

யூடியூபில் அதிகம் பார்க்கப்படுபவையாகச் சொல்லப்படுபவை நகைச்சுவை சார்ந்தவை. அதனால், நக்கல், பிராங்க், வெப்சீரிஸ் இப்படிப் பல வழிகளில் யூடியூபில் நகைச்சுவை கொட்டிக் கிடக்கிறது. இதிலிருந்து தனித்துச் செயல்படும் இளைஞர்களும் உண்டு. அதில் பிரபலமான ஒன்றுதான் துப்பறியும் வீடியோக்கள். த்ரில்லர் படங்களுக்கு இன்றைக்கு மவுசு கூடியிருப்பதைப் போல் இம்மாதிரியான வீடியோக்களுக்கும் பார்வையாளர்கள் அதிகம். அதன் காரணமாகவே பல யூடியூப் அலைவரிசைகளில் இளைஞர்கள் துப்புத் துலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலக அளவில் பிரபலமான கொலை, கொள்ளை வழக்குகளைத் தங்கள் பாணியில் விசாரிக்கிறார்கள் இந்த யூடியூப் இளைஞர்கள். நடந்து முடிந்த வழக்குகள் என்றாலும் தங்கள் பாணியில் ஜேம்ஸ்பாண்டைப் போல் பல கோணங்களில் துப்புத் துலக்குகிறார்கள். இவர்களில் ரிஷிபீடியா அலைவரிசை பிரத்யேகமான அமானுஷ்யமாக நடந்த நிகழ்ச்சிகளைப் பெரும் ஈடுபாட்டுடன் விவரிக்கிறது. பேய் மீதான நம்பிக்கைளைப் பொழுதுபோக்காக மாற்றிப் பார்வையாளர்களுக்குத் தருகிறது இந்த அலைவரிசை.
விதவிதமான மர்மங்கள்
ஃபோட்டோபாம் (Photobomb) குறித்த ரிஷிபீடியாவின் வீடியோ இதற்கு உதாரணம். இருவர் ஒளிப்படம் எடுக்கும்போது யதேச்சையாக மூன்றாம் நபர் ஒருவர் அந்த ஒளிப்படத்துக்குள் வருவதுதான் ஃபோட்டோபாம். இதுபோல் அமானுஷ்யமான ஃபோட்டோபாம்களின் தொகுப்பாக அந்த வீடியோ இருக்கும். இது அல்லாமல், உலகின் முட்டாள்தனமான திருட்டுகள், விநோதமான வழக்குகள் குறித்து ரிஷிபீடியா தொடர்ந்து பதிவிட்டுவருகிறது. தமிழின் முன்னணி யூடியூப் அலைவரிசைகளில் ஒன்றான இதற்கு, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர்.
இதுபோல் இன்னொரு முன்னணி யூடியூப் அலைவரிசை ‘மினிஸ்ட் மிஸ்டரி’. பெயரிலேயே தங்கள் அலைவரிசையை அறிவித்துக்கொண்ட இவர்கள், அதிகம் கவனம் செலுத்துவது பிரபலமான விமான விபத்துகள், கொலை, கொள்ளை வழக்குகளில்தாம். இவர்கள் தங்கள் வீடியோக்களை கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்குகிறார்கள். சகோதரர்கள் இருவர் இணைந்து விவரிக்கும் வீடியோக்களில் சம்பவத்தை கிராபிக்ஸ் துணையுடன் மறு உருவாக்கம் செய்வதன் மூலம் பார்வையாளர்களுக்குச் சுவாரசியம் தருகிறார்கள்.
அந்தரத்தில் நடந்த கதை
எடுத்துக்காட்டாக, 47,000 அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்த சாகச மனிதரின் கதையை இவர்கள் விவரித்த விதமும் பயன்படுத்திய கிராபிக்ஸும் அந்தச் சம்பவத்தை இன்னும் சுவாரசியமாக்கின. 47,000 அடி உயரத்திலிருந்து குதிக்கும்போது கீழே பெரும் புயலும் இடியும் மழையுமாக இருந்திருக்கிறது. 10,000 அடியில் விரிய வேண்டிய அவரது பாராசூட் அதற்கு முன்பே விரிந்து புயலில் சிக்கிக் கிழிந்தும் போய்விட்டது. இப்படிப் படிப்படியாக ஒரு சினிமாக் காட்சியைப் போல் இதை விவரித்துச் செல்கிறார்கள். அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த விமானி வில்லியம் ரான்கினின் சாகசம்தான் இது. இந்த அனுபவத்தை ‘The Man Who Rode the Thunder’ என்னும் பெயரில் அவர் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இதைப் பற்றிய தகவல்களும் அந்த வீடியோவில் உண்டு.
இவர்கள் அல்லாமல் பிரீஃப்கேஸ், டாப் 5 தமிழ், பேப்பர் கப் போன்ற சில வளர்ந்துவரும் அலைவரிசைகளும் இப்போது துப்புத் துலக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மாதிரியான வழக்குகளை ஆராய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தின் பிரபலமான வழக்குகளான ஆளவந்தார் கொலை வழக்கு, இந்திய அளவில் பிரபலமான ஆருஷி கொலை வழக்கு போன்ற வழக்குகளைப் பெரும்பாலும் எல்லாத் துப்பறியும் அலைவரிசைகளும் கையில் எடுத்திருக்கின்றன.
மர்மக் குகை
அது மட்டுமல்லாமல் வங்கிக் கொள்ளை வழக்குகள், கொலை வழக்குகள் என ஏறக்குறைய எல்லோரும் ஒரே வழக்கை எடுத்து விவரிக்கிறார்கள். மதன்கெளரியும் தொடக்கத்தில் இம்மாதிரி வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். சில நேரம் சுவாரசியத்துக்காகச் சரியாக ஆராயாமல் சில வீடியோக்களையும் இவர்கள் வெளியிட்டுவிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, இத்தாலியில் ஸானெட்டி ரயில் (zanetti train) 104 பயணிகளுடன் மர்மமாக ஒரு குகைக்குள் காணாமல் மறைந்துவிட்டதாக ஒரு செய்தி.
இதைத் துப்புத் துலக்கி எல்லா யூடியூப் அலைவரிசைகளும் வெளியிட்டிருக்கின்றன. அது கருந்துளைக்குள் மறைந்துவிட்டது என்றும் அது காலவெளிக்குள் பின்னால் சென்றுவிட்டது என்றும் பலவிதங்களில் இதை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய சம்பவத்தைப் பற்றி இதுவரை எந்தப் பத்திரிகைச் செய்தியும் வெளிவரவில்லை. ஆதாரக் குறிப்பும் இல்லை. சுவாரசியத்துக்காகப் பொய் சொல்லலாம். ஆனால், பொய்யை உண்மை என்று சொல்லக் கூடாது இல்லையா?