

ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் தற்போது தாங்கள் உயிருடன்தான் இருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலகங்களில் நேரில் ஆஜராகி உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில் வயதான பெண்மணி ஒருவர் இதுதொடர்பாக நமது அலுவலகத்துக்குப் பேசினார். “கடந்த பல ஆண்டுகளாக வேலூரில் ஓய்வூதியம் பெற்றுவந்தேன். மிகவும் வயதாகிவிட்டதால் சென்னையில் இருக்கும் மகள் வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என்னால் நடக்க முடியாது. பார்வைக் குறைபாடும் உள்ளது. உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக வேலூர் சென்றுவரும் நிலையில் நான் இப்போது இல்லை. இதற்கு மாற்றுவழி இருக்கிறதா?” என்றார்.
ஓய்வூதியர்கள் பலருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் இது. அவராவது பரவா யில்லை, வேலூர் - சென்னை. இதைவிட அதிக தொலைவில், வெளி மாநிலங்க ளில் தங்கள் உறவினர் களிடம் அடைக்கலமானவர்கள் தள்ளாத வயதில் மணிக்கணக்கில், நாள்கணக்கில் பயணித்து இதற்காக சொந்த ஊருக்கு வர முடியுமா? எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன. இதற்கு தீர்வுதான் என்ன? இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தியிடம் கேட்டோம்.
“மாவட்ட கருவூலம் மூலம் ஓய்வூதிய தாரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் முறையாகக் கிடைக்கிறதா, அவர்கள் உயிருடன் உள்ளனரா என்பதை உறுதிசெய்ய ஆண்டுதோறும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள வருவாய்த் துறை அலுவலகங்களில் மார்ச் தொடங்கி ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது.
இதில் அவர்கள் உயிருடன் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும். ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர் முதல் கடைநிலை ஊழியர் மற்றும் அவர்களது குடும்ப ஓய்வூதியதாரர்கள்வரை இது பொருந்தும்.
சில சமயங்களில் வயதான பெற்றோரை வாரிசுகள் புறக்கணிக்கின்றனர். இவர்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளனர். சிலரது வாரிசுளின் பணிச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஓய்வூதியம் பெறுவோர் சொந்த ஊரில் இருக்க முடிவதில்லை.
இவர்களில் நடக்க முடியாத, உடல்நலம் மோசமாக இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு விதிவிலக்கு உண்டு. வங்கி மேலாளர்கள், தாசில்தார், மண்டல துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஓய்வூதியரைச் சார்ந்தோர் கையொப்பம் பெற்றுச் சென்று கருவூல அதிகாரிகளிடம் வழங்கி, தாங்கள் இருப்பதை உறுதிசெய்து ஓய்வூதியம் பெறலாம். நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை’’என்றார்.