

உடல்நலம் குன்றிய, நடக்க இயலாத ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதிசெய்வதற்கான நேர்காணலுக்கு செல்லாமல் மாற்றுவழியில் ஆவணங் களை சமர்ப்பிப்பது குறித்து நேற்று பார்த்தோம். அதற்காக சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள், இதர விவரங்கள் குறித்து விரிவாகச் சொல்கிறார் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கொ.சி.கருப்பன்.
‘‘எங்கள் சங்கம் 28 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எங்கள் சங்கம் மூலம் பல்வேறு உதவிகள் செய்து தரப்படுகிறது. குறிப்பாக நேர்காணலுக்கு (மஸ்டரிங்) செல்ல முடியாதவர்களுக்கு உதவி செய்கிறோம். நேர்காணலில் பங்கேற்க முடியாத அளவுக்கு உள்ள ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை (லைஃப் சர்ட்டிபிகேட்) சம்பந்தப்பட்ட கருவூலத்தில் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் 28 மாவட்டங்களிலும் உள்ள எங்கள் சங்கத்தில் உள்ளன. ஓய்வூதியதாரர்களுக்கு அதை இலவசமாக வழங்குவதுடன், பூர்த்தி செய்தும், யாரிடம் சான்றொப்பம் (அட்டஸ்ட்) வாங்க வேண்டும் எனவும், வழிகாட்டுகிறோம். அந்த சான்றிதழை ஓய்வூதியதாரரின் உறவினர்கள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள், ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து, நேர்காணலுக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய அம்சங்களைப் பார்ப் போம். கருவூலங்களில் நடைபெறும் நேர்காண லில் கலந்துகொள்ளச் செல்லும் ஓய்வூதிய தாரர்கள் நிறைய விஷயங்களை மறந்துவிட்டுச் செல்கிறார்கள். நேர்காணலுக்குச் செல்லும் போது ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகம் (பி.பி.ஓ.), வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். குடும்ப ஓய்வூதியதாரர்கள் இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய சான்றிதழ்களை கொண்டுசெல்ல வேண்டும். ‘இணைப்பு 2’ மீண்டும் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதைக் குறிப்பது. ‘இணைப்பு 3’ எந்த வேலையும் செய்யவில்லை என்பது குறித்த சான்றிதழ். இவை குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் கொண்டுசெல்ல வேண்டியவை. இந்த சான்றிதழுக்கான விண்ணப்பங்களும் எங்களது சங்க அலுவலகத்தில் நகல் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதையும் இலவசமாக வழங்குகிறோம்.
இரண்டு விதமான ஓய்வூதிய முறைகள் உள்ளன. ஒன்று, கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் பைலட் திட்டம். மற்றொன்று வங்கி மூலம் (பப்ளிக் செக்டார் பேங்கிங் ஸ்கீம்) ஓய்வூதியம் பெறும் திட்டம். வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நேர்காணல் நடைபெறும். அந்த நேர்காணலுக்குச் செல்ல முடியாதவர்களும் வாழ்நாள் சான்றிதழை தங்களைச் சார்ந்தோர் மூலம் வழங்கலாம்.