

பிரிட்டன் மன்னராக ஐந்தாம் ஜார்ஜ் 1911-ல் பதவியேற்றதற்கான பாராட்டு விழா மற்றும் இந்தியாவின் தலைநகராக டெல்லி அறிவிக்கப்பட்டபோது டெல்லி தர்பாரில் இடம்பெற்ற அறைக் கலன்களைத் தயாரித்த நிறுவனம் எது தெரியுமா? சென்னையில் உள்ள ரென் பென்னட் கடையினுடையது. இந்தக் கடை இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருப்பது நிச்சயம் சாதாரணமாகக் கடந்துபோய்விடும் செய்தி அல்ல.
கலைநயமிக்க மரச் சாமான்களை வாங்குவதற்கு சென்னையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த கடைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட ஒரு கடைதான், சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் இயங்கும் ரென் பென்னட் மரச்சாமான் கடை.
பழமைக்கு உதாரணம் 16
ஏறக்குறைய 120 ஆண்டுகள் பழமையான இந்த கடையின் கலைநயமிக்க நாற்காலிகள், மேசைகள், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தவர்களின் வீடுகளையும் சாமானியர்களின் வீடுகளையும் ஒரே நேரத்தில் அலங்கரித் திருக்கின்றன.
பழைய மெட்ராஸில் ரென் பென்னட் கடையின் தொலைபேசி எண் 16. சென்னையில் தொலைபேசி துறை வழங்கிய 16-வது தொலைபேசி இணைப்பு ரென் பென்னட் கடைக்குத்தான் என்பதிலிருந்தே, இதன் பழையைப் புரிந்துகொள்ளலாம்.
8 அணா கடை
ரென் பென்னட்டில் உருவான நாற்காலிகள், மேசைகள் போன்றவை திருவனந்தபுரம், கொச்சி போன்ற பல சமஸ்தானங்களின் அரசவைகளை அலங்கரித்துள்ளன.
1889-ல் ரென் பென்னட் ஒரு பல்பொருள் அங்காடியாகத் தொடங்கப்பட்டது. மது பானங்கள், உணவுப் பொருட்களைத் தவிர வீட்டுக்குத் தேவைப்படும் எல்லா பொருட்களுமே அங்கு விற்பனை செய்யப்பட்டன. ஆணி முதல் சோபா, கட்டில் என பல பொருட்களை விற்பனை செய்தாலும்கூட, அங்கு விற்கப்பட்ட பல பொருட்களின் விலை 8 அணாவாகவே இருந்தது. இதன் காரணமாகவே அன்றைக்கு மக்களிடையே செல்வாக்கு பெற்ற கடையாக இது இருந்திருக்கிறது.
அன்றைக்கு ரென் பென்னட் கடையை `8 அணா கடை’ என்றே மக்கள் செல்லமாக அழைத்தார்கள்! பெங்களூரு, ஊட்டியிலும் இதன் கிளைகள் இருந்திருக்கின்றன. பின்னாளில் இந்தக் கடை தானியங்கித் கதவுகளுக்கு பேர் சொல்லும் கடையாகப் புகழ்பெற்றது.
மக்கள் பங்கு
இந்தக் கடை 1938-ல் 2,652 ரூபாய்க்கு, தற்போது அதை நடத்திவரும் குடும்பத்தினரால் வாங்கப்பட்டிருக்கிறது. 1945 முதல் 1970 வரை ஏலத் தொழிலும், மரச் சாமான் தயாரிப்பும் நடந்தன. 70-க்குப் பிறகு கமிஷன் அடிப்படையில் தேக்கு போன்ற உயர்ந்த ரக மரத்தினாலான பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர். தற்போது ரென் பென்னட் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.