

வீட்டை விதவிதமாக அலங்கரிப்பதில் நமக்கு அலாதிப் பிரியம் உண்டு. வீட்டின் அறைக்கலன்களைப் பார்த்து பார்த்து வாங்கிப் போடுகிறோம். அதைப் போல வீட்டில் படுக்கை விரிப்புகள் விஷயத்தில் நாம் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ளவதும் அவசியம்.
வண்ணமயமான படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எளிதில் கவர்ந்துவிடும். விதவிதமான ஓவியங்களும் நிறங்களும் கொண்ட தலையணைகளும் படுக்கைவிரிப்புகளும் சிறு குழந்தைகளையும் முதியவர்களையும் வசீகரிக்கக்கூடியவை.
அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தலையணை உறைகளும் படுக்கை விரிப்புகளும் படுக்கையில் நேர்த்தியாக இடம்பெற்றிருந்தால் ஓய்வுக்காகப் படுக்கையில் சாய்வதே சுகமான அனுபவமாக மாறும். படுக்கை விரிப்புகள் நமது தட்பவெப்ப நிலைக்கு உகந்த வகையில் அமைந்திருக்க வேண்டும்.
படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் அவற்றின் உறைகளும் எப்போதும் சுத்தமான நிலையில் பராமரிக்கப்படுவது நமது ஆரோக்கியத்தைப் பேணக்கூடியது. தலையணை உறையிலோ நாம் போர்த்தும் போர்வையிலோ அழுக்குப் படிந்து அசுத்தமாக இருப்பின் அது சுகாதாரச் சீர்கேடு மட்டுமல்ல நமது மன ஆரோக்கியமே பாழ்படும். எனவே சுணக்கமின்றி எப்போதும் அவற்றைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். படுக்கை விரிப்புகளும் தலையணை உறைகளும் மாற்றப்படுவதற்கு ஏற்ற வகையில் எப்போதும் சுத்தமாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.