

கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர்கள் என்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபா இருவரைத் தேர்வுசெய்தது. சந்தேகத்துக்கு இடமில்லாத அந்த இரண்டு ஜாம்பவான்கள் பிரேசிலின் பீலேவும் அர்ஜென்டினாவின் டியகோ மரடோனாவும். ஏழைக் குடும்பத்தில் பிறந்து உலகக் கால்பந்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று உயர்ந்தவர் மரடோனா.
நூற்றாண்டின் ‘கோல்’
நான்கு உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் மரடோனா விளையாடியுள்ளார். 1986 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு மரடோனா தலைமைவகித்தார். அந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது.தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மரடோனா பெற்றார்.
அந்தப் போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட 200 அடிக்கு 5 இங்கிலாந்து கால்பந்து வீரர்களைத் தாண்டி ஒற்றையாளாகப் பந்தை எடுத்துச் சென்று கோல் அடித்தார் மரடோனா. அந்த கோல் கடந்த நூற்றாண்டின் சிறந்த கோலாகக் கருதப்படுகிறது. அதே போட்டியில் நடுவர் பார்க்கத் தவறிய நிலையில், மரடோனாவின் கையில் பட்டுச் சென்ற பந்து முன்னதாக கோல் ஆகியிருந்தது.
தங்க மகன்
கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை அதிக உயரமில்லாமலே (5.5 அடி) சாதித்தவர் மரடோனா. அந்த உயரக் குறைவே மற்ற கால்பந்து வீரர்களைவிட எளிதாக எதிராளிகளைக் கடந்து பந்தை எடுத்துச்செல்லும் திறனை அவருக்குத் தந்தது எனலாம். கால்பந்து விளையாட்டு குறித்த பார்வை, பந்தைக் கடத்தும் திறன், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன், பந்தை எடுத்துச்செல்லும் திறன் போன்றவை மிகுந்திருந்த வீரர் அவர்.
அர்ஜென்டினா அணியில் அவர் இடம்பெற்றதும் தலைமை வகித்ததும் அணிக்கு உத்வேகம் தந்தது என்றால், எதிரணிகளோ அவரைத் தனிமைப்படுத்தி, அவரைக் கட்டுப்படுத்துவதிலேயே குறியாக இருந்தன. கால்பந்தில் ஃபிரீ கிக்கை கோலாக்குவது எளிதில் கைவராத கலை. அதில் நிபுணத்துவம் பெற்றவராக மரடோனா இருந்தார். அதன் காரணமாகத் ‘தங்க மகன்’ என்கிற பட்டத்தையும் பெற்றிருந்தார்.
சூழ்ந்த சர்ச்சை
மரடோனாவைப் போலவே அவருடைய ஜெர்சி எண்ணும் புகழ்பெற்றது. ஸ்பானிய மொழியில் ‘எல் டீஸ்’ (எண் 10) என்ற அடைமொழி அவருக்கு உண்டு. அர்ஜென்டின புரட்சியாளரான சேகுவேரா, கியூபப் புரட்சியாளரான ஃபிடெல் காஸ்ட்ரோ ஆகியோரின் உருவங்களை மரடோனா தன் உடலில் பச்சை குத்தியிருந்தார். பிடெல் காஸ்ட்ரோ, பொலிவிய இடதுசாரித் தலைவர் ஹியூகோ சாவேஸ் போன்றோருடன் நேரடித் தொடர்பிலும் இருந்தார்.
கால்பந்து ஆட்டத்தில் பெரும்புகழ்பெற்றிருந்த அதேநேரம், சர்ச்சைகளிலும் அதிகம் சிக்கியவர் மரடோனா. 1991, 1994ஆம் ஆண்டுகளில் போதைப் பொருள் பயன்பாட்டால் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டார். பிற்காலத்தில் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளாலும் பாதிக்கப்பட்டார். மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கடந்த வாரம் மாரடைப்பால் காலமானார். கால்பந்து உலகின் விறுவிறுப்பான கால்களைப் பெற்றிருந்த கால்பந்துக் கடவுள் இயற்கையுடன் ஒன்றறக் கலந்துவிட்டார்.