த இக்கட்டிலும் இல்லை. உயர்ந்த இலக்கை அடைய, உயர்ந்த சிந்தனைகள் வேண்டும்.
எனக்கு வயது 18. என் வீட்டுக்கு நான் ஒரே பெண். நான் தற்போது கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி பெரிய விஷயங்களை எல்லாம் சாதிக்க வேண்டும் என்று ஆவல் உண்டு. இந்த நிலையில் எனக்கு சமீபகாலமாக மனதில் ஒரு சலனம் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் காதல். நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் என்னுடைய தோழிகள் பலர் காதலித்துக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி வகுப்பை ‘கட்' அடித்துவிட்டு, சினிமா, ஷாப்பிங் என்று செல்கிறார்கள்.
அப்போதெல்லாம் அவர்களைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாகவும், நமக்கு இப்படியெல்லாம் நடக்கவில்லையே என்று வருத்தமாகவும் இருக்கும். எனக்குக் காதலன் இல்லை என்பதால் தோழிகள் என்னை அவ்வப்போது கிண்டல் செய்கின்றனர். எனக்கும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய லட்சியமே சாதி, மத வேறுபாடுகள் கடந்து கலப்புத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான். அதற்கு ஒரே வழி காதல் திருமணம்தான் என்கிறார்கள் என் தோழிகள். ஆனால் பின் விளைவுகளை யோசிக்கும்போது எனக்குப் பயமாக இருக்கிறது. இதனால் எனது கல்வி, மற்றும் ஐ.ஏ.எஸ்., லட்சியம் இதெல்லாம் பாழாகுமோ என்று கவலைப்படுகிறேன்.
‘நான் காதலிக்க மாட்டேன்' என்று இரண்டு நாட்கள் என் மனதைக் கட்டுப்படுத்தி வைப்பேன். ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் காதல் பற்றிய எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்துவிடுகின்றன. என் மனம் அலைபாயாமல் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா?
இளம் பெண்ணே, மெகா கனவுகளையும், மனதின் ஏக்கத்தையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறீர்கள். ‘பதினெட்டு வயதில் என்ன பிடிக்கும்? பைத்தியத்தைத் தவிர என்ன பிடிக்கும்?' காதலைப் பற்றிய இந்த திரைப்பட பாடலின் கருத்து உண்மையே!
உங்கள் உலகில் உள்ளவர்கள் காதலித்துத் திரியும்போது, உங்களுக்கு ஏன் அது அமையவில்லை என்ற கேள்வி உங்களைக் குடைகிறது. இதுவரை வலையில் சிக்காமல் தப்பித்தது ஆச்சரியமே! பதின்ம வயதில் மூளையை சுனாமி அலைபோலத் தாக்கும் வேதியல் பொருட்கள் காதல் எனும் போதையை ஏற்படுத்துகின்றன. போதை சில காலம் தான். ஆனால் அது கொடுக்கும் கிறக்கத்தில் பலரும் வழி மாறிப் போய்விடுகின்றனர்.
குறிக்கோளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, காதலில் சிக்கிக் கொண்டுவிடுகிறார்கள். நீங்கள் இன்று அவர்களைப் பார்த்துப் பொறாமைப் படலாம். நாளை சக்கரம் மாறும். பொறாமைப்படுவது அவர்களாகத்தான் இருக்கும். ஏனெனில் தோழிகள் இன்றைய சந்தோஷத்தை பார்க்கிறார்கள். நீங்கள் நாளைய மகிழ்ச்சியை எண்ணி செயல்படுகிறீர்கள். பெருமிதத்தோடு நிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் கட்டுப்பாடான மனதை எண்ணி!
காதலிக்கும் காலம் வரும். அப்போது செய்வதற்காக அதை இப்போது விட்டு வையுங்கள். ஒரு ரகசியத்தைச் சொல்லட்டுமா? இன்று வரை உங்களைக் கவரும் மன்மதன் நேருக்கு நேர் வரவில்லை. அவன் அம்பு எய்யும் போதுதான் இருக்கிறது உங்களுக்குச் சோதனை. பயமுறுத்தவில்லை. எச்சரிக்கிறேன்!
உண்மையான காதலும், காதலனும் காத்திருப்பார்கள், உங்கள் குறிக்கோளை நீங்கள் அடையும் வரை.
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in